“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-235
எல்லாம் கண்ணோட்டமே!
நீங்கள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்புகின்ற நேரத்தில், ஒரு புதிய வாடிக்கையாளரிடம் இருந்து அழைப்பு வருகிறது. வியாபார பரிவர்த்தனை விசயமாக பேசவேண்டுமென்றும், இப்போது வந்தால் பார்க்கமுடியுமா என்றும் வினவுகிறார்கள். மாலை 6 மணிக்கு இப்படியொரு அழைப்பு. இந்த அழைப்பை ஏற்று அவரை வரச்சொல்லி, அவர் வரும்வரை காத்திருந்து பார்த்துவிட்டு போகலாம். அல்லது, இப்போது அலுவலக வேலைநேரம் முடிந்துவிட்ட காரணத்தினால் நாளை காலை பார்க்கலாம் என்று சொல்லலாம். இரண்டிலும் தவறில்லை. வீட்டிற்கு செல்லவேண்டிய அவசரமாக இருந்தால் இந்த வியாபார அழைப்பை எப்படி பார்ப்பீர்கள்? ஒரு வேலை வியாபாரத்திற்காக கடினமாக அலைந்துகொண்டிருக்கும்போது வருகின்ற வாய்ப்பென்றால் எப்படி அணுகுவீர்கள்?
ஒரு செவிட்டுத் தவளையின் கதையை பார்ப்போம். ஒரு குறிப்பட்ட தூரத்தை ஒரே தாவலில் கடக்க வேண்டுமென்ற போட்டியில், ஒவ்வொரு தவளையும் தோற்றுவந்தன. ஒரு செவிட்டு தவளை, இந்த போட்டி என்னவென்று தெரியாமல் குதிக்க முயற்சித்தது. அப்போதிருந்த எல்லா தவளைகளும் உன்னாள் முடியாது என்று பரிகசிக்க ஆரம்பித்தன. ஏனோ, அந்த செவிட்டுத் தவளைக்கு இவர்களின் பரிகசிப்புக்கள் எல்லாம் பெரிய உந்துதலாக தோன்றறியது; எல்லோரும் ஏசிக்கொண்டிருக்க, அவையாவும் போற்றல்கள் என்ற கண்ணோட்டத்தில் இந்த செவிட்டுத் தவளை மேலும் பல சாதனைகளை படைத்தன;
மாலை கடைசாத்தும் நேரத்தில் புதிய வியாபார வாய்ப்பு வருகிறது. அதை ஆக்கப்பூர்வமானதாக எடுத்தக்கொண்டு வியாபாரத்தை வளர்பவர்கள் உண்டு. அதே சமயம், வீட்டில் உறுதியளித்திருந்தால், அன்றைய தின வேலையை வேறொருவரிடம் கொடுத்து முடிக்கச் சொல்லி, எல்லோரையும் சமாதானப்படுத்தலாம்;
அந்த செவிட்டுத் தவளைக்கு யாரொருவர் திட்டினாலும், அது உந்துதலாக தெரிந்தது. அதன் கண்ணோட்த்தில், எல்லாமே சாத்தியப்படுகின்ற ஒன்றுதான். நிலைமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த தவளை முடியும் என்ற நம்பிக்கையுடனும், மற்றவர்களின் கருத்துக்கள் யாவும் ஆக்கப்பூர்வமனாதாகவும் எடுத்துக்கொண்டு வெற்றியை நோக்கி பயனிக்கிறது;
உங்கள் கண்ணோட்டம் சரியானதாக, ஆக்கப்பூர்வமானதாக அமைத்திட என்ன செய்யலாம்;
நீங்கள் எந்த விடயங்களில் ஒருசார்புத் தன்மையில் இருக்கிறீர்கள் என்ற புரிதல் உங்களுக்குள் தெளிவாக இருக்க வேண்டும்;
முடிந்தவரை, முக்கியமான சிலரின் கருத்துக்களை, கண்ணோட்டத்தை கேட்டறிந்து கொள்வது நல்லது.
உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் அதே நேரம், அடுத்தவரின் கண்ணோட்டத்தில், பாதிக்கப்பட்டவரின் கண்ணோட்டத்தில் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். சில தவறுகளுக்கான, தாமதங்களுக்கான நியாயமான காரணம் புலப்படலாம்;
அவ்வப்போது உங்கள் கண்ணோட்டத்தை, உங்கள் அடிப்படை புரிதலை நீங்களே கேள்விகேளுங்கள்;
உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விடயத்தில் எப்போதும் முழுக் கவனமாக இருந்துவாருங்கள்;
எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டுமென்று அவசியமில்லை. சில பதில்களை சொல்லமால் அமைதி காப்பதன் மூலம், அந்த பிரச்சனையின் தன்மை நீர்த்துப்போக வாய்ப்பு ஏற்படலாம்;
அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்க முற்படாதீர்கள்;
எப்போதும் வளர்ச்சியை நோக்கிய் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னிறுத்தி செயல்படுங்கள்;
எப்போதும் திறந்த மனதோடு, பல்வேறுபட்ட ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டு அவற்றில் பொருந்தக்கூடிய ஆக்கப்பூர்வமானவற்றை தேர்வுசெய்து செய்படுத்தினால் வெற்றிகிட்டும்;
எப்போதும் தொடர்ந்து படித்துக்கொண்டும், ஆக்கப்பூர்வமான / நேர்மறையான எண்ணங்களை கவனமாக அலசிக்கொண்டிருங்கள்;
வாழ்க்கையின் மீதான கண்ணோட்டத்தில், உங்கள் அனுபவம் தான் உங்களின் சிறந்த வழிகாட்டி. இருக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் உங்கள் வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் பார்த்தால், என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாத என்ற தெளிவான புரிதல் உருவாகும். அந்ம புரிதல் இருந்தால், ஏனையவைகள் எல்லாம் சரியாகிவிடும்;
உலக இயக்கத்தில் எல்லாமும் ஏதேனுமொருவகையில்
தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது;
அந்த நிகழ்வுகளை நீங்கள் – எந்த
கண்ணோட்டத்தில் அணுகுகிறீர்கள் என்பதைப்பொருத்து
அது ஆக்கத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது;
அரைகுடத்தில் பாதி தண்ணீரை பார்ப்பவர் உண்டு – அதேசமயம்
பாதி குடம் காலி என்று சொல்பவரும் உண்டு;
தெரிந்தவற்றைக் கொண்டு சிக்கலை தீர்ப்பவரும் உண்டு – தெரியாதென்று
சிக்கலில் இருந்து விலகி நிற்பவரும் உண்டு;
பிரச்சனை என்பவர்கள் கண்ணோட்டத்தில் பிரச்சனையும்
தீர்வுண்டு என்பவர் கண்ணோட்டத்தில் தீர்வுகளும்
வருவது இயல்புதானே!
நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்!
- [ம.சு.கு 01.06.2023]
Comments