“கருப்பு அன்னம்” [Black Swan]
“திடீர் ஆழிப்பேரலைகளால் கடற்கரை நகரங்களில் பெரும் சேதாரம்”
“உருஷ்யா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு”
கருப்பு அன்னம்
பல நூற்றாண்டுகளாய் அன்னப்பறவை வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும் என்று உலகம் நம்பியிருந்தது. ஆம், முதன்முதலாய் 17-ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் கருப்புநிற அன்னம் காணப்படும் வரையில்.
நாம் பல நூற்றாண்டுகளாய் கொண்டிருந்த அனுமானத்தில் பெரியமாற்றம். உண்மை யாதெனில், கருப்புநிற அன்னம் என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. இயற்கையிலேயே கருப்பு அன்னம் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது பொதுமக்கள் கண்களுக்குத் தென்படாமல் இருந்ததால், கருப்பு அன்னம் இல்லை என்றே உலகம் நம்பியிருந்தது மக்களின் முட்டாள்தனம்தானே! நடைமுறையில் வாழ்க்கையும் அப்படித்தான்!
நாம் கவனிப்பது குறைவு
அன்றாட வாழ்வில் நம் கடமைகளில் மூழ்கிவிடுவதால், நம்மைச் சுற்றி நடக்கின்ற எண்ணற்ற விடயங்களை நாம் கண்டுகொள்வதில்லை. நாம் அவற்றை கவனிப்பதில்லை என்பதற்காக அவை இல்லை என்றாகிவிடாது. உலகம் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உலகில் உள்ள எல்லா பொருட்களும் அதற்குரிய வேகத்தில் மாற்றமடைந்து கொண்டேதான் இருக்கும்.
நமக்கு தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்
நாம் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும்
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும்
உலகத்தின் இயக்கம் நிற்கப்போவதில்லை
உலகத்தில் மாற்றங்களும் நிற்கப்போவதில்லை;
யதார்த்தத்தில், நம் கண்களுக்குப் புலப்படுபவற்றைக் காட்டிலும், நம் கண்களுக்குப் புலப்படாதவைகள் தான் அதிகம். அப்படி நமக்குத் தெரியாதவைகள், நாம் கவனிக்கத் தவறியவைகள், நாம் நம்பாதவைகள் எது வேண்டுமானாலும் திடீரென்று நடக்கலாம். அந்த திடீர் நிகழ்வுகள் நமக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.
பல்வேறுபட்ட சாத்தியக்கூறுகள்
இந்த இழப்புகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டுமானால், அவற்றை முன்னரே நடப்பதற்கான ஒரு சாத்தியக்கூறாக கணக்கிட்டு அதற்கான அடுத்தகட்ட மாற்றுவழிகளை சிந்தித்திருந்தால், அந்த அவசரகால சூழலில் நம்மால் திரம்பட செயல்பட்டு இழப்புக்களை குறைத்து சமாளிக்க வாய்ப்பிருக்கிறது.
திடீரென்று அசம்பாவிதங்கள் / தவறுகள் நேரும் பட்சத்தில், அதன் விளைவுகள் என்னவாகக்கூடும் என்ற முன்கூட்டிய அனுமானங்கள் இல்லாமல் வாழ்க்கை பயணித்தால், எல்லா திடீர் திருப்பங்களும் நமக்கு அதிர்ச்சிகரமானதாகவே இருக்கும். சில சாத்தியக் கூறுகளை நாம் முன்னரே சிந்தித்திருந்தால், அதற்கான மாற்று வழிகளும் தானாகவே சிந்திக்கப் பட்டிருக்கும். வெவ்வேறுபட்ட சாத்தியக்கூறுகளைப் பற்றிய முன்கூட்டிய சிந்தனை இல்லாதபட்சத்தில், எல்லா அதிர்ச்சிகளையும், இழப்புக்களையும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.
வாகனப் பராமரிப்பும், விபத்துகளும்
நாம் பயன்படுத்துகின்ற வாகனம், என்றென்றைக்கும் பழுதடையாமல் போகும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தானே. ஆனால் அதை சரிவர பராமரித்து வந்தால், அந்த வாகனம் திடீரென்று நடுவழியில் பழுதடைந்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகிவிடுமல்லவா!
மறுபுறம், நன்றாகப் பராமரிக்கப்படும் விமானங்கள்கூட, கோடியில் ஒரு பயனத்தில் பழுதடைந்து விபத்தில் சிக்கத்தான் செய்கிறது. அப்படி நம் எல்லா கணிப்புகளையும் மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கு, விபத்துக் காப்பீடுகள் உள்ளன.
இப்படி சாதாரண ஜடப்பொருளான ஒரு வாகன விடயத்தில் மட்டுமே, இன்னது நடக்கும், இன்னது நடக்காது என்று உறுதிபட சொல்லமுடியாத நிலையிருக்கும்போது, உயிருள்ள மனிதர்களுடனான வாழ்க்கைப் பயனத்தில் எத்தனை திடீர் திருப்பங்களும், தலைகீழ் மாற்றங்களும் நிகழக்கூடும் என்பதை சற்றே யோசித்துப்பாருங்கள்.
இருந்திருக்கும் – ஆனால் இன்றில்லை
சில சமயங்களில் நண்பர்களுடன் உரையாடும்போது, ஏதேனும் ஒன்றை நாம் இல்லை என்று உறுதிப்பட மறுப்போம், அல்லது இருக்கிறதென்று சாதிப்போம். நம்முடைய கூற்று, நேற்றுவரை சரியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இன்று திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தினால், அங்கு அவை இல்லாமல் போயிருக்கக்கூடும். அதற்காக நாம் பொய் சொன்னதாக அர்த்தமாகிவிடாது. “மாறும் உலகில், மாற்றம் ஒன்றே நிலையானது” என்ற கவிப்பேரரசின் வரிகள் தான் நிதர்சனம். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் நாம் கவனிக்கத் தவறினால் நாம் கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணற நேரிடும்.
நம் கைமீறிய நிகழ்வுகள்
ஏதேனும் ஒரு நிகழ்விற்கு / விழாவிற்கு / முக்கிய கலந்தாய்வுக்கு வர ஒப்புக்கொண்டிருப்போம். ஆனால் அந்த சமயத்தில், திடீரென்று ஏதேனும் ஒரு மருத்துவ அவசரம் நம் வீட்டில் ஏற்பட்டு, நம்முடைய திட்டப்படியான பயணங்கள் முற்றிலுமாய் தடைபடலாம். அதனால் சில வியாபார இழப்புக்கள் கூட ஏற்படலாம். மனித மனம் இப்படியும் நிகழக்கூடும் என்ற புரிதலை கொண்டிருந்தால், இந்த திடீர் திருப்பங்களை மனம் ஏற்று முன்னேறிச் செல்லும். இவ்வாறான திருப்பங்களை ஏற்காத மனம், அதைப் பற்றியே தொடர்ந்து அதிகம் பேசியும், மற்றவரை குறை கூறியும் வெதும்பிக்கொண்டிருக்கும். அப்படியான திடீர்மாற்றங்களை ஏற்காமல் மனம் நொந்து கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. நம்மை மீறிய எத்தனையோ நிகழ்வுகள், எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன்! நாமே கூட நாளை எழுவது சாத்தியமில்லாமல் போகலாம்!
நாம் நாளை இல்லாவிட்டால்
ஒருவேளை அப்படி நாம் நாளை இல்லாது போனால், நம்மை நம்பிவாழும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு என்ன பாதுகாப்பு செய்திருக்கிறோம்? குறைந்தபட்சம், போதிய காப்பீடு எடுத்து வைத்துள்ளோமா?
போதுமான செல்வமோ, அல்லது காப்பீடோ இல்லாமல் போனால், நாம் இல்லாத பட்சத்தில் நம் குடும்பத்தினரின் வாழ்க்கை தரம் குறைந்து கஷ்டப்படுவார்கள் அல்லவா!
எனக்கு சாவே வராது, அல்லது எனக்கு 100 வயதில் தான் சாவு என்று யாரேனும் ஒருவர் அனுமானித்து, எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தால், அது முட்டாள்தனமன்றி வேறென்ன சொல்வது. சாவை கணிக்க, சாவைத் தடுக்க யாரால் முடியும்?
எதிர்பாராதவைகளுக்கு தயாராக இருங்கள்
மனிதன் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எந்த அளவு தயாராக இருக்கிறானோ, அந்த அளவிற்கு அவன் நிம்மதியாக இருக்க முடியும். அசம்பாவிதங்களுக்கும், அசாதாரண நிகழ்வுகளுக்கும் தயாராக இல்லாத பட்சத்தில், மன உலைச்சலும், இழப்புகளும் அதிகம்.
பெருநிறுவனங்களிலும், பொதுமக்களிடையேயும் அவ்வப்போது தீயணைக்கும் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி, அவசரகால மீட்பு ஒத்திகை, என்று அரசும், தனியார் நிறுவனங்களும் அவ்வப்போது நடத்திக் கொண்டே இருக்கின்றன. எதற்காக இவை? இவையனைத்தும், பொதுமக்களை அசம்பாவிதங்களில் இருந்து முடிந்தவரை காப்பாற்றும் நோக்கில்தானே.
அவசரகால செயல்பாட்டு ஒத்திகை / குறிப்பு
விமானத்தில் பயணம் செய்யும்போது கூட, ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் அவசரகால செயல்பாடுகள் குறித்து சிறிய விளக்கஒத்திகை கட்டாயம் வழங்கப்படுகிறது. அது குறித்து விளக்க கையேடும் ஒவ்வொரு இருக்கையிலும் வைக்கப்பட்டிருக்கும். இது விமானத்துக்கு மட்டும் என்றில்லை, ஒவ்வொரு வாகனத்திலும் ஏதாவது ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். யதார்த்தம் யாதெனில் அதை நாம் யாரும் கவனித்து படித்து பார்ப்பதில்லை.
எண்ணற்ற அசம்பாவிதங்களில், அவசரகால நடைமுறை தெரியாத காரணத்தினால் மட்டுமே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
நாம் எங்கிருந்தாலும்,
என்ன செய்துகொண்டிருந்தாலும்
எதுவுமே 100% பாதுகாப்பானதன்று!
யதார்த்தத்தில்
எக்கணமும் நிலைமை மாறலாம்;.
எதிர்பாராதவைகள் நடக்கலாம்;
பதட்டத்தை தவிர்த்து
அவசரகால வழிமுறைகளை
முன்னரே அறிந்துவைத்திருந்தால்
எந்த சூழ்நிலையிலும்
இழப்புகளை குறைத்து
வாழ்வை பாதுகாப்பானதாக்கலாம்.
- [ம.சு.கு 17-09-2022]
Commenti