[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 315 - மனித உறவுகளில் கவனம்செலுத்துங்கள்!"
- ம.சு.கு
- Aug 20, 2023
- 3 min read
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-315
மனித உறவுகளில் கவனம் செலுத்துங்கள்...!
ஓரு கல்லூரியில் பயின்ற நான்கு மாணவ நண்பர்களில் ஒருவன் மட்டும் எப்போதும் தன்னைப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும் அதீதமாய் பெருமை பேசிக்கொண்டிருப்பான். பலநேரங்களில் சகித்துக்கொண்டு நண்பர்கள் கேட்பார்கள். சிலநேரங்களில் தெரித்து ஓடி விடுவார்கள். காலப்போக்கில் நண்பர்கள் நால்வராக இருந்தாலும், பெரும்பாலும் அந்த தற்பெருமையாளரை தவிர்த்து மூன்று பேர் மட்டுமே சந்திப்பார்கள். அவர் வருகிறேன் என்றாலே, ஏதாவது காரணம் சொல்லி சந்திப்பையே இரத்து செய்து விடுவார்கள். இப்படி சகநண்பர்கள் கேட்க விரும்புகிறார்களா-இல்லையா? என்பது பற்றி கவலைப்படாமல், நண்பர்களுக்குள்ளான நல்லுரவை நீடிப்பது பற்றி யோசிக்காமல், தற்பெருமை பேசிக் கொண்டிருந்தால், மனித உள்ளங்களை ஆட்கொண்டு வாழ்வில் எப்படி வெற்றிகாண முடியும்?
ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த 2 மேலாளர்கள் ஒரு பெரிய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்றுவந்தார்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருடனும் தன் முகவரி அட்டையை பகிர்ந்து கொண்டார், அடுத்த நாள் தன்னிடம் பகிர்ந்திருந்த எல்லோருடைய முகவரி அட்டைக்கும் நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி தொடர்பை வளர்க்க முயிற்சித்தார். இன்னொரு நபரும் பலருடன் முகவரி அட்டையை பகிர்ந்திருந்தாலும், புதிதாய் 3-4 குறிப்பிட்ட நபர்களுடன் 5-10 நிமிடங்கள் விளாவாரியாக உரையாடினார். அவர்களைப் பற்றி இவரும். இவரைப் பற்றி அவர்களும் நன்றாக தெரிந்துகொள்ள அது உதவியது. இவரும் அடுத்தநாள் தன்னிடம் முகவரி அட்டை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது சற்று நேரம் பேசிய அந்த 3-4 நபர்களிடம் இருந்து பதில் வந்தது. அவர்களின் உறவு படிப்படியாக ஆழமாக வியாபார வாய்ப்புக்கள் அதிகரித்தன.
கல்லூரி நண்பர்களுக்கிடையே நீங்கள் அதிகம் பெருமை பேசிக்கொண்டிருந்தால், எவ்வளவு காலம்தான் உங்களின் தற்பெருமையை அவர்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் அவர்களைப் பற்றி பெருமை பேச ரொம்ப பிடிக்கிறது. அதிலும், அவர்களைபற்றி மற்றவர்கள் பெருமையாக கூறினால், அப்படி சொன்னவரை அவர்களுக்கு ரொம்பரொம்ப பிடிக்கிறது. ஏனோ பலருக்கு அவர்களை முக்கியப்படுத்திக் கொண்டிருப்பதில் தான் அதீத ஆர்வம். இப்படி மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், சுயநலமாக, தற்பெருமை பேசி வந்தால், உறவுகளுடனும், சமுதாயத்துடனும் எப்படி நல்லுறவு நீடிக்கும். அப்படி பேசுபவர்களைக் கண்டாலே எல்லோரும் தெரித்து ஓடத்தானே பார்ப்பார்கள். நீங்கள் அப்படி எவ்வளவு தற்பெருமை பேசுகிறீர்கள்? எத்தனை பேர் உங்களிடம் வந்து விரும்பி பேச தயாராக இருக்கிறார்கள்? எத்தனை பேர் நீங்கள் வந்து பேசினாலும், 1-2 நிமிடங்களில் ஏதாவதொரு காரணம் சொல்லி விலகி ஓடுகிறார்கள்? உங்களை நீங்களே அலசிப்பாருங்கள்!
ஒரு பெரிய கூட்டத்தில், பலபேருடன் ஏதோ கடமைக்கு உங்கள் முகவரி அட்டையை பகிர்ந்துகொள்வதில் எந்தளவிற்கு பயன் கிடைக்கும்? அந்த முகவரி அட்டையை ஒரு வாரத்திற்குப்பின் எடுத்துப் பார்த்தால், அதை கொடுத்தவரின் முகம் உங்கள் நினைவிற்கு வருகிறதா? அப்படி முகம் மறந்துபோனால், எப்படி அவருடன் உறவை பலப்படுத்த முடியும்? பலபேருடன் பகிர்ந்துகொண்டாலும், முதல் மேலாளரால் ஒருவருடன் கூட நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், முகவரி அட்டைகள் குறைவாக பகிர்ந்திருந்தாலும், 3-4 நபர்களுடன் மட்டும் சற்று ஆழமாக பேசிய மேலாளரால், அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்த முடிந்தது.
திருமண நாளன்று மனப்பெண்ணுக்கு மாப்பிள்ளை தன் வீட்டு சொந்தங்கள் எல்லோரையும் அறிமுகம் செய்வார். அதேபோல மாப்பிள்ளைக்கு பெண் செய்வார். ஆனால் இவர்களில் எத்தனை பேரை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் இந்த முகவரி அட்டை பகிர்வதும். புத்தகத்தின் காகிதங்களை வெறுமனே திருப்புவது போலத்தான் இருக்கும். ஒன்றும் மண்டையில் ஏறாது. சகமனிதருடன் உறவுகள் பலப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் சில நிமடங்களாவது மனம்விட்டு பேசி, ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படை புரிதலுக்குக்கூட நேரம் ஒதுக்கமுடியாவிட்டால், அவர்களுக்குள் பிணைப்பு எப்படி ஏற்படும்!
வாழ்வில் வெற்றபெற ஆசையிருந்தால், செல்வம் நிறைய சேர்க்க ஆசையிருந்தால், முதலில் உங்களைச் சார்ந்தவர்களிடம், சமுதாயத்திடம் நல்லுறவை வளர்க்க வேண்டும். புன்னகைக்கவும், கனிவுடன் பேசவும் தெரியாத கடைக்கு, யார் அடுத்தமுறை பொருள் வாங்க வருவார்?
வெறும் முகவரி அட்டையை பகிர்ந்துகொள்வதோடு நின்றுவிடாதீர்கள். அவர்களைப்பற்றி நான்கு செய்திகள் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களைப்பற்றி அவரும் சில விடயங்களை தெரிந்து கொள்ளட்டும். அப்போதுதான், உங்களின் முகம் அவர் மனதில் பதியும். முதிலில் உங்கள் முகம் மனதில் பதிந்தால் தான், உறவை வளர்க்க முடியும்!
உறவுகளுடனோ, நண்பர்களுடனே அதீத்தமாக தற்பெருமை பேசாதீர்கள். அதைக் கேட்டுக்கேட்டு சலித்துப்போய், தெறித்து ஓட ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் பெருமை பேசுவதற்கு பதிலாக, மற்றவர்களின் பங்களிப்பை அங்கீகரியுங்கள். உங்களைச் சாரந்தவர்களின் எல்லா பங்களிப்புகளுக்கும் நன்றி தெரிவியுங்கள்;
உங்களை எப்போதும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும், உங்களைப் பற்றி பெருமை பேச வேண்டுமென்று எதிர்பார்த்து எதையும் செய்யாதீர்கள். தனிமனித அங்கீகாரமும், பாராட்டும், இருவருக்கும் இடையிலான பரஸ்பர உணர்விலும், புரிதலிலும் தான் மேப்ட முடியும்;
உங்களுக்கு ஒருசிலரை ரொம்ப பிடிக்கும். ஒரு சிலரை பிடிக்காது. ஆனால் அதை பொது வெளியில் சொல்ல முடியாது. பிடிக்காத நபரானாலும், அவர் எல்லை மீறாதவரை, அவரையும் அனுசரித்துத் தான் போகவேண்டும். யாரால்-யாருக்கு? எப்போது? என்ன? உதவி கிடைக்கும், என்ன கடன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்குபவர், 5 ஆண்டுக்குப்பின், உங்களுக்கு பயன்பட வாய்ப்பு இருக்கக்கூடும்.
இந்த பட்டியலைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், எப்போதும் முடிவுகிடைக்காது. ஏனெனில் மனித உறவுகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இன்று சரியாக இருப்பது, நாளைக்கு தவறென்று அரசு அறிவிக்கக் கூடும். எல்லாச் செயலையும், எல்லா முறைமைகளையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்; நீங்கள் தூங்கினால் அது சாத்தியமற்றுப் போகிவிடும்;
உங்கள் பெருமையை நீங்களே பேசினாலும்
வேறு பேச்சாளரைக்கொண்டு பேசினாலம்
எல்லாமே தவறான பேச்சுதான்!
மனித உறவுகள் வளர முக்கியப்புள்ளி
இவர்களுக்கிடையிலான வரத்தகமும் பேச்சும்தான்!
வீடோ, உறவுகளோ, நாடோ
களம் எதுவானாலும்? எப்படி உறவுகளை
வளர்க்கிறோம் என்பதில் அதீத கவனம் தேவை!
- [ம.சு.கு 20.08.2023]
Comentários