“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-122
முடிவெடுக்க காலம் தாழ்த்தாதீர்கள்!
ஒருசிலர், உணவகங்களுக்கு சென்றால், முதலில் கடைக்காரரிடம் என்ன இருக்கிறது என்று முழுப்பட்டியலை கேட்பார்கள். பின்னர், அதில் இப்போது என்ன சாப்பிடுவது என்று முடிவெடுக்க நீண்ட யோசனை செய்வார்கள். உடன் வந்தவர்களிடம் முதலில் அவர்களுக்கு தேவையானவற்றை கூறச் சொல்வார்கள். அதன்பின்னும் இவர்களின் குழப்பம் தொடரும். இப்போது இதைச் சாப்பிடலாமா? அல்லது வேறொன்றையா? என்று தேர்ந்தெடுப்பதில் அதீதமாக குழம்புவார்கள். அதிலும் உச்சம் என்னவென்றால், அந்த நீண்ட யோசனைக்குப் பிறகு, இரண்டு இட்லி மட்டும் தருமாறு கேட்பார்கள்!! அந்த கடைக்காரர் மனதில் நினைத்துக்கொள்வார் – “இரண்டு இட்லிக்குத்தான் இவ்வளவு யோசனையா?” என்று!!
வியாபாரத்தில், பல பொருட்களின் விலை அன்றாட பொருள் வரத்து, மக்களின் தேவை எவ்வளவு என்பதற்கு ஏற்ப நிர்ணயமாகும். உத; விவசாயப்பொருட்கள் பெரும்பாலும் அன்றைய சந்தை வரத்து அளவைப்பொருத்தே நிர்ணயமாகிறது. ஒரு நகர சந்தையில், காலையில் குறைவாக பூக்கள் வந்ததன் காரணமாக ஒரு கிலோ ரூ.100/-க்கு பூ விற்கப்படுகிறது. மதியம் திடீரென பெரிய அளவில் பூக்கள் சந்தைக்கு வரவே, மொத்தவிலையில் பூவின் விலை ரூ.50/-ஆக சரிகிறது. அப்போது வியாபாரிகள் தங்களிடம் கையிருப்பாக இருக்கும் விலை அதிகம் கொடுத்து வாங்கிய பூக்களை, விலையை குறைத்து விற்க வேண்டிய கட்டாயம் வரும். உடனுக்குடன் முடிவெடுத்து ரூ.50/- விற்றால், மாலைக்குள் இருக்கும் பூக்களை விற்று, போட்ட முதலீட்டில் பாதியை மீட்கலாம். ஒருவேளை விலைகுறைக்க தாமதித்தால், விற்பனை நடக்காது. முக்கியமான விற்பனை நேரத்தில் 1-2 மணிநேரத்திற்கு முடிவெடுக்காமல் தவறவிட்டால், பின்னர் முடிவெடுத்தும் பெரிதாய் பயனேதும் இருக்காது. விற்காமல் நிற்கும் பூக்கள் முற்றிலுமாய் நஷ்டம் தான்.
தனக்கு அப்போதைக்கு உண்பதற்கு என்ன உணவு வேண்டும் என்று முடிவெடுக்கவே அதீதமாக குழம்புகின்ற நபர்களால், சிக்கலான சமயங்களில் எப்படி முடிவெடுத்து பிரச்சனைகளை சமாளிக்க முடியும். இன்று என்ன சமைப்பது என்று உங்கள் மனைவி கேட்கும்போது, உடனுக்குடன் சொன்னால், அவர் அதை சமைப்பது குறித்து முடிவுசெய்வார். நீங்கள் யோசித்து சொல்கிறேன் என்று 2 மணி நேரம் கழித்து சொன்னால், மதிய உணவிற்கு பதிலாய் இரவுதான் உணவுண்ண வேண்டிவரும்.
வியாபாரத்தில், விற்பனையை அதிகரிக்க உங்களின் போட்டி நிறுவனங்கள் எண்ணற்ற மாற்றங்களை செய்வார்கள். திடீரென்று 50% கழிவையும் அறிவிக்கலாம். அந்த சந்தையின் தற்போதைய நிலவரங்களை தொடர்ந்து கண்கானித்து, அப்படி வரும் திடீர் அறிவிப்புகளுக்கு ஏற்ற மாற்று அறிவிப்புக்களை முடிவு செய்ய வேண்டும். சில முடிவுகளை அன்றைய களத்தில் அப்பொழுதே எடுத்தாக வேண்டும். அதைவிடுத்து மேலாளரைக்கேட்டு நாளை சொல்கிறேன் என்று முடிவெடுப்பதை தள்ளிப்போட்டால், அன்றைய வியாபாரமும், சில வழக்கமான வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடலாம்.
விபத்திற்கான அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் மருத்துவர், விபத்துக்குள்ளாகி கொண்டுவரப்படும் நபர்களின் உடல் உறுப்புக்களின் சீர்குலைவிற்கேற்ப வேகமாக முடிவெடுத்து இயங்க வேண்டும். தேவைப்பட்டால் நோயாளியின் கையையோ, காலையோ அகற்றவேண்டியிருப்பின், அந்த முடிவை அவர் உடனுக்குடன் எடுத்து செயல்படுத்தினால் தான், அந்த நபரை காப்பாற்ற முடியம். அப்படி தேவைப்படும் முடிவை எடுக்காமல், இன்னொருவரை கேட்டு செய்யலாம் என்று காலம் தாழ்த்தினால், அந்த நபரின் உயிரை காப்பாற்றுவது கடினமாகி விடும்.
ஏன் முடிவுகளை எடுக்க தாமதிக்கிறார்கள் என்று அலசினால்;
நிறைய தேர்வுகளை முன்வைத்து, அவற்றின் எல்லா சாதக-பாதகங்களையும் அதீதமாக அலசி குழம்பிப்போய் விடுகிறார்கள்;
எங்கே தங்களின் முடிவு தவறாகிவிடுமோ? தோற்றுவிடுவோமோ? என்ற பயத்தில் முடிவெடுப்பதற்கு பயப்படுகிறார்கள்;
மற்றவர்கள் முடிவெடுக்கட்டும், அதையே நாமும் பின்பற்றுவோம் என்ற ஆட்டுமந்தை குணத்தோடு கூட்டத்தை தொடர நினைப்பவர்கள் தாமதிக்கிறார்கள்;
நிறைய ஆசைகள் இருக்கும். அவை எல்லாவற்றையும் ஒருசேர எப்படி செய்வதென்று தொடர்ந்து யோசித்து, கையிலிருக்கும் வேலைக்குரிய முடிவை எடுப்பதில் தாமதிக்கிறார்கள்;
நிறைய தகவல்களை சேகரிக்கிறார்கள். முடிவெடுக்க இன்னும் நிறைய தகவல்கள், சந்தை நிலவரங்கள் வேண்டுமென்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள. அந்த தேடலிலேயே நேரத்தை செலவிட்டு, முடிவெடுத்து செயல்படுத்த தாமதிக்கிறார்கள்.
என்ன படிப்பது? எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது? என்ன சாப்பிடுவது? என்ன மாதிரி வீடு வாங்குவது? எதில் முதலீடு செய்வது? எங்கு சுற்றுலா செல்வது? என்று எண்ணற்ற விடயங்களில் நீங்கள் முடிவெடுக்க வேண்டும், எல்லோருக்கும் ஏற்ற முடிவை எடுக்க, அதற்குரியவர்களிடன் கலந்தாலோசிக்கலாம். ஆனால் அந்த ஆலோசனையை ஆறு மாதத்திற்கு செய்து கொண்டிருந்தால் எப்படி? நீங்கள் எடுக்கப்போகும் முடிவு சரியோ? தவறோ? ஏதேனுமொன்றை எடுத்துத்தான் ஆகவேண்டும். முடிவுகள் சரியாகி வென்றால் சரித்திரம். ஒரு வேளை தோற்றால், அவை அனுபவமாகி அடுத்த முயற்சிக்கு வழிகாட்டும்.
சரியோ-தவறோ, பெரிதோ-சிறிதோ,
உங்களுக்கு பயன் இருக்கிறதோ-இல்லையோ,
நீங்கள் முடிவெடுக்கவேண்டிய சூழலில்
நீங்கள் தான் முடிவெடுத்தாக வேண்டும்:
பின்னர் சொல்கிறேன் என்று காலம்தாழ்த்துவதில்
காலம் தான் கரையுமே தவிர, பலன் ஏதுமில்லை!
உரிய நேரத்திற்குள் உரிய முடிவுகளை
தயங்காமல் தைரியமாக எடுத்தவர்கள் மட்டுமே
இன்று வெற்றிப்படியில் முன்னிருக்கிறார்கள்;
ஏனையவர்க்கு இன்னும் அந்த ஏணியே
எட்டாத தூரத்தில்தான் இருக்கிறது!!
- [ம.சு.கு 08.02.2023]
Comments