top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை – 2

Updated: Nov 30, 2021



எல்லோரும் பிறக்கும்போதே எல்லா செல்வங்களையும், வாய்ப்புக்களையும் பெற்றுக்கொண்டு வருவதில்லை. எல்லோருமே அம்பானியின் வீட்டுப் பிள்ளைகளாய் பிறக்க முடியாதல்லவா !!


ஏழை விவசாயிக்கும், செருப்பு தைக்கும் தொழிலாளிக்கும் பிள்ளைகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.


வெற்றியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்


இந்த சாதாரண பொதுமக்களினின்று ஒருவராய் வந்தவர்கள்தானே அபிரகாம் லிங்கனும், அப்துல் கலாமும். அவர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் இருக்கவில்லை. இராஜா வீட்டுப் பிள்ளைகளாய் அவர்கள் பணி துவங்கவில்லை. ஒரு சாதாரண அடிப்படை நிலை ஊழியனாகவே தங்களின் வாழ்க்கைப் பாதையை துவக்கினார்கள். கிடைத்த கல்விச் செல்வத்தை செவ்வனே பயன்படுத்தினார்கள். தங்களின் விடா முயற்சியையும், கடின உழைப்பையும், தொடர்ந்து பெறும் நூலறிவையும், அனுபவ அறிவையும் கொண்டு இலட்சியங்களை எட்டிப் பிடித்தனர்.


பிறக்கும் போதே அதீததிறமை அவசியமா ?


இலட்சத்தில் ஒருவருக்கு பிறவி ஞானம் கைகூடும். மற்றவர்கள் எல்லோருமே நம்மைப்போல சாதாரணமானவர்களே. உங்களிடம் தனிப்பட்ட திறமை இல்லாது போனாலும், ஒரு குறிப்பிட்ட துறையில் தொடர்ந்த பயிற்சி உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.


கவனமாக பயிற்சிகளை மேம்படுத்துங்கள். நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு சதவிகித (1%) மேம்பாட்டை குறிவையுங்கள். கூட்டுத் தொகையில் உங்களின் வளர்ச்சி அளப்பரியதாய் இருக்கும்.


பூஐ்ஜியம் முதல் நூறு வரை!


எல்லோருமே, துவக்கத்தில் பூஜ்ஜியத்தில் இருந்தே துவங்கினர். அது சச்சின் டென்டுல்கரானாலும், சாருக்கான் ஆனாலும் சரி. ஒவ்வொருவரின் வாழ்க்கைப்பாதையும் ஒரு பெரிய அனுபவ சரிதை. பல அரும்பெரும் வெற்றியாளர்களின் சுயசரிதையை, பலரும் வெறும் கதையென படித்துக் கடந்து போய்விடுகின்றனர். அவைகள் வெறும் கதைகளல்ல. அவர்களின் ஒருமுகப்பட்ட உழைப்பினால் அடைந்த வெற்றியின் உண்மையான உதாரணங்கள்.


உங்களுக்கு உகந்த துறை என்ன?


நம் ஊரின் எம்.ஜி.ஆரும், கலைஞரும், மோடியும் அடைந்திடாத உயரமா? இவர்கள் யாரும் இராஜா வீட்டுக் கன்றுக்குட்டிகள் இல்லை. தங்களுக்கென்று தனிப்பட்ட திறமைகளோடு பிறக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு ஆர்வமிருந்த துறையை தேர்வு செய்து தொடர்ந்து உழைத்தார்கள். இன்று நமக்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டாய் அவர்கள் வாழ்க்கை மாறியுள்ளது.


அவரவர்கள் துறையில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம் அவர்களை அதில் மிகச் சிறந்த வல்லுநர்களாக்குகிறது. ஒரு செயலின் மீதான ஆர்வம்தான் அதன் துவக்கப்புள்ளி. உங்களுக்கு வெற்றியாளராக ஆசை இருந்தால் உங்களுக்கு ஆர்வமுள்ள துறை என்னவென்று தேர்வு செய்யுங்கள். அந்தத் துறையில் நீங்கள் இன்றைக்கு பூஜ்ஜியமாக கூட இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் முழுவதுமாய் கற்றுக்கொள்ள முடியும்.


காலில்லாமல் எவரெஸ்ட் கனவா?


தன் ஒரு காலினை இழந்தபின் மழை பயிற்சியை துவக்கி எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட நம்ம ஊர் பெண்ணைக்காட்டிலும் வேறென்ன சிறந்த உதாரணம் இருக்கமுடியும். இந்த சாதணையாளர்கள் நம் நம்பிக்கையின் அடையாளங்கள், விடாமுயற்சிக்கு அவர்களே மிகச்சிறந்த உதாரணங்கள்


உதாரணங்கள் உணர வைக்கத்தான்


இப்படி எண்ணற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறிக் கொண்டே போகலாம். அவர்களின் வரலாறுகள் வெறும் கதையல்ல. வெற்றியென்பது விடாமுயற்சி, தொடர் பயிற்சியின் விளைவுகள் என்பதற்கான சிறந்த உதாரணங்கள். எல்லா வெற்றியாளர்களுக்கும் உள்ள பொதுவான விஷயமே, அவர்களின் தொடர்ந்த பயிற்சியும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் தான்,

இந்த உதாரணங்கள் எல்லாம், உங்களை உணர வைக்கத்தான்.


இன்றே ! இன்னே ! இக்கணமே


உங்கள் துறையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எந்த இடத்தை அடைய விரும்புகிறீர்கள் என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள். அடைய விரும்பும் உயரம் எவ்வளவு தூரமானாலும் பரவாயில்லை, இக்கணமே துவங்குங்கள்.


"நீங்கள் செய்ய விரும்பியதை உடனே துவக்கி விடுங்கள்.

காலம் தாழ்த்தினால் நேரம் போவது தெரியாது.

காலன் வந்து கதவைத் தட்டும் போது நேரம் கேட்க முடியாது."


"சிந்தனைகளைக் கூட்டுங்கள்.

தொடர் வாசிப்பில் அறிவைப் பெருக்குங்கள்.

பிறர் அனுபவங்களில் கற்றுக்கொண்டு கூடாதவற்றை கழியுங்கள்,

செல்வத்தை சமுதாயத்திற்கும் வகுத்துக் கொடுத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்."


- [ம.சு.கு – 03-11-2021]



Comments


Post: Blog2 Post
bottom of page