top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 234 - சிறு வேலைகளை உடனுக்குடன் முடியுங்கள்!"

Updated: Jun 1, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-234

சிறு வேலைகளை உடனுக்குடன் முடியுங்கள்!


  • வீட்டின் கதவு தாழ்பாளில் ஒரு சிறு திருகு மரைகழன்று கீழே விழுந்திருந்தது. காலையில் அலுவலகம் செல்லும் போது கண்ணில்பட்ட அந்த சிறிய பழுதை, மாலை வந்ததும் சரிசெய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஒருவர் செல்கிறார். அன்றைய தினம் அவரது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. விளையாட்டாக அந்த அறைக்குள் சென்று கதவை சாத்தியபோது, அந்த பழுதடைந்த தாழ்ப்பாள் நன்றாக மாட்டிக்கொண்டது. குழந்தை எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை. சிறிது நேரம் அழுது சத்தம்போட்டுவிட்டு பின் மயங்கிவிட்டது. அந்த தாய் மகளை காணவில்லை என்று தேடியபோது, அந்த அறையில் மகள் நினைவின்றி விழுந்திருப்பது தெரிந்தது. பின் அண்டை வீட்டாரின் உதவியுடன் அந்த தாழ்பாள் உடைக்கப்பட்டு குழந்தையை மீட்டனர். இந்த மனஉளைச்சல் தேவையா?

  • மருந்துக்கடைகளில் ஆயிரக்கணக்கான மருந்துகள் இருக்கும். நீங்கள் கேட்கும் மருந்தை 5-10 விநாடிகளுக்குள் எடுத்து கொடுத்துவிடுவார்கள். அவர்கள் எப்படி எடுக்கிறார்கள் – வைக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா? எல்லா மருந்தும் அதன் பெயர்வாரியாக ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றிலுருந்து தேவையான அளவு மாத்திரையை எடுத்தவுடன், மருந்துக் கடைக்காரர், உடனே எடுத்த இடத்தில் அந்த பெட்டியை வைத்துவிடுவார். ஒருவேலை அந்த பெட்டியில் மருந்து தீர்ந்திருந்தால், உடனே அருகில் வைத்திருக்கும் புத்தகத்தில், அந்த மருந்தை வரவழைக்க வேண்டும் என்று குறித்துக்கொள்வார். எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கவேண்டும், தீருகின்ற மருந்துகளை மறக்காமல் சீக்கிரம் வரவைக்க வேண்டும் போன்ற சின்னச்சின்ன விடயங்களை காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் செய்வதால்தான், அவர்களால் ஆயிரக்கணக்கான மருந்துகளை சீக்கிரத்தில் எடுத்துக் கொடுக்கமுடிகிறது. ஒருவேலை 5 பேர் வேலைசெய்யும் மருந்து கடையில், ஒவ்வொருவரும் மருந்தை அப்புறமாக அந்த இடத்தில் வைக்கலாம் என்று தாமதித்தால், நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்?

அந்த தாழ்பாள் பிரச்சனையில் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்றாலும், அந்த ஒரு சிறிய திருகு கழன்ற பழுதை ஒருநிமிடம் செலவிட்டு காலையில் சரி செய்திருந்தால், அன்றைய மனஉளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும். சிறிய வேலைகளை உடனுக்குடன் செய்வதை விட்டுவிட்டு, மாலை செய்யலாம், நாளை செய்யலாம் என்று பட்டியலில் சேர்த்துக்கொண்டிருந்தால், வேலைகள் என்றுமே தீராது.


நம்மில் எத்தனை பேர், தேவைக்காக எடுத்த பொருளை, உபயோகித்தபின், எடுத்த இடத்தில் உடனே வைக்கிறோம். எடுத்த பொருளை உடனே அதே இடத்தில் வைப்பது ஒரு சிறிய ஒழுக்கமான முறைமை. அந்த சிறிய வேலையை உடனுக்குடன் செய்வதில் சிரமம் ஏதுமிருக்காது என்பதை நாமே நன்கு அறிவோம். ஆனால் அதை உடனே செய்யாமல்விட்டு, பின்னர் அந்த பொருளை தேட எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பீர்கள்? வீட்டில் சமைக்கின்ற போது, எடுக்கின்ற ஒவ்வொரு ஜாடிகளையும், குவளைகளையும் உங்கள் மனைவி எடுத்த இடத்தில் உடனே வைத்துவிடுவார். ஏனெனில், அதது அந்தந்த இடத்திலிருந்தால், அவர்களுக்கு சீக்கிரம் வேலை நடக்கும். அந்த ஜாடிகளை இடம்மாற்றி வைத்தாலோ, அந்த இடத்தில் வைக்காமல் கீழே வைத்திருந்தாலோ, அவற்றை தேடி எடுத்து பயன்படுத்துவது சிலநிமிட தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், உடனுக்குடன் அந்த இடத்தில் வைத்துவிடுவார்கள். இந்த சிறிய வேலைகளை தாமதிக்காமல், உடனுக்குடன் செய்வதில்தான் நம்முடைய ஒழுக்கமும், நேர உபயோகமும், பெரிய காரியங்களை சாதிப்பதற்கான சூட்சமமும் அடங்கியிருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட வேலை செய்யவேண்டும் என்று நாம் எண்ணும்போது, அது முக்கியமானதா? எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்பதை பொருத்து, உடனுக்குடன் செய்வதற்கான சாத்தியக்கூறு இருந்தால், உடனே செய்துவிடுவது சாலச் சிறந்ததாகும்.

  • பொருட்களை வேறு ஒரு இடத்திற்கு இடம் மாற்றி வைக்க வேண்டும்;

  • குறிப்பிட்ட நபரை தொலைபேசியில் அழைத்து பேச வேண்டும்;

  • வீட்டில் தீர்ந்துவிட்ட சிலபொருட்களை வாங்கிவர வேண்டும்;

  • வீட்டு குழாயில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருப்பதை சரி செய்ய வேண்டும்;

  • வீட்டு அலமாரியில் துணிகளை எடுத்து அடுக்க வேண்டும்

  • உங்கள் வாகன சக்கரத்தின் காற்று அளவை பரிசோதிக்க வேண்டும்;

  • உங்கள் அலுவலக மேசை அலமாரியை சுத்தம் செய்ய வேண்டும்;

இப்படி எண்ணற்ற சிறிய வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். இவற்றை பட்டியலிட்டு சேர்த்துக் கொண்டிருந்தால், பட்டியல் வளர்ந்து கொண்டே போகும். பல்வேறுபட்ட அவசர காரியங்கள், பெரிய வேலைகளுக்கு மத்தியில் இந்த சிறிய வேலைகளை, பட்டியலில் கவனித்து செய்வது தாமதமாகும். விளைவு, பட்டியல் என்றுமே தீராமல் வளர்ந்து கொண்டிருக்கும். அதற்கு மாறாக, இது போன்ற சிறு செயல்களை கூடிய வரை பட்டியலில் சேர்ப்பதற்குமுன் நேரடியாக முடித்துவிட முயற்சி செய்யுங்கள். இந்த சிறு வேலைகளை உடனே செய்வதனால், உங்களின் மற்ற வேலையில் ஒரு 5-10 நிமிட தாமதம் ஏற்படலாம். ஆனால், அந்த சிறிய தாமதத்திற்குள், ஒரு அவசியமான வேலைமுடிந்திருக்கும்.


இருக்கின்ற நேரத்திற்குள் எப்படி எல்லா வேலைகளையும் செய்துமுடிக்கிறார்கள் என்பதில்தான் வெற்றியாளர்களின் சாமர்த்தியம் இருக்கிறது.


நீங்கள் வெற்றியாளராக விரும்பினால்

  • கிடைக்கின்ற ஒவ்வொரு சிறிய நேர இடைவெளிகளில், மீதமிருக்கும் சிறிய வேலைகளை ஒவ்வொன்றாய் முடித்துவிட வேண்டும்;

  • அவசியமான சிறிய வேலைகளை, அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாமல், வேலைபட்டியலில் சேர்க்காமல் அந்த கணமே செய்து முடிக்கவேண்டும்;

சின்னச்சின்ன வேலைகள் நிறைய செய்யாமல் இருப்பதுதான் பல சமயங்களில் அதீத மன உளைச்சலுக்கு காரணமாகிறது. அந்த வேலைகளின் முக்கியத்துவத்திற்கேற்ப, நீங்கள் செய்யவேண்டியதானால், தாமதிக்காமல் உடனே செய்து முடித்துவிடுங்கள்;


எப்போதும் செய்ய வேண்டிய வேலைகளை

பட்டியலிட்டு திட்டமிட்டு செய்துமுடிக்க வேண்டும்

ஆனால் அந்த பட்டியலில்

நொடிப்பொழுதில் முடிக்கக்கூடிய சிறுவேலைகளை

எதற்காக சேர்க்க வேண்டும்;


அதை எழுதும் நேரத்திற்கு பதிலாக

நேரடியாக செய்துமுடிக்க வேண்டியது தானே!

நண்பனை அழைத்து பேச வேண்டுமென்று எழுதுவதற்கு பதிலாய்

உடனடியாக தொலைபேசியில் அழைத்துப் பேசினால்

இரண்டு நிமிடத்தில் வேலை முடிகிறது!


சிறு வேலைகள் நிறைய சேர்த்து

பட்டியலை பெரிதாய் காண்பிப்பதில் என்ன பயன்?

சிறிய வேலைகளை உடனுக்குடன் முடித்து

பட்டியலை சிரிதாக்கினால்

உங்கள் தன்னம்பிக்கை வளர்ந்து உத்வேகம் பிறக்குமே!


- [ம.சு.கு 31.05.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page