top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 338 - கரைபடியாத கரங்கள்....!"

  • Writer: ம.சு.கு
    ம.சு.கு
  • Sep 12, 2023
  • 2 min read

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"

தொடர் கட்டுரையின் அத்தியாயம்-338

கரைபடியாத கரங்கள்...!


  • ஒரு ஊழியர் சரிவர வேலைக்கு வரமாட்டார். வேலைகளை பாதியிலேயே விட்டுச் சென்றுவிடுவார். அவரது ஒழுங்கீனமான செயல்களுக்கு சிலமுறை நிர்வாகம் கடுமையான தண்டனைகளைக்கூட கொடுத்தது. அதேசமயம் அவர் திறமையானவர் என்பதால், அவரை வேலையில் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒருமுறை அவர் இந்த நிறுவனத்தின் இரகசியங்களை அவர் திருடிவிட்டார் என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த தவறை நிறுவனம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிரந்தரமாக அவரை பணிநீக்கம் செய்து, தகவல் திருட்டிற்கு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்....

  • இரண்டு வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட சிக்கலான பிரச்சனையை யாரேனுமொரு மத்தியஸ்தரை வைத்து பேசித் தீர்க்கலாம் என்று முடிவெடுத்தனர். யாரை மத்தியஸ்தராக இருக்கச் செய்வதென்ற கேள்வி வந்தபோது, ஒவ்வொரு பெயராக ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொருவர் பெயர் வரும்போதும், இரண்டு தரப்பினரும் அவர்களின் தவறான செய்கைகள் ஏதாவதொன்றை சொல்லி அவர் சரிப்படமாட்டார் என்று தவிர்த்தனர். பல பணக்காரர்கள், நிபுணர்கள் பெயர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இறுதியில் ஒரு ஓய்வுபெற்ற நேர்மையான அரசு அதிகாரியை முடிவு செய்தனர். இதுபோல் உங்களை நாணயமானவர் என்று உலகம் தேர்வு செய்ய, நீங்கள் தகுதியானவரா?

ஒரு ஊழியராக, ஒரு முதலாளியாக, ஒரு மனிதனாக நீங்கள் பல தவறுகளை செய்யலாம். அவை தவறுதலாக, அறியாமையின் காரணமாக செய்யப்பட்டால், பொதுவாக எல்லோரும் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள். அதேசமயம், ஒரு தவறை திட்டமிட்டு, மற்றவரை துன்புறத்த / இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தெரிந்தே செய்தால், அதை யார்தான் மன்னிக்க முன்வருவார்கள். அப்படி வேண்டுமென்றே செய்யும் தவறை மன்னிப்பது முட்டாள்தனம் ஆகிவிடாதா? கோபத்தில் ஒருவரை அடிக்கலாம். பின்னர் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகலாம். ஆனால் கோபத்தில் அவரை கொன்றுவிட்டால், அந்த தவறை எப்படி சரிசெய்வது?


பெரிய மனிதர்களின் பெயர்கள், நடுநிலையாளர்கள் என்ற விளம்பரம் செய்தவர்களின் பெயர்களையெல்லாம் வெவ்வேறு காரணங்களுக்கு நிராகரித்தனர், ஒரு நாணயமானவரை மத்தியஸ்தம் செய்ய தேர்வு செய்தனர். எவ்வளவுதான் நீங்கள் புகழும், பணமும் சேர்த்திருந்தாலும், உங்கள் செயல்களை உலகம் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறது. நீங்கள் செய்த தவறுகளை உலகம் எப்போதுமே மறக்காது. உங்களைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், உங்கள் தவறுகளை மறக்காமல் உலகத்தினர் பட்டியலிட்டு விடுகின்றனர்.

  • பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சரிவர படிக்காமல் இருக்கலாம். விளையாட்டுத்தனமாக ஆசிரியர் சொற்களை கவனிக்காமல் உதாசினப்படுத்தலாம். ஆனால் ஒழுங்கீனமான செயல்களை செய்தால், எப்படி பள்ளி நிர்வாகம் பொறுத்துக்கொள்ளும்?

  • வேலைகளை சரிவர செய்யவில்லை என்றால், நிறுவனம் நீங்கள் பழகும் வரை சற்று பொருத்துக் கொள்ளக்கூடும். ஆனால் நிறுவனத்தை ஏமாற்றி திருடுகிறீர்கள் என்பது தெரிந்தால் எப்படி நிர்வாகம் பொறுத்துக்கொள்ளும்?

  • பொருட்களை அதிக விலைக்கு விற்றால், சந்தை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கும். கட்டுபடியாகக் கூடியவர்கள் மட்டும் வாங்கிச் செல்வர். ஆனால் தரக்குறைவாக விற்றால், பிரச்சனைகளும், வழக்குகளும் வரத்தானே செய்யும்?

  • ஒரு நீதிபதி, கருணை உள்ளத்துடன் பல தீர்ப்புகளில் தண்டனை குறைவாக வழங்கலாம். ஒருசிலவற்றில், எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பலாம். அவை கருணை உள்ளத்துடன், குற்றவாளி திருந்த வாய்ப்பளிக்கும் நோக்குடன் செய்யும்வரை சரிதான். ஆனால் அதையே கையூட்டு பெற்றுக்கொண்டு விடுவித்தால், நீதியை எப்படி நிலைநிறுத்த முடியும்;

  • ஒரு முதலாளி, வியாபாரத்தில் அவ்வப்போது சிலபல பொய்களை சொல்லி வியாபாரத்தை முடிப்பார். அது யாரையும் பாதிக்காத வரை ஏதும் பிரச்சனையில்லை. ஆனால் சிலசமயம் திட்டமிட்டு வாடிக்கையாளரை ஏமாற்றினால், ஒரு நாள் அதேவண்ணம் அவரது ஊழியரும் அவரை ஏமாற்றக் கூடுமே! அப்போது அவரிடம் நியாய-தர்மம் பேச அந்த முதலாளிக்கு என்ன தகுதி இருக்கும்?

கைகள் அழுக்காகலாம்,

ஆனால் கரைபடிந்தால் விலக்குவது கடினமல்லவா!

சிலகரைகள் நீங்காத வடுக்களாக இருந்துகொண்டே இருக்குமல்லவா!


உங்கள் இலக்கை நோக்கி ஒடும் முயற்சியில், சிலபல தவறுகள் நேரலாம். அவை கவனக்குறைவினாலோ, அறியாமையினாலோ நடந்தேறியிருந்தால், அவற்றை அனுபவமாக ஏற்று கடந்து செல்லலாம். அடுத்த முறை அந்த தவறுகள் நேராமல் கவனமாக இருக்கலாம். ஆனால், தான் மட்டும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில், திட்டமிட்டு சில சதிவேலைகளை செய்தால், அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த கரைகளை நீங்கள் எங்குபோய் களைய முடியும் / பாவமன்னிப்பு கேட்க முடியும்?


சமுதாயத்தில் நிறைய இடங்களில் பணம் பேசும் – ஆனால்

அது என்றைக்கும் நிரந்தரமாக இருக்க முடியாது!

அதேசமயம் சில இடங்களில் உங்கள் குணம் மட்டுமே பேசும்

அது நிரந்தரமானதாவும் இருக்கும்!


கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே

நல்லவிதமாக சமுதாயத்தில் பேசப்படுகிறார்கள்!

முறையற்ற விதத்தில் சம்பாதித்தவர்களின் முதுகுக்குப்பின்னால்

என்னென்ன பேசுவார்கள் என்று நீங்களே கேட்டிருப்பீர்கள்!!


- [ம.சு.கு 12.09.2023]

Recent Posts

See All
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

 
 
 

Comments


Post: Blog2 Post
bottom of page