“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-138
பொது நியாயத்தை கருத்தில் கொள்ளுங்கள்!
ஊர் திருவிழாவில் விளையாட்டுப்போட்டி நடக்கிறது. ஊரில் உள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று எல்லா வயதினரையும் ஒன்றாக ஓட்டப் பந்தயத்தில் ஓட விடுகின்றனர். முதலில் வரும் மூன்று இளைஞர்களுக்கு பரிசுகளை கொடுக்கிறார்கள். பெண்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் சலசலப்பு ஏற்படுகிறது. போட்டி முறை சரியில்லை என்று எதிர்ப்பு வருகிறது. போட்டி நடத்துபவர்கள் எல்லா மனிதர்களும் சமம் என்பதால் எல்லோருக்கும் சமமான வாய்ப்பளித்து ஒன்றாக போட்டி நடத்தினோம் – இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார்கள்?
ஒரு அதிகாரிக்கு, அவர் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு பல இலட்சங்கள் தேவைப்பட்டது. எங்கு தேடியும் அவரால் அதை ஏற்பாடு செய்ய முடியவில்லை. கடைசி கட்டத்தில் தான் பணிபுரியும் நிறுவன பணத்தில் கையாடல் செய்தார். சிக்கிக் கொள்ளாத வண்ணம், சற்று சாதுர்யமாகவே அந்த பணத்தை உறவினர்கள், நண்பர்கள் மூலமாக வெளியே எடுத்தார். சில நாட்களில் எதேச்சையாக மாட்டிக்கொண்டார். குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வேறுவழியில்லாமல் செய்ததாக தன் பக்க தர்மநியாயத்தை வாதிட்டார். குழந்தையை காப்பாற்ற களவாடுவது நியாயமா?
இளைஞர்கள் சற்று பலம் கூடியவர்கள். விளையாட்டுப் போட்டிகளில் சற்று சுறுசுறுப்பாக ஓடக்கூடியவர்கள். பெரியவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அவர்களுக்கு சரிக்குசமமாக ஒடவிட்டால், இவர்களால் எப்படி வெல்ல முடியும். அப்படிப்பட்ட போட்டி, எப்படி சமமான போட்டியாக இருக்க முடியும்? மனிதர்கள் எல்லோரும் சமமாக இருந்தாலும், அவரவர்களின் உடல் தன்மை, வயதிற்கேற்ப ஆற்றல் மாறுபட்டிருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதானே. அந்த பொது நியாயத்தை கருத்தில் கொள்ளாமல் நீங்கள் போட்டியை நடத்தி வெற்றியென்று அறிவித்தால், அது எப்படி நியாயமானதாக இருக்கும்.
குழந்தையின் உயிரைக்காக்க தேவையானவற்றை செய்யவேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. அதற்காக களவாடினால் தவறில்லை என்று அதிகாரி முடிவெடுத்திவிட்டார். அவர், அவரது பிள்ளையென்ற குறுகிய கண்ணோட்டத்தில் அது சரியாக தோன்றியிருக்கலாம். ஆனால் அதை திருட்டுத்தனமாக செய்து பிறரது பொருளை அபகரிக்கும்போது, அதை இழந்தவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசியுங்கள். உயிர்காக்க எதுவும் செய்யலாம் என்று பணத்தை களவாடும்போது, அந்த களவினால் இன்னொரு உயிர் போனால் அப்போதும் அது நியாயமாகிவிடுமா?
பொது நியாயம், சமூக நீதி என்று அரசியல் கட்சிகள் அவ்வப்போது பேசி பல சட்டங்களை கொண்டுவந்திருக்கின்றனர். ஆனால் இன்றும் சமுதாயத்தில் ஜாதிமத ஏற்றத்தாழ்வுகளும், பணக்காரன்-ஏழை என்ற ஏற்றத்தாழ்வும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த பொதுநியாயத்தை எதற்காக வெற்றிக்காண வழிகாட்டுதல் தொடரில் பேசுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். எப்படி பொது நியாயம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமோ, அதேபோல, பொது நியாயம் என்பது வியாபாரத்திலும் சமஅளவு முக்கியத்துவமுடைய விடயமே. சிலசமயம் பெரிய முதலாளிகள், தங்களின் சுயலாபங்களுக்கு, சிறுசிறு வியாபாரிகளை நசுக்குவார்கள். சிறுவியாபாரிகள் வெளியேறி போட்டிகுறையும் போது, திடீரென்று புதியதொரு பெரிய நிறுவனம் களத்தில் இறங்கி போட்டி வேறுகோணத்தில் செல்லும்.
வியாபாரத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இருப்பவர்கள் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஏனெனில் அந்த எண்ணத்தில் உள்ள நிறுவன முதலாளிகளிடம் இருக்கும் அதிகாரிகளும் அப்படி இருப்பதால், ஒருகட்டத்தில் எல்லோரும் சுயலாபத்திற்காக போராடும்போது, வியாபாரம் படிப்படியாய் பின்னடைவை சந்திக்கிறது. தொழிலில், அந்த பொது நியதியை நீங்கள் தவறவிடும் பட்சத்தில், ஊழியர்களின் ஒத்துழைப்பை இழக்க நேரிடலாம், சில சமயங்களில் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடலாம்.
எல்லா போராளிகளும் அவர்களுக்கென்று ஒரு நியாயத்தை வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த நியாயத்தை நிலைநாட்ட அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைதான் முற்றிலும் தவறாக இருக்கிறது. ஒரு காரணத்திற்காக துவங்கி, போகப்போக அந்த காரணங்கள் திசைமாறி தனிநபர் ஆதாயங்களுக்காக அந்த போராட்டங்கள் நடப்பது பெரும் வேதனைக்குரியதே;
முதலாளிகள் அதீதமாக இலாபத்தில் நாட்டம் செலுத்தி, ஊழியர்களின் உழைப்பை உறுஞ்சியதால் தான் தொழிலாளர் போராட்டங்களும், சங்கங்களும் உருவாகின;
மேல்தட்டு மக்கள், ஏனைய மக்களை அதிகாரத்தால் கட்டுப்படுத்தி கீழ்மைப்படுத்த முயற்சிப்பதால் தான், ஏற்றத் தாழ்வுகளை களைவேன் என்ற போராளி கூட்டம் கிளம்புகிறது;
சீக்கிரமாக செல்வம் சேர்க்க வேண்டும் என்று குறுக்குவழியைத் தேடுவதால்தான், தரமற்ற பொருட்கள், தவறான அனுகுமுறைகள் வியாபாரத்தில் நுழைகின்றன.
நீங்கள் எது செய்வதானாலும், உங்களின் தனிநபர் கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்து முடிவெடுத்துவிடாதீர்கள். உங்கள் குடும்பம், சக ஊழியர், சமுதாயம் என்ற விரிந்த கண்ணோட்டத்தை எப்போதும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.
பசிக்காக திருட்டை நீங்கள் நியாயப்படுத்தலாம்;
அதேசமயம் அந்த பொருளை இழக்கிறவன் பார்வையில்
அந்த திருட்டு எப்படி நியாயமாக முடியும்;
ஒரு தனிநபராய்
நீங்கள் செய்தது சரியாக இருக்கலாம்;
ஆனால் சமுதாயத்தின் பார்வையில்
பொது நியாயம் மட்டுமே எடுபடும்;
- [ம.சு.கு 24.02.2023]
Comments