கற்றலின் அளவு
ஒன்றாம் வகுப்பு கணிதத் தேர்வு எழுதச் செல்லும் மாணவன், என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்?
முனைவர் பட்டம் பெற கணிதத் தேர்வு எழுத சென்ற மாணவன் என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்?
இருவருக்கும் இங்கு பொதுவான பாடம் கணிதமே. இருவரும் மாணவர்கள்தான்; இருவரும் வருடாந்திர இறுதித் தேர்வெழுதவே செல்கின்றனர். ஆனால் அந்த இருவரும் ஒன்றாகி விடமுடியுமா? ஒன்றாம் வகுப்பு மாணவன் கணிதத்தில் 100 மதிப்பெண் எடுத்தால் முனைவர் பட்டம் தர முடியுமா?
அடிப்படை கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல், தெரிவதே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பெரிய சாதனை. அதைத் தாண்டி அவனிடம் எதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதேசமயம், முனைவர் பட்டம் படிக்கும் மாணவன், அந்த கணிதத்தில் எல்லாம் அறிந்தவனாக இருக்கவேண்டும் அல்லவா! எந்த ஒரு கணித சூத்திரம் தெரியாவிட்டாலும், அவன் சரிவர தயாராகவில்லை என்றுதானே பொருள்.
எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா?
இந்த சிறிய உதாரணம், யார்? எதை? எந்த அளவு? தெரிந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதற்குத்தான். யதார்த்தம் யாதெனில், எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் எல்லோருக்கும், எல்லாவற்றிலும், அவரவர்களுக்கு தேவையான அளவு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
இது என்ன "எல்லாம்" "போதுமான அளவு" என்று வார்த்தைகளில் விளையாட்டு? என்று நீங்கள் கேட்கலாம்.
நிபணர்களின் உதவி இருக்கு
ஒரு மருத்துவர் நம் உடல் குறித்து எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் அதில் நிபுணத்துவம் பெற்று மக்களுக்கு ஆலோசனை வழங்க பயின்றிருக்கிறார். அதேசமயம் சாமானிய மனிதன், பார்த்துக் கொள்ளப்படவேண்டியது அவனது உடலேயானாலும், அவன் எல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அடிப்படை ஆரோக்கியம் குறித்த அறிவு அவன் உடலை அவன் பார்த்துக் கொள்ள போதுமானதாகும். உடல் உபாதைகள், பிணிகள் வரும் போது, உரிய மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளலாம்.
அதேபோல ஒரு கட்டிடக்கலை நிபுணர், கட்டிடம் குறித்த எல்லாவற்றையும் அறிந்து எந்த பொருள் - எவ்வளவு சேர்க்க வேண்டும்? எது பொருந்தும்? எது பொருந்தாது? எது எங்கு கிடைக்கும்? என்று தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் சாமானிய மனிதன் தன் வீட்டிற்கான அடிப்படை தேவைகள் என்ன (வீட்டின் பொதுவான அமைப்பு, எந்தெந்த அறை தேவை, எந்த பொருள் எங்கு வைக்க வேண்டும், என்ற திட்டமிடல்) என்பதை தெரிந்து இருந்தால் போதும். அவன் தேவைகளை கட்டிடக்கலை வல்லுனரிடம் சரிவர சொன்னால், அவர் உரிய ஆலோசனைகளை வழங்கி கட்டிடத்தை சிறப்பாக செய்து கொடுப்பார்.
நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு உதவ, ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதற்கு எந்த நிபுணரிடம் செல்ல வேண்டும்? அவர் என்ன கேட்கக்கூடும்? அவற்றிற்கான நம் பதில் என்ன? என்ற அடிப்படைகள் நமக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
படிப்படியாக தெரிந்துகொள்ள வேண்டும்
எல்லாத்துறைகளிலும் நமக்கு எடுத்தவுடன் எல்லாம் தெரிந்து விடுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது, ஒவ்வொரு துறையைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடனான உரையாடலில் அந்த ஊரில் எது எங்கு கிடைக்கும்? எதற்கு யாரை அணுகலாம்? அவர்களின் அனுபவம் எப்படி? என்பவற்றை அறிந்துகொள்ளுங்கள். நாம் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வாசித்துவந்தால், எண்ணற்ற புதியவைகளையும், மாற்றங்களின் அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளலாம்.
ஒரு துறைகல்வியுடன் நிற்காதீர்கள்
நீங்கள் எந்தத் துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், அந்தத் துறை சார்ந்த நிபுணத்துவத்தை வளர்க்கும் முயற்சியுடன், அதை சார்ந்த மற்ற துறைகளிலும் அடிப்படை அறிவிலும் போதிய கவனம் செலுத்தி வளர்த்துக் கொள்வது மிகவும் பயனளிக்கும்.. சமையல் நிபுணராக முயற்சிப்பவர்கள் சமையலுக்கான பொருட்களின் சேர்க்கை அளவு, செய்யும் முறைகள் பற்றி மட்டும் அறிந்திருந்தால், சமையல் வரும் - ஆனால் ஆரோக்கியம் வருமா? என்றால் உறுதி இல்லை. அதே சமையலைக் கற்கும் போது, பொதுவான ஊட்டச்சத்து குறித்த அடிப்படைகளையும் சேர்த்து கற்றுக்கொண்டால், நம் நிபுணத்துவத்தின் பயன் பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்தத் துறை சார்ந்த அறிவுகளைக் கடந்து, இன்று நீங்கள் வெற்றிபெற நிறைய கற்க வேண்டியுள்ளது;
சந்தை நிலவரங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்;
உங்களை நீங்கள் எப்படி சந்தைப்படுத்துவது
உங்கள் பொருட்களை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது
போன்ற வணிகம் சார்ந்த அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.
அதைத்தொடர்ந்து
வங்கிகள் பணப்புழக்கம்
வர்த்தக வரிகள்
தனிநபர் வருமானவரி
நாட்டின் நிர்வாக அமைப்பு
சட்டங்கள் – நீதித்துறை,
போக்குவரத்து
என்று எண்ணற்ற விடயங்களின் அடிப்படைகள், உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். எதுவொன்று தெரியாவிட்டாலும், அதற்காக நீங்கள் மற்றவர்களின் உதவியை நாடி காத்திருக்க நேரிடும். நீங்கள் போகும் பாதையில் எதுவெல்லாம் தேவை என்பதை முன்கூட்டியே யூகித்து, அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டே போனால், உங்களின் வெற்றிப்பாதையில் வரும் தடைக்கற்களை எளிதாக சமாளிக்க முடியும்.
எல்லாம் தெரிந்துகொள்ள முயற்சியுங்கள்
எல்லாவற்றையும் அறிந்திருப்பது நல்லது; மிகவும் தேவையானதும்கூட என்றாலும், ஒருவரால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியுமா? விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக, இன்றைக்கு ஆயிரமாயிரம் புதுமைகள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றன. என்னென்ன இருக்கிறது என்ற பட்டியலை படிக்கவே ஒரு ஆயுள் தேவைப்படும் என்ற அளவிற்கு, உலகில் பல புதுமைகள் தொடர்ந்து உருவாகிவருகின்றன. தொடர்ந்து புதுமைகள் பெருகிவரும் உலகில், எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது சாத்தியமே இல்லை என்ற ஐயப்பாடு உங்களின் மனதில் எழும்.
ஆம்! எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஒரு ஆயுள் போதாதுதான். அதற்காக எதையும் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதல்லவா? உங்களின் வாழ்க்கைச்சூழல், உங்கள் பணி மற்றும் வியாபாரம் சூழல், குழந்தைகளின் கல்விச் சூழல், என்று நீங்கள் இருக்கும் சமுதாயத்தினுள் சிறப்பாக வாழ்க்கை நடத்த தேவையான எல்லாவற்றின் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
இன்று அமெரிக்காவில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்வதில் உடனடிப் பயன் எதுமில்லை. ஆனால் உங்கள் அமிஞ்சிக்கரையில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியத் தேவைதானே. உங்களை சுற்றியுள்ள சமுதாயத்தையும், அதன் செயல்பாட்டையும், மனிதர்களையும் நன்றாக தெரிந்துவைத்திருங்கள். உங்கள் குடும்பத்தை, உங்கள் சகநண்பர்களை, சுற்றியுள்ள சமுதாயத்தை, நல்ல சமுதாயமாக மாற்ற / வளர்க்க, என்ன தேவையோ அவையனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்.
தெரிந்ததை பயன்படுத்துங்கள்
எண்ணற்ற தேவைகளையும், விடயங்களையும் தேடித் தேடித் தெரிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அதை வாழ்வில் எப்படி பயன்படுத்துவது? பிறருக்குப் பயன்படும் விதத்தில் எப்படி உதவுவது? என்பதையும் அறிந்து செயலாற்றுங்கள். எல்லாம் தெரிந்த வெறும் களஞ்சியமாக (encyclopedia) மட்டும் இருப்பதில் பயனில்லை. தெரிந்தவற்றை செயல்படுத்தி வெற்றி காணும் காரியவாதியாகவும் இருக்க வேண்டும்.
தொடர்ந்து வாசியுங்கள்; உலகத்தில் அசுர வேக வளர்ச்சியில் தாக்குப்பிடித்து நிற்க, நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அன்றாடும் முக்கிய செய்திகளைப் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து வைத்திருங்கள்;
போக்குவரத்து, மருத்துவம், கட்டிடக்கலை, தகவல் தொழில்நுட்பம், வணிகம், அரசாங்கம், வரிகள், தொழில் கூட்டமைப்பு, சந்தை நிலவரம், என்று எல்லாத் துறைகளைப் பற்றிய அடிப்படைகளையும், அதில் வரும் புதுமைகளையும் தொடர்ந்து அறிந்து கொண்டே இருங்கள்;
ஒவ்வொரு நாளும், குறைந்தது 10-20 புதிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ந்து தெரிந்து கொண்டே இருப்பதுதான், உங்களின் மூளைக்கும் கொடுக்கும் அன்றாட பயிற்சியாகும்;
நீங்கள் கற்றவற்றை / அறிந்தவற்றை, தேவைப்படுவோர்க்கு சொல்லிக்கொடுங்கள்; இயன்ற அளவு உதவி செய்யுங்கள்;
எச்சரிக்கை - எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற முயற்சிக்காதீர்கள். அடிப்படை அறிவு போதும். மருந்துகளை நீங்களே முடிவு செய்யாதீர்கள். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வாங்கி உண்ணுங்கள்.
நமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையும் வேண்டாம்; ஒன்றும் தெரியாத முட்டாள்தனமும் வேண்டாம்; நம்முடைய தேவைகளை, எப்படி? யாரைக் கொண்டு? நிறைவேற்றிக் கொள்வது என்ற அடிப்படை அறிவு போதும்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரயாணங்களை மேற்கொள்ளுங்கள்; புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம், என்று அறிந்து கொள்ள உலகில் எண்ணற்றவைகள் இருக்கின்றன.
இப்படி எழுதிக்கொண்டே இருந்தால், பட்டியல் முடிவில்லாமல் வளர்ந்துகொண்டே போகும். உங்கள் வாழ்க்கை, சமுதாய சூழ்நிலை, பணிச்சூழல்களுக்கு ஏற்ப, தேவைப்படும் எல்லாத்துறைகளிலும், அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள தேவையானவற்றைத் தேடி அறிந்துகொள்ளுங்கள்.
உங்களின் அறிவிற்கான
தேடல் தான் அதிமுக்கியம்
தேடல் உள்ளவரை
உங்கள் அறிவு வளர்ந்துகொண்டே இருக்கும்;
அதேசமயம் ஒன்றை மறந்துவிடாதீர்கள்,
உங்களுக்கு நிறைய தெரியும்
என்பதில் அதிக பயனில்லை;
அடுத்தவர்க்கு பயன்படும் வகையில்
உங்களுக்கு என்ன தெரியும்;
உங்களால் எதைச் செய்யமுடியும்;
என்பதே உலகத்தின் எதிர்பார்ப்பு!
போதுமான அளவு தெரிந்துகொண்டு
வாழ்க்கையை செம்மைப்படுத்துங்கள்!
- [ம.சு.கு - 04.06.2022]
コメント