“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-147
100% - 99% ஏற்றுக்கொள்ளப்படும் அளவு எது?
மூளையில் இரத்தக்கசிவினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞரை மருத்துவமனையில் சேர்த்தனர். எல்லா சோதனைகளையும் முடித்தபின்னர், மருத்துவர் ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்சை முறையை பரிந்துரைத்து 70%-80% குணமாக வாய்ப்பிருக்கிறதென்றார். 20%-30% குணமாகாமல் மரணிக்கவும் வாய்ப்பிருக்கிறதென்று தெளிவுபடுத்தினார். மேலும் அந்த அறுவை சிகிச்சையை சீக்கிரமாக செய்ய வேண்டும் என்றும் கூறினர். 20%-30% மரணிக்க வாய்பிருக்கிறதென்பதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் பயந்தனர். அதேசமயம் தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு 70% வாய்ப்புள்ள சிகிச்சையை தொடங்க வேறுவழியில்லாமல் ஒத்துக்கொண்டனர். எப்போதும் 100% துள்ளியத்தை எதிர்பார்ப்பவர்கள், ஏன் 70% முறைக்கு ஒத்துக்கொண்டனர்?
ஜப்பான் ஃபுகுசிமா அணுவுலை, ரிக்டர் அளவில் 7.0 அளவு நிலநடுக்கத்தை தாங்குமளவிற்கு வலுவாக நிறுவப்பட்டது. ஆனால் எல்லா கனிப்புகளையும் தாண்டி 2011 ஆம் ஆண்டு 9.0 அளவு நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டு பெரிய விபத்து நிகழ்ந்தது. 7.0 அளவுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது, அதை விட அதிகமான அளவு நிலநடுக்கம் வந்தபோது ஆபத்துக்குறியதானது. வாகனம் 60 கி.மீ வேகத்தில் பாதுகாப்பானதாக இருக்கும்போது, 120 கி.மீ வேகத்தை தாண்டும்போது அபாயகரமாகிறது. பாதுகாப்பு என்று கருதுவது ஒருகட்டத்தில் பாதுகாப்பற்றுப் போகிறது! ஏன்?
மருத்துவத்துறையில், ஒரு புதிய கண்டுபிடிப்பு, பல சோதனைகளை கடந்து எல்லா அனுமதிகளையும் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. ஆனால் அது 100% குணமளிக்குமா? என்பது உறுதியில்லை. எல்லா சோதனைகளும் 90%+ குணமளிப்பதையும், 99% ஆபத்தின்மையையும் குறிவைத்தே நடத்தி முடிக்கப்படுகிறது. மருந்தை அரசாங்கம் அனுமதிக்கும் முன், அந்த மருந்தினால் ஏற்படும் நன்மையை விட, அதனால் ஆபத்து எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. ஏன் இப்படிப்பட்ட நிலைப்பாடு?
மனிதனுக்கு வரும் எல்லா நோய்களையும் 100% குணப்படுத்த முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், சரிபடுத்தும் முயற்சியில் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் புதிய பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாதென்று அரசாங்கம் விளைவுகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க முயற்சிக்கிறது. நோய்கள் தவிர்க்கமுடியாதவை என்பது மனிதகுலம் அறிந்தது. அதை கூடியவரை வெல்வதற்கு மனிதகுலம் முயிற்சிக்கிறதென்பதை எல்லோரும் அறிந்ததால் தான், 30% தோல்வி நேரலாம் என்ற சாத்தியக்கூறு இருப்பினும், ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து தன் மகனை காப்பாற்ற முடியுமா என்று கடினமான அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர்.
அணுவுலை என்றுமே ஆபத்துதான் என்று ஒருசாரார் போராடிக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கும், அதிகரிக்கும் மின்தேவைக்கும் அணுவுலை அவசியம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். அதில் வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பாக அமைக்கலாம் என்று வாதிடுகின்றனர். 100% பாதுகாப்பான கட்டுமானம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படுவது, பின்னாளில், இயற்கை சீறும்போது ஆபத்தாகிவிடுகிறது. அன்று 100% பாதுகாப்பு என்று எண்ணியது, இன்று ஆபத்தானது. இதில் மனிதனின் தவறு ஏதுமில்லை.
வாழ்வின் யதார்த்தம், இன்று 100% சரியானது, 90% போதுமானது என்று ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று, சிலகாலங்களில் போதுமானதாக இல்லாமல் மாறிவிடுகிறது. காலம் மாறும்போது நம் எதிர்பார்ப்புக்களும் மாறிவிடுகிறது. நம் எதிர்பார்ப்புக்கள் மாறுவது ஒருபுறம் இருக்க, இயற்கையும் நிறைய மாறுகிறது.மாற்றம் மட்டுமே நிலையான உலகில் 0% - 100% வரை எல்லாமே ஒருநாள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, அதேசமயம் அதேஒன்று மற்றொரு நாள் நிராகரிக்கப்படவும் செய்கிறது.
வேறு வழியில்லை என்கிற இடத்தில், வாய்ப்பு குறைவாக இருந்தாலும், இருக்கின்ற சிறிய வாய்ப்பில் முயற்சிக்கிறார்கள். உயிர் போகும் சூழ்நிலையில், உயிரைக்காக்க வெறும் 10% வாய்ப்பிருந்தாலும், அதை மனிதமனம் ஏற்று முழுமையாக முயற்சிக்கிறது. அதேசமயம், சாதாரணமாக இருப்பவர், சிறிதளவு பக்கவிளைவை ஏற்படுத்தும் மருந்தென்றாலும் எடுத்துக்கொள்வதற்கு பயப்படுகிறார்.
வாகனப்புகை மாசென்று வாதிடுபவர், ஒருபுறம் வென்சுருட்டு புகைத்து மாசுபடுத்துகிறார்;
மது உயிரைக்குடிக்கும் என்று எத்தனைமுறை சொன்னாலும், கட்டாயம் குடல் வெந்துபோகும் என்று தெரிந்தாலும் குடிக்கிறார்கள்.
100% சதவிகிதத்தை, ஒருசில இடங்களில் வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால், சுயநலத்தோடு சிலவற்றை சகித்துக்கொண்டு ஏற்றுக்கொள்கிறோம்.
உலகை அச்சுறுத்திய கொரோனா நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட எல்லா தடுப்பூசி மருந்துகளும் 90% - 99% அளவிற்கு பயனளித்தது. 100% முழுமை இல்லாவிட்டாலும், உலகம் ஏற்றுக்கொண்டது. ஏனெனில் உயிரிழப்பை தடுக்க குறைந்தபட்சம் அதுவே போதுமானதாக இருந்தது;
பல சாலை விபத்துக்கள் நடக்கும் இடத்தில், அவற்றைத் தடுக்க வேகத்தடை ஏற்படுத்தப்படுகிறது. அதனால் 100% விபத்து குறைந்துவிடாது என்று தெரியும். ஆனால் பாதியளவேனும் குறையட்டும் என்று அரசாங்கம் முதல் முயற்சியை ஆரம்பிக்கிறது.
நீங்கள் ஆரம்பிக்கும் விடயங்களில், முதல் முறையிலேயே 100% வெற்றிகிட்டும் என்று சொல்லிவிட முடியாது. சிலசமயம் தோற்கலாம். முதல்முறையில் தட்டுதடுமாறி 50%-ஐ கடக்கலாம். பாதிகிணறு தாண்டியதை அங்கீகரத்து, அடுத்த முயற்சியை தொடர்ந்தால், அடுத்தடுத்த முறைகளில் 90%-ஐ தாண்டலாம். ஓரிரு முயற்சிகளில் முடியவில்லை என்று ஒதுங்கினால், அப்படியே விலகவேண்டியதுதான்.
எந்தத் துறையானாலும் அதில் 100% என்பது இறுதிநிலை / முழுமை / பூரணநிலை. எனக்குத் தெரிந்தவரை, 100%-ஐ அடைந்த விடயத்தையோ, 100% முழுமையான மனிதரையோ இன்றுவரை கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. அதீத துள்ளியத்தை எதிர்பார்க்கும் வின்வெளி ஆராய்ச்சித் துரையிலும், சின்னச்சின்ன தவறுகள் நேர்ந்து சிலதிட்டங்களை கடைசியில் தோல்வியடையத்தான் செய்கிறது. அந்த சிறு தவறுகளால் ஏற்படும் பொருளிழப்பிற்கு பயந்து ஆராய்ச்சிகளை கைவிட்டால், வின்னுலகத்தை எப்படி நாம் ஆள்வது?
நீங்கள் 100% துல்லியத்தை எதிர்பார்த்து
இருப்பதை கோட்டைவிட்டு விடாதீர்கள்;
அதே சமயம் 99% சதவிகிதத்தில்
போதும் என்று தங்கிவிடாதீர்கள்;
ஆன்மீகத்தில் போதுமென்ற மனம்
நிம்மதியைத் தரலாம் – ஆனால்
போதுமென்று தங்குமிடத்தில்
வீழ்ச்சி ஆரம்பிக்கிறது – தொடர்ந்து
தேடுபவருக்குத்தான் பரப்பிரம்மம் வசப்படும்;
முழுமை என்பது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும்
எப்போதும் முழுமையை நோக்கி
முயற்சித்துக்கொண்டே இருந்தால்தான்
தொடர்ந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் சாத்தியமாகும்!
- [ம.சு.கு 05.03.2023]
Comments