“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-125
வெற்றிக்கு நினைவாற்றல் மிகமுக்கியம்!
நீங்கள் ஆறுமாதத்திற்கு முன்னர் படித்த இராஜேஷ் குமார் / பாலகுமாரன் / சுஜாதா நாவல்களின் கதை அமைப்பும், அதில் வந்த முக்கிய கதாபாத்திரங்களும் நினைவிருக்கிறதா? ஒருமுறை நினைவுகூர்ந்து பாருங்கள். எவ்வளவு சதவிகிதம் நினைவு வருகிறது? ஒரே நாவல் மட்டும் படித்திருந்தால் எவ்வளவு நினைவிருக்கும்? அதே சமயம் 10-15 வெவ்வேறு நாவல்களை படித்திருந்தால், முன்னர் படித்திருந்த நாவல் எவ்வளவு நினைவிருக்கும் ?
பள்ளியில் பாடம் நடத்தும்போது நன்றாக கவனித்திருந்தும், தேர்வு நாளன்று அவற்றை எடுத்து மறுமுறை படிக்கவில்லை என்றால், நன்றாக படிக்கின்ற மாணவனும் குறைந்த மதிப்பெண் எடுக்கிறான். இறுதித் தேர்வில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவனிடம் அதே கேள்வித்தாளை ஒரு மாதம் கழித்துக்கொடுத்து பதில் எழுதச் சொன்னால் 60-70% மட்டுமே எடுக்கிறான். ஏன் அவன் படித்து, நன்றாக தேர்வெழுதிய பாடம், ஒரு மாதத்திற்குள்ளாக மறந்து விடுகிறது?
எண்ணற்ற நாவல்களை படிக்கிறீர்கள். அவற்றில் சிலவற்றை ஒரே மூச்சாக காலையில் ஆரம்பித்து மாலைக்குள் படித்து முடித்துவிடுகிறீர்கள். அந்த நாவலை அப்போதைக்கு நேரம் கழிப்பதற்காக படித்திருந்தால், அதை மேலோட்டமாக, வேகமாக படித்திருப்பீர்கள். அந்த கதையின் கதாபாத்திரங்களும், காட்சியும் அடுத்து 2-3 நாட்களுக்கு ஞாபகம் இருக்கும். அடுத்தவாரம் / அடுத்தமாதம் அதே அளவிற்கு ஞாபகம் இருக்கிறதா? அதேசமயம், அந்த நாவலை எடுத்து 10 நிமிடம் பக்கங்களை மெதுவாக திருப்பி சிற்சில வார்த்தைகளை படிக்கப்படிக்க, சென்றமாதம் படித்த கதை முழுமையும் நினைவிற்கு வருகிறதல்லவா!
அதேபோல மாணவர்கள் எவ்வளவு தான் ஆழமாக கவனித்திருந்தாலும் / எழுதியிருந்தாலும், மூன்று மாதம் கழித்து வகுப்பில் ஆசிரியர் திடீரென்று சோதனைத் தேர்வு வைத்தால், மதிப்பெண் குறைவாகத்தான் எடுக்கிறார்கள். அதே அடுத்தமாதம் நடக்கும் காலாண்டு / அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். எதனால் இந்த பெரிய வித்தியாசம்? நடைமுறையில் திடீர் சோதனைத் தேர்விற்கு முன்னர் அந்தப் பாடங்களை மறுமுறை வாசிக்கவில்லை. அதேசமயம் திட்டமிடப்பட்ட காலாண்டு / அரையாண்டு தேர்விற்கு முன்னர் அவர்கள் கற்றறிந்த பாடங்களை மீண்டுமொருமுறை படித்து நினைவு கூர்ந்து விடுகிறார்கள். தேர்விற்கு முந்தைய தினங்களில் நினைவுகூறப்பட்ட பாடம், தேர்வுநாளன்று எளிதில் நினைவிற்கு வருகிறது.
ஆம்! நாம் படித்தது அப்போதைக்கு நம் மனதில் நன்றாக பதிந்திருக்கும். ஆனால் சில நாட்களுக்கு பின் சிலவற்றை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த புத்தகத்தை சிலதினங்களுக்குப்பின் 10 நிமிடம் திருப்பினால், கிட்டத்தட்ட எல்லாமும் ஞாபகத்தில் புதுபிக்கப்படுகிறது. நீங்கள் கற்ற இறைபாடல்களானாலும், திரைப்படப்பாடல்கள் ஆனாலும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நினைவுகூறப்பட்டு வந்தால், அவை எளிதாக எத்தருணத்திலும் நினைவில் இருக்கிறது. 1-2 வருடம் நினைவுகூறத்தவறினால், அந்தப் பாடல்களில் 70-80% மறந்து போகிறது. எதுவும் நினைவில் இருக்கவேண்டுமென்று விரும்பினால், நமக்கு தேவையானவற்றை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வாசித்து / நினைவுகூர்ந்து, அந்த நினைவுகளை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும், தவறினால், படிப்படியாக அவை நினைவில் இருந்து அழிந்து போகும்.
இந்த நினைவுகூறுவதற்கும், வாழ்வில் வெற்றிபெறுவதற்கும் என்ன சம்பந்தம் என்ற நீங்கள் கேட்கலாம். நானறிந்த வரை. சிறந்த வெற்றியாளர்கள் எல்லோருமே அவரவர் துறைகளில் அதீத நினைவாற்றல் கொண்டவர்களே. அவர்கள் வேலை / தொழில் செய்ய ஆரம்பித்ததுமுதல், இன்று வரையிலும் கற்ற பாடங்கள், வியாபார நுணுக்கங்கள், வாடிக்கையாளர் தேவைகள், வாடிக்கையாளர் அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பார்கள். எந்தவொரு இக்கட்டாண சூழ்நிலையிலும், அவற்றை சமாளிக்க முன்னர் என்ன செய்தோம் என்பதை மனதில் நினைவுகூறுவார்கள். அந்த அனுபவ அறிவை சரியாக நினைவுகூர்ந்து, அந்த அனுபவங்களுக்கேற்ப சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதில்தான் அவர்களுடைய வியாபாரத்தின் / வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது.
உங்கள் ஊழியர்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்து முடிவெடுத்தால் நீங்கள கொடுத்துவைத்தவர் என்பேன். அவர்கள் எல்லாவற்றையும் சரியாக நினைவில் வைத்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். புதிதாய் வந்த ஊழியருக்கு பழைய காரணங்கள் பல தெரியாது. ஊழியருக்கு தெரியவில்லை என்றால், அதை அவர்கள் ஒரு காரணதாக சொல்லி சமாளித்துவிடுவார்கள். ஆனால், அப்படி தெரியாமல் நல்ல வியாபார வாய்ப்பு கைநழுவிபோனால், நஷ்டம் யாருக்கு?
ஊழியர் அடுத்த மாதம் முதலாம் தேதிவந்தால், சம்பளம் வாங்க வந்துவிடுவார். ஒருமுதலாளியாக நீங்கள எங்கிருந்த பணத்தை ஏற்பாடு செய்வது. தவறுகள் ஏதும் நிகழாத வண்ணம், உங்கள் அனுபவத்தில் கற்ற அறிவைக்கொண்டு ஊழியர்களின் செயல்களை நிர்வகிப்பதும், உருவாகும் எல்லா பிரச்சனை / சிக்கல்களுக்கும் தீர்வுகாண்பதையும் நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். எந்த ஊழியர் எதை மறந்தாலும், இழப்பு முதலாளிக்குத்தான். இழப்புக்களை குறைக்க, ஊழியர் மறந்தாலும், நீங்கள் மறவாமல் பின்தொடர்ந்தால் தான், வெற்றி கைநழுவாமல் இருக்கும்.
ஊழியரும் மறந்து, முதலாளியும் மறந்து நின்றால், செய்யவேண்டியவைகள் எதுவும் குறித்த நேரத்தில் நடந்து முடியாது. கணிதமோ, இயற்பியலோ, வேதியியலோ, உயிரியலோ, வரலாறோ, வியாபாரமோ, படித்த அடிப்படைகள் யாவும் முழுமையாக நினைவில் இருக்க வேண்டும். இன்ற ஒரு துறை அறிவைமட்டும் கொண்டு சாதிப்பது கடினம். நிறைய படிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யாருக்கு உலகத்தைப் பற்றியும், பொருட்களைப் பற்றியும், வியாபாரத்தைப்பற்றியும், தெரிந்திருக்கிறதோ, யாரொருவர் தனக்கு தெரிந்த அறிவை தொடர்ந்து புதிப்பித்துக் கொள்கிறார்களோ? அவரால் மட்டுமே வியாபாரத்தில் வரும் எல்லாவகையான சவால்களையும் தைரியமாக எதிர்கொண்டு சிந்தித்து முடிவெடுக்க முடியும்.
நிறைய வாசியுங்கள்
தேவையானவற்றை குறிப்பிட்ட இடைவெளியில்
மறுமுறையும் வாசியுங்கள்;
நினைவாற்றல் தான் வெற்றியின் ஆரம்பம்;
உங்கள் தொழிலில்
உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கவேண்டியது
உங்கள் வெற்றிக்காண அத்தியாவசியத் தேவை!
உங்களால் நினைவுகூற முடியாவிட்டால்
அந்தந்த தருணங்களில் வரும் ஏராளமான வாய்ப்புக்கள்
தேவையில்லாமல் கைநழுவிப்போகும்;
மறந்துவிடாதீர்கள்!
உங்கள் நினைவாற்றல் தான் உங்கள் வெற்றியின் ஆரம்பப்புள்ளி;
- [ம.சு.கு 11.02.2023]
Comments