வெற்றிக்கான காரணங்கள் இவையென்று காலங்காலமாய் தொடர்ந்து மக்கள் பட்டியலிட்டுக் கொண்டே வருகின்றனர். அதேபோல தோல்விக்கான காரணங்கள் இவையிவை என்று ஒரு பட்டியல் சொல்லப்படுகிறது. இப்படி இந்த இரண்டு பட்டியல்களும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகிறது. காலப்போக்கில் வெற்றிக்கான காரணங்களாக கூறப்பட்ட பல காரணிகள், இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தோல்விக்கான காரணிகளாக மாறிவிட்டன. இன்றைய கணினியுகத்தில், வெற்றிக்கு புதுப்புது காரணங்களும், வழிமுறைகளும் [விளம்பரம், சமூகவளைதளம்,......] உருவாகியுள்ளன.
இயற்கையும் கைவிரிக்கலாம்
இப்படி வெற்றி-தோல்வி-காரணம் என்று பொதுவாகவே பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் பயனில்லை. இன்றைய கட்டுரைக்கு நேரடியாக வருவோம்.இருந்தும் அவர்களுக்கு வெற்றி கைகூடவில்லை. வெற்றியாளர்கள் செய்த ஏதோ ஒன்றை இவர்கள் தவரவிட்டுள்ளார்கள். எல்லாமே சரியாக செய்திருந்தாலும், சில சமயம் இயற்கை நிகழ்வுகள் கூட அவர்களை கைவிட்டிருக்கும் [இப்போது சென்னையில் பெய்யும் அதீத மழைபோல பெய்தால், திட்டங்கள் எல்லாம் பாழாய்ப் போகும்]. இப்படி இயற்கை நிகழ்வுகளோடு சேர்த்து தோல்விக்கான காரணங்களும் ஆயிரமாயிரமாய் நீண்டு கொண்டே போகிறது.
இப்படி வெற்றி-தோல்வி-காரணம் என்று பொதுவாகவே பேசிக்கொண்டிருந்தால் ஒன்றும் பயனில்லை. இன்றைய கட்டுரைக்கு நேரடியாக வருவோம்.
தனிப்பட்ட குணாதியம்
வெற்றியாளர்களிடம் நான் கண்ட ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்தை கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அவர்களின் அந்த குறிப்பிட்ட குணாதிசயம் என்னவென்றால்:
“எந்த செயலை சீக்கிரமாக துவக்க வேண்டும்;
எதை சீக்கிரமாக செய்துமுடிக்க வேண்டும்;
எந்த செயலை தாமதப்படுத்த வேண்டும்;
எதிலிருந்து விலகி இருக்க வேண்டும்”
என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றனர்.
அதற்கு நேர்மாறாக தோல்வி அடைந்தவர்களை பார்த்தால், அவர்கள் எப்பொழுதும், எல்லாவற்றிலும் காலை விட்டு, எதிலுமே முழுமையான ஈடுபாடு செலுத்தாமல், இறுதியில் எதையும் சாதிக்க இயலாமல் திணறுகின்றனர்.
அன்றாட வாழ்வின் உதாரணங்கள்
காலநேரம் பார்த்து செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பிட்ட காலத்தை தவறவிட்டால், நாம் மிகவும் அலைந்து திரிய வேண்டி வரும். நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில உதாரணங்களோடு இதை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
ஒரு அனுபவம் வாய்ந்த ஓட்டல்காரர், எந்த நாட்களில் என்ன வகையான உணவு வகைகளை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தன் அனுபவம் கொண்டு திட்டமிடுகிறார். திருமணநாள், கோவில் திருவிழா, சஷ்டி, அமாவாசை என்று எந்த நாட்களில் என்ன ஓடும் என்பதற்கு ஏற்ப, எத்தனை மாவு ஆட்ட வேண்டும், எத்தனை அசைவம் சமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இதை சரிவர கவணிக்காத முதலாளிகள், அன்றாடம் இழப்பை சந்திக்கிறார்கள். தவறான திட்டமிடலால, ஒன்று பத்தாமல் போகும், இல்லாவிட்டால் மீதமாகி வீணாகும்.
10-15 வருடங்களுக்கு முன்னரே மின்சார வாகனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன. ஆனால் சந்தையில் வரவேற்பு குறைவு. சீக்கிரமாய் தயாரிப்பை துவக்கிய எண்ணற்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. ஆனால் இன்றைய தினம், எரிபொருளின் விலை 100-ஐ தாண்டியதும், மின்சார வாகன தேவையும் பயன்பாடும் தானாகவே அதிகரித்துவிட்டது. அந்த பழைய நிறுவனங்கள் இன்று இல்லை. புதிய உற்பத்தியாளர்கள் நுழைவதற்கு இது சரியான நேரமாக உள்ளது. சந்தை ஒருபொருளை என்று வரவேற்று முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்பதை அறிந்துகொண்டு சந்தையில் இறங்குவது அதிமுக்கியம். தவறான நேரத்தில் இயங்குவது பணத்தையும், நேரத்தையும், நம் ஆற்றலையும் வீணாக்கும்.
நாட்டின் நிர்வாகத்தில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எதை தள்ளிப்போட வேண்டும், எது மக்கள் நலன் சார்ந்த விஷயம், எது ஓட்டுவங்கி சார்ந்தது, எதற்கு நாம் முந்திக்கொண்டு பேச வேண்டும், எதற்கு அமைதி காக்க வேண்டும் என்பது தெரிந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும்.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகம். எந்த சமயத்தில் பங்குகளை வாங்க வேண்டும் {நுழைதல்}, எந்த சமயத்தில் பங்குகளை விற்க வேண்டும் {வெளியேறுதல்} என்பது தெரியாமல் எண்ணற்றவர்கள் பல இலட்சங்கை தினம்தினம் இழக்கின்றனர்.
இப்படி உதாரணங்கள் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் அறியவேண்டியது ஒரே விடயம் தான்.
“எதை, எப்பொழுது, எங்கு, எப்படி, யாரை கொண்டு செய்வது” என்பதுதான்.
காலநேரத்திற்கு ஏற்றாற்போல
இந்த இடம், பொருள், ஏவல் பார்த்து இயங்குவதுதான் வெற்றியை தீர்மானிக்க வல்ல ஆற்றல். இது வியாபாரத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொறுந்தக்கூடியது.
நண்பர்களுடனும், உறவுகளுக்குள்ளும் எதைப் பேச வேண்டும்? எப்பொழுது பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்ற பல கூறுகளை தெளிவுர அறிந்து பேசவேண்டும்.
தங்களுக்கு வேண்டியதை பெற பெற்றோர்களிடம் தாஜா செய்யும் கலையில் சில குழந்தைகள் கைதேர்ந்தவர்கள். சில குழந்தைகள் தவறுகளை செய்து மாட்டிக்கொள்கின்றன.
அலுவலத்தில், உடன் இருப்பவர்கள், மேலதிகாரிகள் என்று ஒவ்வொருவரிடமும் எப்படி காலநேரத்திற்கு ஏற்ப செயல்பட்டு பேசி வேலைகளை முடிக்க வேண்டும் என்று தெரிந்தால் பதவி உயர்வுகள் எளிதாய் கிட்டும்.
பச்சோந்தித்தனமா?
இப்படி காலநேரம் பார்த்து, ஆள்பார்த்து பேசுவதையும், செய்வதையும் சிலர் பச்சோந்தித்தனம் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன். அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நீங்கள யாரையும் கெடுக்கப்போவதில்லை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக, காலநேரத்திற்கு ஏற்றாற்போல செயல்பட்டு சாதிப்பது வாழ்க்கையில் மிக முக்கியம். இயலாதவர்களின் வார்த்தைகளை கேட்டு கவலைகொள்ளாதீர்கள். உலகம் நீங்கள் வென்றாலும் ஏசும் – தோற்றாலும் ஏசும். குறைகாண்பதும், புறம் பேசுவதும் இங்கு பலருக்கு பொழுதுபோக்கு.
“செயல் எவ்வளவு கடினமாக இருந்தாலும்,
தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
வென்றால் சரித்திரம், தோற்றால் அனுபவம்
[எதிலும் இழப்பில்லை]”
- ம.சு.கு [01-12-2021]
Comments