top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : உங்களின் சிந்தனைகளை கவனியுங்கள்

உங்களின் எண்ணங்கள்

வார்த்தைகளாக உருவெடுத்து

செயலாக வடிவம் பெற்று

உங்களின் வழக்கமாக நிரந்தரமாகி

உங்களின் குணநலனாக வெளிப்பட்டு

உங்களின் வாழ்வை தீர்மானிக்கிறது;


இந்த எண்ணங்கள் தான் வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்ற கருத்தை எண்ணற்ற மேதைகள் பல்வேறு விதங்களில், வேறுபட்ட வாசகங்களில் காலங்காலமாய் சொல்லிவிட்டனர். அதை இங்கு உருமாற்றி சொல்வதில் பயனேதுமில்லை. ஆனால் அவற்றை உதாரணங்களோடு உங்களுக்கு உணர்த்த வேண்டுமென்றெண்ணி நான் இந்த கட்டுரையை எழுத துவக்கினேன்.


கவனச் சிதறல்கள்


நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தை மிகத் தீவிரமாக செய்து கொண்டிருக்கும்போது, உங்களைத் திசைதிருப்பும் வகையில் எவரேனும் ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். ஒன்று, அந்த தடையைப் பொருட்படுத்தாமல், மேற்கொண்டு செய்துகொண்டிருந்தவற்றை தொடர்ந்து செய்திருப்பீர்கள். அல்லது, சில சமயம் வேண்டாவெறுப்பாக, அவர்கள் சொன்ன விடயத்தை கேட்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பீர்கள்.


இப்படி செயல்களின் இடையில் வேறொருவர் குறிக்கிட்டு, வேறு விடயங்களை பற்றி கேட்டால், நாம் அவர்களுக்கு பதில் சொல்வதற்காக, அந்தத் தலைப்பின் பால் சிந்தனைகளை திரும்புகிறோம். அவர்கள் ஏற்படுத்திய திருப்பத்தை உணர்ந்து, நமது எண்ணம் சீக்கிரத்தில் செய்துகொண்டிருந்த காரியத்திற்கு திரும்பவருமா என்பதுதான் இங்கு பெரிய கேள்வி?


தேவையின்றி வளரும் சிந்தனைகள்


கேட்டவர்கள், தங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததும் சென்றுவிடுவார். ஆனால் நமது சிந்தனை அத்தோடு நின்றுவிடாது;


  • அவர் எதற்காக அந்தக் கேள்வியைக் கேட்டார்?

  • அதனால் அவருக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது?

  • அதில் நமக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டுவிடுமா?

  • அந்த காரியம் இலாபகரமானதாக இருப்பின், அந்த காரியத்தை நாமே ஏன் செய்து லாபம் ஈட்ட கூடாது?


இப்படியாக எண்ணற்ற எண்ண அலைகள் பலகோணங்களில் நம்முள் திசைபாய தொடங்கி விடும். ஒரு அரை மணி நேரம் கழித்து அப்போதைய சூழ்நிலைக்கு திரும்பும்போது தான், நேரம் வீணாகிவிட்டது நமக்குத் தெரிகிறது. இழந்த நேரத்தை திரும்பப் பெற முடியாது; ஆனால் அப்படி எதிர்காலத்தில் மேற்கொண்டு இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம் அல்லவா?


ஒரு சில சமயங்களில், இரவு உறக்கத்தின் இடையே திடீரென்று விழிப்பு வரும். அந்த திடீர் விழிப்பின்போது, அன்றைய தினம் செய்ய வேண்டிய - செய்யத் தவறிய காரியங்கள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரும். அந்தக் காரியத்தை பற்றி உறங்காமல் சிந்திக்கத் துவங்கினால், மறுநாள் செய்ய வேண்டிய செயல்கள்பால் உங்களின் சிந்தனைகள் உறக்கத்தை விட்டு உலவச் சென்றுவிடும். விளைவு, குறைவான உறக்கம் உங்கள் அடுத்தநாளின் செயலையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நேரம்-காலம் கடந்து திடீரென்று வரும் அப்போதைக்கு தேவையற்ற எண்ண அலைகளை கவனத்தோடு தவிர்த்திடுங்கள்.


‘சிந்திப்பது’ முக்கியம்தான் - அதேசமயம்

போதிய ‘உறக்கம்’ அதிமுக்கியம்;


சிந்தனைகள் ஆக்கப்பூர்வமாக


இப்படி ஒருபுறம், அந்தந்த காலநேரத்திற்கு தேவையற்ற சிந்தனைகள் உங்களின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அந்த சிந்தனைகள் உங்களை வழிதவறச் செய்துவிடாமல், நல்வழிப்படுத்துவதாக இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிமுக்கியம். ஏனெனில் எதைப் பற்றி நாம் அதீதமாக சிந்திக்கிறோமோ, அவை நம்முடைய அன்றாட செயல்களில் வெளிப்படுவது இயல்பு.


தீயவைகளை பற்றிய சிந்தனைகள், நம்மை எச்சரிப்பதற்காக மட்டுமே இருந்துவிட வேண்டும்; எக்காரணம் கொண்டும் அவை, நம்மை அந்த தீயவற்றை செய்யத் தூண்டும் வண்ணம் இருந்துவிடக்கூடாது.


மாந்திரீகம், மனிதன் தன் சிந்தனைகளாலும், மனித மனத்தின் ஆற்றலாலும் உலகின் நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறது. மாபெரும் யோகிகள், தம் எண்ணங்களின் தீவிரத்தால், உயிருள்ள & உயிரற்ற பொருட்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறுகிறது. அப்படி கட்டுப்படுத்துவது எந்த அளவு சாத்தியம்? யாரால் செய்ய முடியும்? என்ற விவாதத்திற்குள் நாம் போக வேண்டாம். ஆனால் ஹிப்னாடிசம், மனோவசியம் என்ற கலைகள் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நம் எண்ணங்களின் தீவிர ஆற்றலால், சூழ்நிலைகளையும் இயக்கத்தையும் சிலவகையில் மாற்றியமைக்க முடியும் என்கிறபோது, அதே எண்ணங்களின் தீவிரத்தன்மையினால், தீமைகள் நிகழ்த்தப்படும் அபாயமும் உள்ளதல்லவா? அப்படியானால் நாம் நம் எண்ணங்களின், தீமைகளைப் பற்றி அதிகம் யோசிப்பதே ஆபத்தானது தானே.


ஆம் சரியோ-தவறோ, தேவையோ-தேவையில்லையோ, தீயவை குறித்த சிந்தனையை கூடியமட்டும் விலக்கிவையுங்கள். உங்களின் எண்ணங்களை அது ஆக்கிரமிக்காத வண்ணம் நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.


எண்ணங்கள்தான் வாழ்வின் பிரதிபலிப்பு


நம்மைச் சுற்றிய நட்பும், உறவும், நம்மை பெரும்பாலும் வழி நடத்துவதும், கட்டுப்படுத்துவதுமாக இருப்பது போன்று, 24 மணி நேரமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் நம் எண்ணத்திற்கு, நம் மீது எந்த அளவிற்கு கட்டுப்பாடும் இருக்கும் என்பதை நீங்களே யோசியுங்கள்.


நாம் ஒரு செயலை செய்யும் போதும், பேசும்போதும் எத்தனைதான் ஜாக்கிரதையாக இருந்தாலும், திடீரென ஏற்படும் நிகழ்வுகளுக்கும், எதிர் கேள்விகளுக்கும் பதிலளிக்க முற்படும்போது, நம் எண்ணங்களின் உண்மை நிலை தானாக வெளிப்பட்டுவிடுகிறது.


பொய்யையும் போலித் தன்மையையும்;

வெகுகாலம் மறைத்து வைக்க முடியாது;

அது தானாக தெரிய நேரும்;


‘உங்களின் எண்ணங்கள் தான், உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு’ எனும்போது, நாம் அதை எந்த அளவு ஆக்கப்பூர்வமானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


சிந்தனைதான் நிபுணத்துவம்


நீங்கள் எந்த அளவிற்கு ஆழ்ந்து சிந்தித்து, ஒரு கருத்தை குறித்து ஆராய்ந்து தயாராக இருக்கிறார்களோ, அந்த விடயத்தில், அந்த அளவிற்கு நிபுணத்துவம் பெற முடியும். நிபுணத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட கலையை கற்பதிலும், பயிற்சிசெய்வதிலும் மட்டுமே முடிந்துவிடுவதில்லை; அது நம் சிந்தனையில் எந்த அளவிற்கு தொடர்ந்து அலசப்பட்டு, அடுத்தகட்ட புதுமைகள் உருவாக எப்படி வழிவகுக்கின்றன என்றவகையில் நமது நிபுணத்துவம் மெருகேற்றப்படுகிறது.


எல்லாப் கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் நமது எண்ணங்களில் உருப்பெற்று, பின்னர் சோதிக்கப்பட்டு பொருளாக உருவாகின்றன; இப்படி எல்லாமே ஆரம்பத்தில் நமது எண்ணங்கள், சிந்தனைகளிலிருந்து தோன்றுவதுதான் இயல்பெனும்போது, நாம் ஆக்கப்பூர்வமாக, புதுமைகளை தொடர்ந்து சிந்துத்துக்கொண்டிருக்க வேண்டியது மட்டுமே நமது பிரதான கடமையாகிறது.


‘சிந்தனைதான் மனிதனின் தனிப்பட்ட சொத்து

ஆக்கமும் அழிவும்

சிந்தையில் தொடங்கி

செயலாக முடிகிறது.


அசத்தியத்தையும் அழிவையும் நம்

சிந்தையில் ஒழிப்போம்

எண்ணங்களின் ஓட்டத்தை

கவனமாக வழிநடத்துவோம்;


எல்லாமே நம்மால்

கட்டுப்படுத்தக்கூடியதுதான்;

நாம் நினைத்தால்!

நாம் செயல்பட்டால்!


- [ம.சு.கு 15.06.2022]





Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page