“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-162
சீக்கிரம் எழலாமே!!
வேலை செய்துகொண்டிருக்கும் போது, அடுத்த நிலைக்கு முன்னேற, புதிய திறன்சார்ந்தவற்றை படிக்க வேண்டிய தேவை பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான பதிவுகளை இணைய வழியில் உடனே தேடி செய்துவிடுகின்றனர். அன்றாடம் 1-2 மணி நேரம் அவர்கள் வழங்கிய புத்தகங்களை படித்தும், அவ்வப்போது கொடுக்கும் விளக்கப் படங்களை கணிணியில் பார்த்தும் அதை கற்றுத் தேற வேண்டும். தினமும் மாலை வேலை முடித்து வந்தபின் அதை பார்க்கலாம் / படிக்கலாம் என்று திட்டம் தீட்டி சேர்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு நாளும், புத்தகத்தை எடுப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. ஏன்?
காலையில் அலுவலகத்திற்கு செல்லும்முன் 2-3 வேலைகளை முடிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறீர்கள். நீங்கள் பொறுமையாக 7:30 மணிக்கு எழுகிறீர்கள். அப்போது உங்கள் வீடு பரபரப்பாக இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் ஒரு புறம் பள்ளிக்கு தயாராவதும், உங்கள் மனைவி எல்லோருக்கும் சிற்றுண்டி, மதிய உணவு சமைப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக் கிடையில், நீங்கள் திட்டமிட்ட செயல்களை தொடக்கூட முடியவில்லை. பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியபோது மணி 9 ஆகியிருந்தது. அடுத்து உங்கள் முறை இப்போது. 10 மணிக்கு அலுவலகம் செல்ல நீங்கள் பரபரப்புடன் தயாராக துவங்குகிறீர்கள். இந்த பரபரப்புக்கிடையில் எப்படி திட்டமிட்ட ஓரிரண்டு வேலைகளை முடிப்பது?
காலை முதல் மாலை வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கையில், உடலின் சுறுசுறுப்பு குறைந்து, எண்ணங்கள் / சிந்தனைகளில் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. இரவு நேரத்தில் அந்த சோர்வுகளையெல்லாம் கடந்து படிப்பதென்பது மிகவும் கடினமான காரியம். அப்படியே கஷ்டப்பட்டு உட்கார்ந்தாலும், சீக்கிரத்திலேயே கண்கள் சொக்க ஆரம்பிக்கும். அதேசமயம், இரவு சீக்கரமாக உறங்கி, அதிகாலை எழுந்தால், அந்த நேரத்தில் தொலைப்பேசி அழைப்பு தொந்தரவு இருக்காது. செய்ய நினைத்த வேலையை, ஒரே மூச்சில் எந்த தொந்தரவும் இல்லாமல், எளிதாக செய்து முடிக்கமுடியும். மேலும், காலையில் ஆரம்பிக்கும் போது, வேறு பிரச்சனைகள் குறித்து எண்ணம் அலைபாய்வது மிக குறைவாக இருக்கும்.
காலை வேளையில் செய்யலாம் என்று திட்டமிட்டால், எல்லோரும் எழுந்து அவர்கள் வழக்கத்தை துவக்குவதற்கு முன், நீங்கள் செய்தால், எந்தவொரு இடர்பாடும் இல்லாமல் சீக்கிரத்தில் செய்துவிடலாம். பிள்ளைகள் எழுந்துவிட்டால், அவர்களை கவனிக்க நேரம் போய்விடும். காலை 7:30 மணிக்கு பதிலாய், 5 மணிக்கு எழுந்து உங்கள் வேலைகளை செய்யத் துவங்கியிருந்தால், வெகு சாதாரணமாக அவற்றை முடித்திருக்கலாம்.
பொதுவாக, ஒருவர் மட்டும் தனியாக இருக்கும் இடங்களில், நேரம் குறித்தி திட்டமிடல்களில் அவர் விருப்பப்படியே எல்லாம் நடக்கலாம். ஆனால் குடும்பத்தினர் பலர் இருக்கும் போது. நிறைய இதர வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். அப்படி வீட்டில் இருக்கும் போது, உங்கள் நேரத்தில் பெரும்பகுதி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்களை மேம்படுத்த விரும்பினால், வீட்டில் உள்ளவர்கள் வழக்கமாக எழுவதற்கு 2 மணிநேரம் முன்னதாக நீங்கள் எழுந்து உங்கள் செயல்களை துவக்கினால், உங்கள் காரியம் எல்லாம் யாருடைய தொந்தரவும் இல்லாமல் சர்வசாதாரணமாக முடிந்துவிடும்.
ஒவ்வொருவருக்கும், தினமும் ஆரோக்கியமான 7 -8 மணி நேரம் உறக்கம் தேவை. இரவு 12 - 1 மணியிலிருந்து காலை 8 மணி வரை உறங்குவதற்கு பதிலாய், இரவு 9-லிருந்து காலை 4 வரையோ அல்லது 10 மணி முதல் 5 மணி வரை உறங்கி எழுந்தால், உறங்குகின்ற நேரத்தில் பெரிய வேறுபாடு ஒன்றும் இருக்கப்போவதில்லை. ஆனால் உங்களின் அடுத்தநாள் எப்படி பரபரப்பில்லாமல் இருக்கும் என்பது நீங்கள் காலையில் எவ்வளவு சீக்கிரத்தில் எழுகிறீர்கள் என்பதில் இலகுவாகிறது.
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து சூரியன் மறைந்ததும் உறங்குவது நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. மின்சார விளக்கு கண்டுபிடிப்பதற்கு முன் நம் முன்னோர்களுக்கு வேறு வழியில்லை. மின்விளக்கு வந்த பின்னால், ஆந்தை வாழ்க்கை முறைக்கு இளந்தலைமுறையினர் பலர் மாறிவிட்டனர். இரவு 1-2 மணி வரை கண்விழித்திருக்கின்றனர். இணையத்திலும் சமூக வலைதளத்திலும் அளவுக்கு அதிகமான நேரத்தை, எந்தவொரு நோக்கம் இல்லாமல் உலாவி உறக்கத்தை தொலைத்து பகல் பொழுதில் உறங்குகின்றனர். இவர்களில் ஓரிருவர் சாதித்தாலும் எண்ணற்றவர்கள் பெரிதாய் ஒன்றும் செய்வதில்லை.
தாமதமாக எழுவதால், ஒவ்வொரு நாளும் தேவையற்ற பரபரப்பும், மன உளைச்சலும், மனஅழுத்தமும் அதிகரிக்கிறது. எல்லாவற்றையும் குறித்த நேரத்திற்கு முன்னரே துவக்கி பொறுமையாக செய்வதற்கு பதிலாய், தாமதமாக துவக்கி அவசரஅவசரமாக செய்கிறோம். ஏன் இந்த அவசரம்? எதற்கிந்த தேவையற்ற பரபரப்பு?
எல்லாவற்றையும் பொறுமையாகவும், சரியாகவும், குறித்த நேரத்திலும் செய்ய வேண்டுமானால், அவற்றை சற்று முன்னதாக துவக்க வேண்டும். முன்னதாக துவக்க வேண்டுமானால், காலையில் சரியான திட்டமிடல் தேவை. அதிகாலையில் எழுந்து உங்களை மேம்படுத்த நேரம் ஒதுக்கும் வழக்கம் இருந்தால் இதுமிக எளிதாகும். அதுகாலை சீக்கிரம் எழுகின்ற வழக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்;
தாமதமாக உறங்கி, தாமதமாக எழுபவரானால், படிப்படியாக சீக்கிரம் உறங்கச் செல்லுங்கள்.
படிப்படியாக அரைமணி நேரம் முன்னர் எழுவதற்கு உங்கள் உடலை பழக்கப்படுத்துங்கள்.
உறங்கச் செல்வதற்கு முன் கைபேசி, கணிணி திரைகளில் நேரம் செலவிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு அழுத்தம் குறைந்தால், உறக்கம் நன்றாக இருக்கும்.
காலையில் செய்யவேண்டிய உடற்பயிற்சி, தியானம், போன்றவற்றிற்கு நண்பர்களை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து செய்யும் பழக்கம் உங்களை வழக்கம் தவறாமல் செய்ய வழிவகுக்கும்;
எந்த காரணத்திற்காகவும் உறங்கும் நேரத்தை குறைத்துவிடாதீர்கள். தேவைக்கேற்ப சீக்கிரம் உறங்கச் சென்றுவிடுங்கள். மற்றவை எல்லாம் தானாக நடக்கத் துவங்கிவிடும்;
உறக்கத்தை குறைக்க வேண்டாம்;
அதிகாலை சீக்கிரம் எழுந்தால்
உங்களுக்கே உங்களுக்காக இரண்டுமணி நேரம் கிடைக்கும்;
உலகில் நீங்கள் எண்ணியதெல்லாம் சாதிக்க
இந்த இரண்டுமணி நேரம்தான் மிகப்பெரிய வரப்பிரசாதம்;
உடற்பயிற்சி, தியானம், யோகம் – ஒரு மணி நேரமும்
புத்தகம், எழுத்து, திட்டமிடல் – ஒரு மணி நேரமும்
இது உங்கள் வழக்கமானால்
மூன்று மாதத்தில் நீங்கள்
புதுப்பிறவி எடுத்திருப்பதை உணர்வீர்கள்;
- [ம.சு.கு 20.03.2023]
Comments