“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-240
எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்..!
ஒரு அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒரு அலுவலக ஊழியருக்கு ஆங்கிலத்தில் எழுதுவது சற்று கடினமாக இருந்தது. அவரது அன்றாட வேலையில் ஒரு சில வர்த்தக கடிதங்களுக்கு பதில் வழங்கவேண்டியிருந்தது. அவர் கடிதம் எழுதுவதின் முக்கியத்துவம் புரியாமல், தனக்கு தெரிந்த பாணியில் கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் எழுதினார். ஒரு மாதகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கின. அவர் தான் நினைத்ததை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சரியான நிறுத்தற்குறிகள் இல்லாமல் எழுதினார். அவர் சொல்ல நினைத்தற்கும், எழுதப்பட்ட வாசகத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. சில இடங்களில் கடிதம் மரியாதைக் குறைவாகவும் இருந்தது. அவரது தவறான எழுத்துக்களால், நிறுவனத்திற்கு வரவேண்டிய ஓரிரு வர்த்தகங்கள் இரத்தாகின. அதனால் அந்த ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
பல தலைவர்களின் எழுத்துக்கள், கடிதங்கள் வரலாற்றை புரட்டிப்போட்டிருக்கின்றன. சிறையில் இருந்த காலத்தில் நேரு எழுதிய கடிதங்கள் இந்திராவை அரசியல் படிக்க வைத்தது. பிர்மிங்காம் சிறையிலிருந்து மார்டின் லூதர் கிங் எழுதிய கடிதம், அமெரிக்க மனித உரிமைப் போராட்டத்தின் மிகப்பெரிய மைல்கல்லாய் மக்களுக்கு எழுச்சி அளித்தது. ஒவ்வொரு தலைவரும், தங்கள் கருத்துக்களை கடிதங்களாகவும், கட்டுரைகளாகவும் தொண்டர்களிடம் எடுத்துச் சென்றதே பல இயக்கங்களின் உருவாக்கத்திற்க அடித்தளமாக இருந்தது. எந்தவொரு தகவலையும், ஆக்ரோஷமானதாகவோ, மிதமானதாகவோ, அன்பிற்குரிய வகையிலோ எழுதுபவரால் வெளிப்படுத்த முடியும். சரியான வார்த்தைத் தேர்வுகள், எழுத்து நடை உங்கள் கடிதத்தின் விளைவை தீர்மானிக்கிறது. அப்படி நீங்கள் எழுதிய கடிதம், மின்னஞ்சல் ஏதாவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?
தொழில் நன்றாக தெரிந்திருக்கிறது, நன்றாக பேசுகிறார், வாடிக்கையாளர்களை சமாளிக்கும் திறன் இருக்கிறதென்று நேர்காணலில் முடிவுசெய்துதான் அந்த ஊழியரை வேலைக்கு எடுத்தனர். அவரும் தன் திறமைகளுக்கு ஏற்ப சரியாகத்தான் வேலை செய்தார். அதேசமயம் அவருக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவதில் உள்ள சிக்கலை மூடிமறைத்துவிட்டார். வாடிக்கையாளருடன் எல்லா நேரங்களிலும் பேச வாய்ப்பு கிடைக்கும் என்ற சொல்ல முடியாது. சில வாடிக்கையாளர்களுக்கு எழுத்துப்பூர்வமான தொடர்புகள் தான் இருக்கும். நாம் எழுதும் மின்னஞ்சலும், கடிதமும் தெளிவாக இருந்தால், வாடிக்கையாளருக்கு எந்தவித குழப்பமும் இல்லாமல் புரியும். ஒருவேளை புரியவிட்டால், சூழ்நிலைக்கேற்ப விபரீதங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். முந்தைய காலங்களில் தவறான கடிதங்களாலும், தகவல் பரிமாற்றங்களாலும் சில போர்களே நடந்ததாக வரலாறுகள் உள்ளன. நாம் எழுதுவதுதை வாசிக்கும் அடுத்த நபருக்கு, நாம் சொல்லவருவது அவ்வண்ணமே புரிந்தால் நன்று. நம் எழுத்து அப்படி தெளிவாக இல்லாவிட்டால் புரிதல் மாறுபடும். சூழ்நிலைக்கேற்ப விபரீதங்களும் நிகழக்கூடும்.
நீங்கள் காதல் கடிதம் எழுதியிருக்கலாம். வேலை வேண்டி கடிதம் எழுதியிருக்கலாம். எழுத்துப்பிழைகளோடு அந்தக் கடிதங்களை இருந்தால் படிப்பவருக்கு உங்கள் மீது என்ன அபிப்ராயம் வரும் என்று யோசித்துப் பாருங்கள்? ஒரு தலைவர் தான் எழுதிய கடிதத்தை அனுப்புவதற்கு முன், குறைந்தது 10 முறை படித்துப் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். தன் எழுத்தை படிப்பவர்கள், சூழ்நிலைக்கேற்ப எந்த கண்ணோட்டத்தில் எப்படி புரிந்து கொள்ளவார்கள் என்பதை ஒவ்வொருமுறையும் சிந்தித்து கடிதத்தில் திருத்தம் செய்திருக்கிறார். பல வரலாற்றுக் கடிதங்கள் அப்படித்தான் பொக்கிஷமாகின. உங்களால் அப்படியான எழுத்துக்களை படைக்க முடியுமா?
உங்களின் கடிதம் எளிமையாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டால்
படிப்பவர் எளிதில் புரிந்துகொள்வார். தவறான கருத்துப் புரிதலுக்கு வாய்ப்பிருக்காது;
உங்கள் எழுத்தின் மீது ஒரு மரியாதை வளரும்; உறவுகள் வளரும்; உணர்வு ரீதியிலான தொடர்பை ஏற்படுத்தி வலுப்படுத்த முடியும்;
உங்களால் மற்றவர்களின் தவறான கருத்துக்களை, தவறான புரிதலை மாற்ற முடியும்
சில தெளிவான கடிதங்கள், நீண்ட கால ஆவணங்களாகவும், சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றன
பேசிய வார்த்தைகள் மறந்து போகலாம். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை அவரால் மற்றவருக்கு சொல்ல முடியாமல் போகலாம். நீங்கள் சொல்வந்ததை சிறந்த எழுத்துக்களால் அனுப்பியிருந்தால், அது அவரைக் கடந்து பல புரட்சிகளுக்கு வழிவகுக்கக்கூடும். எழுத்து மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் தான் ஏர்முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்ததென்று பலரும் கூறுகின்றனர்.
சிலசமயம் நல்ல கடிதங்கள் எழுதவும், மறுமுறை வாசித்துப் பார்த்து திருத்தவும் சில கூடதல் நிமிடங்களாகலாம். ஆரம்பத்தில் வார்த்தைகள் சரிவர அமைக்க முடியாமல் நீங்கள் திணறலாம்; சில முயிற்சிகள், பயிற்சிகளுக்கு பின்னால் தான் சிறந்த எழுத்துக்களை படைக்க முடியும். முயிற்சிக்கவும், பயிற்சிக்கவும் நீங்கள் தயங்கினால், உங்கள் எழுத்துக்களுக்கு வலிமை வராது.
எழுதப் பழகுங்கள்! நல்ல எழுத்து உங்கள் உணர்வுகளையும், கருத்துக்களையும் உரிய வகையில் புரியவைத்து, நீங்கள் எண்ணியதை சாதிக்க வழிவகுக்கும்.
நீங்கள் நினைப்பதை மற்றவருக்கு சொல்வது ஒரு கலை!
நீங்கள் நினைப்பதை எழுத்துக்களாய் சொல்வது மற்றுமொரு கலை!
மற்றவரும் நீங்கள் புரிந்த கோணத்திலேயே புரிந்துகொள்வார்
என்று அனுமானித்து விடாதீர்கள்!
உங்கள் வார்த்தை தேர்வுகள் சரியாக இல்லையென்றால்
உங்களின் புரிதலும் அவரின் புரிதலும் முற்றிலும் மாறுபடலாம்!
எப்படி பேசும் போது கவனமாக பேசவேண்டுமோ
அதேவண்ணம் எழுதும்போதும் அதீத கவனம் தேவை!
எழுதியதை ஒன்றுகிரண்டுமுறை படித்துப் பாருங்கள்!
தேவையான நிறுத்தற்குறிகளை சரியான இடத்தில் வையுங்கள்!
படிப்பவர் பாமரராக இருந்தால் எப்படி புரிந்துகொள்வார் என்று
உங்களுக்கு நீங்களே ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்!
எழுதுவது மின்னஞ்சலோ, கடிதமோ, கட்டுரையோ, புதினமோ
எழுத்து எதுவானாலும், உங்கள் எழுத்தின் வெற்றி
படிப்பவர் அதே கண்ணோட்டத்தில் அதை
புரிந்துகொள்வதில் தான் அடங்கியிருக்கிறது!
- [ம.சு.கு 06.06.2023]
Comments