“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-118
உடல்வலிக்காமல் தங்கப்பதக்கமா?
தடகள விளையாட்டில், சிகரமாக கருதப்படும் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெல்ல, ஒவ்வொரு வீரரும், எத்தனை கனவுகளுடன் எத்தனை வருடங்களாய் பயிற்சி மேற்கொள்கிறார்கள் தெரியுமா? நீச்சல் துறையில் பதக்கம் வென்றவீரர், தனக்கு நினைவுதெரிந்த நாள்முதல் இன்றுவரை தினந்தோறும் குறைந்தது 3 மணி நேரம் முதல் அதிகபட்சம் 13 மணி நேரங்கள் வரை பயிற்சி எடுத்ததாக கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கால்வைக்கும் முன்னர், அவர் கிட்டதட்ட 12,000 மணிநேரத்திற்கு மேல் பயிற்சி செய்துள்ளார். கைவலி, கால்வலி, ஜுரம், சளி என்று எந்தவொரு சாக்கீடும் சொல்லாமல், தினம் தினம் எல்லா வலிகளையும் தாண்டி உழைப்பதனால் மட்டுமே வெற்றி சாத்தியமாகிறது.
பெரும் பணக்காரனாக ஆசைப்பட்டால், உழைப்பில்லாமல் அது சாத்தியமாகுமா? பரிசுச் சீட்டில் பலகோடி கிடைத்து ஒரே இரவில் செல்வந்தா் ஆனவர்கள் இருக்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம்! நூறு கோடிக்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் நம் தேசத்தில், அப்படி எத்தனை பேர் பரிசுச்சீட்டில் பணக்காரராகி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு நபர்களே வென்றிருந்தாலும், அவர்களில் ஒருவரிடம்கூட அந்த செல்வம் 5 ஆண்டுகள் நீடிக்கவில்லை. கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் அந்த அதிர்ஷ்டத்தை நம்பி காத்திருப்பதானால், எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள்? ஒருவேளை அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வரவே இல்லையென்றால்??
எல்லா விளையாட்டுக்களும் இன்று உலகளவில் மிக கடினமாகிவிட்டன. நாம் சாதாரணமாக குதித்து தாண்டுவதானால், அதிகபட்சம் 3 மீட்டர் தூரம் தாண்டலாம். ஆனால் உலகசாதனையானது 9 மீட்டர் அளவில் இருக்கிறது. எல்லா விளையாட்டுக்களிலும் நம்முடைய இயல்பான செயல் அளவைவிட 2-3 மடங்கு சிறப்பாக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த சாதனைகளை முறியடிக்க வேண்டுமானால், எந்த அளவிற்கு உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் தேவைப்படும் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.
யதார்த்தம் யாதெனில், இந்த கடினமான சாதனைகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் தொடர்ந்து முறியடித்துக் கொண்டே இருக்கிறார்கள். எண்ணற்ற புதியமுறை பயிற்சிகளை மேற்கொண்டு, உடலையும் மனதையும் வலுவேற்றி விடாமுயற்சியில் வெற்றிகொள்கிறார்கள். சிந்தப்படும் வேர்வைத்துளிகள் யாவும் ஒருநாள் வெற்றிப்பதக்கமாக மாறுகிறது. அந்தளவிற்கு வேர்வை சிந்த நீங்கள் தயாரா?
முதலாளித்துவ கொள்கைகள் நிறைந்துவிட்ட இன்றைய பொருளாதார சந்தையில், நீங்கள் செல்வம் சேர்க்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான உழைப்பையும், சாமர்த்தியத்தையும் வெளிப்படுத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இன்றைய உலகின் பெரும்பணக்காரர்கள் பலரும் தங்களின் உழைப்பினால் சேர்த்த செல்வங்களால் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்தால், எந்த அளவிற்கு விடாமுயற்சியுடன் எல்லா தோல்விகளையும், அவமானங்களையும், புறக்கணிப்புக்களையும் தாண்டி வென்றார்கள் என்பது தெரியும். அந்தமாதிரி கடினமான உழைப்பில்லாமல் பரிசுச்சீட்டில் கோடிகளை வெல்வேன் என்று நீங்கள் கனவுகாண்பதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?
உழைக்காமல் வெற்றிகிடைக்காது என்று காலங்காலமாய் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருந்தாலும், இன்றும் எண்ணற்ற மக்கள் தொடர்ந்து குறுக்குவழியில் எப்படி வெற்றிபெறுவதென்றே தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இன்னும் அவர்களுக்கு புரிவதில்லை? இதிலும் வேதனைக்குரிய விடயம் யாதெனில், கற்றவர்கள் மத்தியிலும் இந்த குறுக்குவழி புத்தி அதிகமாக இருப்பது.
ஆறறிவு கொண்ட மனித இனத்தின் எல்லா துயரங்களும், வேர்வை சிந்தாமல் எப்படி வளமாக வாழ்வதென்ற தேடலில்தான் ஆரம்பமாகிறது. பிறரது உழைப்பை சுரண்டி ஒருகூட்டம் உண்ணுவதால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, சமுதாயம் சமநிலையிழந்து, போட்டி பொறாமைகள் வளர்கின்றன. உடல்நோகாமல் பணம் சேர்க்க பிறர் உழைப்பை திருடுவதால், பொறாமைகள் வளருகின்றன. எல்லோரும் நியாயமாக உழைத்து வாழ தொடங்கிவிட்டால், சமுதாயத்தில பசி, பட்டினி என்ற சொற்களே இல்லாத அளவிற்கு மனிதகுலம் மேன்மை பெரும்.ஆனால் மனிதனின் பேராசை அவனுடன் ஒட்டிப்பிறந்தது. அதை மாற்ற இறைவனாலும் முடியாது.
நீங்கள் வேர்வை சிந்தாமல் வெற்றிபெற விரும்புகிறீர்களா? ஒருவேளை அது சிலருக்கு சாத்தியப்பட்டிருந்தாலும் அது நிரந்தரமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றிபெற உழைப்பு தேவை. உழைப்பென்பது இங்கு உடலை வருத்துவது மட்டுமில்லை. உங்களின் சாமர்த்தியமும் சேர்ந்ததுதான். அதற்காக பிறரை ஏமாற்றி அவரது வெற்றியை பறிப்பது சாமர்த்தியமாகிவிடாது. உங்களின் உழைப்பில், ஒரு நாளில் செய்யவேண்டிய வேலையை சில மணிநேரங்களில் நீங்கள் முடித்தால் அதுதான் உங்களின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தைக் கொண்டு வெற்றியை நோக்கிய பயனத்தை வேகப்படுத்துங்கள். வேர்வை சிந்தாமல் வெற்றி இல்லை. ஆனால் வேர்வையின் விலை ஆளுக்குஆள் வேறுபடுகிறது. ஒரு மணிநேரத்தில் ரூ,100/- சம்பாதிப்பவரும் இருக்கிறார், ரூ.1,00,000/- சம்பாதிக்கிறவரும் இருக்கிறார். இதில் நீங்கள் எத்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களின் சாமர்த்தியம். அடுத்தவரை ஏமாற்றி நீங்கள் ஒருமுறை சம்பாதித்தால், உங்கள் பெயரும் கெட்டு, அடுத்து வரும் வாய்ப்புக்களும் குறைந்துவிடும்.
வெற்றி பதக்கத்திற்கு வேர்வைதான் அடிப்படை;
செல்வம் சேர்ப்பதற்கு உழைப்புதான் உண்மைவழி;
ஓடாமல், உழைக்காமல்
வெற்றிபெற எண்ணுபவரக்ளை
பெரிதாய் பொருட்படுத்தாமல்,
உழைப்பையும் சாமர்த்தியத்தையும்
அவசர-அவசியங்களுக்கு ஏற்ப
பயன்படுத்தி வெற்றிகாணுங்கள்;
- [ம.சு.கு 04.02.2023]
Comentarios