top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-117 - கற்றலுடன் கற்பித்தலும் முக்கியமாகிறது!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-117

கற்றலுடன் கற்பித்தலும் முக்கியமாகிறது!


  • சிறுவியாபாரிகள் பலர், தங்களின் வியாபார விவரங்கள் யாவற்றையும் தங்களின் முழுகட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அதிகமாக எதையும் யாருக்கும் சொல்லித்தர மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் திடீரென்று தவறிப்போகும் பட்சத்தில், அந்த தொழிலை ஏற்று நடத்த ஆளில்லாமல், அப்படியே மூடப்பட்டுவிடும். தங்களின் வியாபாரம், தற்போதைய நிலைபற்றி தன் மனைவி மக்களுக்கு சொல்லிக்கொடுக்காமல், குறித்து வைக்காமல் நிறையபேர் அஜாக்கிரதையாக இருந்துவிடுவதால், அந்த நிறுவனங்களை உடனடியாக பொருப்பேற்று நடத்த அவர்களின் குடும்பத்தினரால் முடிவதில்லை. அப்படியே வேறுவழியில்லாமல் நடத்தினாலும், மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்பட்டு, நஷ்டம் ஏற்படுகிறது. திடீர் மரணம் என்பது அபூர்வம் என்றாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எப்போதும் ஒரு சிறு திட்டமிடல் இருந்து கொண்டே இருக்கவேண்டும். நாம் இல்லாத பட்சத்தில் என்னென்னவற்றை, யார்யார் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதை கணித்து, அவர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பது முக்கியம்.

  • தனிமனிதனாக உங்களின் திறமைகளையும், யதார்த்த அறிவையும் அனுபவத்தில் வளர்த்திருப்பீர்கள். உங்களின் அனுபவ அறிவிற்கு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பும், நிறைய வருவாயும் கிடைக்கலாம். உங்களின் அனுபவ அறிவை உங்களிடமிருந்து கற்று, அவற்றை உங்களுக்கு பின் செய்ய யாருமில்லாவிட்டால், உங்களோடு அந்த அறிவு அழிந்துபோகும். அதேசமயம், பிறருக்கு கற்பித்தால், சில தினங்களில் அவர்கள் உங்களுக்கு எதிரே கடைதிறந்து விடக்கூடும் என்ற பயமும் உங்களுக்கு இருக்கும். கற்பித்தால் போட்டி உருவாகுமென்று பயம்! கற்பிக்காவிட்டால் உங்களோடு அந்த அறிவு அழிந்துவிடுமென்ற கவலை? என்னதான் செய்வது?

ஒரு தனிமனிதனாக வியாபாரத்தை சிறிய அளவில் செய்துவந்தால், வருவாயும் அளவுடனே இருக்கும். நீங்கள் மர வேலை செய்யும் ஆசாரியாக இருந்தால், உங்கள் திறமையில், நல்ல வேலைப்பாடுடன் கூடிய பொருட்களை உருவாக்கலாம். ஆனால் உங்களுக்கிருக்கும் 24 மணி நேரத்தில் எவ்வளவு செய்யமுடியும் என்று ஒரு எல்லை இருக்கிறது. அதேசமயம், நிறைய ஊழியர்களை சேர்த்து, அவர்களுக்கு படிப்படியாய் பயிற்சியளித்து உங்கள் வியாபாரத்தை பெருக்கினால், நீங்களும் நிறைய வருவாய் ஈட்டுவதோடு, பலருக்கு கற்றுக்கொடுத்து வேலைவாய்ப்பு வழங்கிய திருப்தியும் கிடைக்கும்.


நீங்கள் சட்டம் படித்தவராக இருந்தால், உங்களால் தனியாக எத்தனை வழக்குகளுக்கு தயார் செய்து வாதாட முடியும். அதேசமயம் நிறைய உதவியாளர்களை வைத்து பயிற்சியளித்தால், நிறைய வழக்குகளை உங்களால் கையாள முடியும். ஒருபுறம் கற்பித்தால், உங்களுக்கு போட்டி உருவாகிவிடும் என்று பயந்தால், பயந்துகொண்டே இருக்கவேண்டியது தான். தனிமனிதனாக உங்களால் எவ்வளவு செய்யமுடியுமோ, அந்த எல்லைவரைதான் சாத்தியம். நீங்கள் பெரிய சாதனைகளை புரிய வேண்டுமானால், உங்களோடு எண்ணற்றவர்களை சேர்த்து, பயிற்சி கொடுத்து செய்தால் மட்டுமே மிகப்பெரிய காரியங்களை, திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.


உங்களின் அனுபவங்களை சக ஊழியர்களுக்கு, உங்கள் கீழ்பணிபுரிபவர்க்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தால் தான், நீங்கள் அடுத்த நிலைக்கு முன்னேற முடியும். உங்களின் இப்போதைய பணிக்கு நீங்கள்மட்டுமே இன்றியமையாதவராக இருந்தால், அதுவே உங்களின் அடுத்த கட்ட பதவி உயர்வு, வளர்ச்சிக்கு தடையாகிவிடும்.


உங்களின் வளர்ச்சிக்கு, அடுத்த கட்ட பணிகளை கற்பதோடு நின்றுவிடாமல், உங்கள் பணிகளை / அனுபவங்களை அவ்வப்போது உங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் தான், நீங்கள் பதவி உயர்வு பெரும்போது உங்கள் தற்போதைய பணிகளை செய்ய அடுத்த ஆள் தயாராக இருக்கும். நிறுவனத்திற்கு நீங்கள் இன்றியமையாதவராக இருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட பணிக்கு நீங்கள் இன்றியமையாதவராக முத்திரை குத்தப்பட்டுவிடக் கூடாது.


“கற்றல்” உங்களின் திறன்களை வளர்த்து, வாழ்க்கையை தைரியாக எதிர்கொள்ள வைக்கும். அதேசமயம் “கற்பித்தல்” உங்களின் அறிவை மேலும் ஆழப்படுத்தி, உங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும். பிறருக்கு கற்றுக்கொடுப்பதால் போட்டி உருவாகும் என்ற எண்ணம் சிறுபிள்ளைத் தனமானது. அப்படி உருவாகும் போட்டிகளைத் தாண்டி உங்கள் பொருட்களின் தரமும், சேவையும் இருந்தால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. அரைத்தமாவையே அரைத்துக்கொண்டிருக்கும் தொழிலில் இந்த போட்டிகள் சிறிது பாதிப்பை ஏற்படுத்தலாம். நாளுக்குநாள் புதுமைகளை கண்டுவரும் தொழில்நுட்ப யுகத்தில், தினம் தினம் புது திறமைகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் எல்லோரும் இருக்கிறார்கள். கற்றலும்-கற்பித்தலும் இங்கு அடிப்படை தேவையாகிவிட்டது. எதுவொன்றை செய்யத்தவறினாலும், உங்களின் வளர்ச்சி தடைபடும்.


கல்வியோ, விளையாட்டோ, வியாபாரமோ

கற்றலைத் தாண்டி யாரொருவர் கற்பித்தலிலும் சிறக்கிறாரோ

அவரால் தன் அறிவை விசாலப்படுத்தி

தன்னோடு தன் சுற்றத்தையும் நட்பையும் சேர்த்து

அரும்பெரும் சாதனைகளை படைக்க முடியும்;


தனிமனிதானாய் செய்யவல்லது சிறிதளவே

உங்களின் திறன்களை பகிர்ந்து

குழுவை பெரிதாக்கினால்

செய்வதற்கரியதும் எளிதாய் செய்யப்படும்!


- [ம.சு.கு 03.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page