top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-115 - ஆர்வத்துடன் பொறுமையும் முக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-115

ஆர்வத்துடன் பொறுமையும் முக்கியம்!


  • உடற்பயிற்சிக் கூடங்களில், ஆண்டின் துவக்கத்தில் கூட்டம் நிரம்பி வழியும். ஜனவரி முதல் 2-3 வாரங்களுக்கு இந்த கூட்டம் இருக்கும். இந்த கூட்டத்தில் பாதிபேர் மட்டுமே அடுத்த மாதம் வருவார்கள். எண்ணற்றவர்களுக்கு தங்களின் தொப்பையை குறைக்க வேண்டுமென்று ஆசையிருக்கிறது. அதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமென்பதை புரிந்துகொண்டு, புத்தாண்டு தீர்மானமாய் உடற்பயிற்சியை துவக்குவார்கள். உடனடியாய் உடற்பயிற்சி நிலையங்களில் உறுப்பினராகி, காலை 5-6 மணிக்கு சென்று ஆர்வத்துடன் செய்வார்கள். ஆனால் இந்த ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு நீண்டநாட்கள் நீடிப்பதில்லை. ஆண்டான்டு காலமாய் தின்று ஏற்றிய எடையை / தொப்பையை சீக்கிரத்தில் குறைக்க ஆசையிருக்கலாம். ஆனால் அதற்குரிய பொறுமை ஏன் இருப்பதில்லை?

  • ஆட்சிப்பணி தேர்விற்கு வருடாவருடம் பல இலட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 1%-ற்கும் குறைவான நபர்களே இறுதியில் வெற்றி பெறுகிறார்கள். அப்படி தேர்வானவர்கள் பெரும்பாலும், குறைந்தபட்சம் 2-3 முறை முயன்று வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் ஒருமுறை தேர்வெழுதி தோற்றதும், இது தன்னால் முடியாது என்று விலகுபவர்கள் 90%-க்கும் அதிகம். நாட்டிலுள்ள கடினமான தேர்வுகளில் ஒன்றான ஆட்சிப்ணி தேர்வில் வெற்றிபெற தேவைப்படும் தகுதிநிலை, கற்றறிய வேண்டிய பாடங்கள், நேர்முகத் தேர்வில் நடந்துகொள்ள வேண்டிய விதம், என்று பல விடயங்களை முதலாவது முயற்சிலேயே சரியாக செய்வது அபூர்வம். மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்ற ஆசையிருக்கலாம். அதற்குத் தேவையான பொறுமையும், முயற்சியும் ஏன் பலரிடம் இருப்பதில்லை?

உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் இன்றைய அவசர யுகத்தில், உடல் உழைப்பு குறைந்து, வேலை நேரம் அதிகரித்துவிட்டது, உணவுமுறைகள் முற்றிலும் மாறிவிட்டன. இந்த மாற்றங்களை புரிந்துகொண்டு, உடலுக்கு ஆரோக்கியமான விடயங்களை கவனமாக அவரவர்கள் தான் செய்து கொள்ளவேண்டும். உடல் உழைப்பு முற்றிலுமாய் குறைந்துவிட்ட நிலையில், குறைந்தபட்சம் உடற்பயிற்சிகளையேனும் தவறாமல் செய்து வந்தால் உடல் பருமனை தவிர்க்கலாம். உடற்பயிற்சி தேவையென்ற புரிதல் வந்து அதை துவக்கினாலும், மனிதனுக்கே உரித்தான சோம்பேறித்தனம் சீக்கிரம் பலரை ஆட்கொண்டுவிடுகிறது.


புத்தாண்டு தீர்மானமாய் துவக்கிய உடற்பயிற்சி பழக்கம், 2-3 வாரங்களை கடப்பதற்கே திணறுகிறது. ஆரம்ப நாட்களில் இருக்கும் உத்வேகம் படிப்படியாய் குறைந்துவிடுகிறது. உடலின் ஆரோக்கியம் ஒரே நாளில் மாறிவிடாது. ஒருவார உடற்பயிற்சியில் பெரிதாய் எந்த முன்னேற்றமும் வரவில்லையென்று தன்னம்பிக்கையை பலரும் தளரவிடுகின்றனர். ஆண்டாண்டு காலமாய் வளர்த்த ஊளைச்சதையை ஒருவாரத்தில் குறைப்பது சாத்தியமில்லை. சற்று பொறுமையாக உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் தொடர்ந்தால் தான் தொப்பை குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.


கல்வியில் இதே பொறுமை கதைதான். எடுத்த எடுப்பிலேயே வெற்றிபெற வேண்டுமென்ற எல்லோருக்கும் பேராசை இருக்கிறது. முதல்முயற்சியில் ஆட்சிப்பணி தேர்வில் வெல்வேன் என்ற ஆர்வத்துடன் முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவேளை தோற்றால், உடனே தனக்கு இது வராது என்று விலகிவிடுவது சரியல்ல. என்ன தவறுசெய்தோம் என்ற பொறுமையாக அலசி, எல்லாவற்றிலும் உரிய கவனம் செலுத்தி மீண்டும் போராடுபவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. எடுத்தேன்-கவிழ்த்தேன் என்ற முடிவெடுக்காமல் பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி இங்கு முக்கியம்.


உடல் ஆரோக்கியம், கல்வியைத் தாண்டி, விளையாட்டு, இசை, ஓவியம், புத்தகம் எழுதுதல், கற்பித்தல், அரசியல் என்று எல்லா துறைகளிலும், சிறப்புடன் மிளிந்திட ஆர்வம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பொறுமையும் முக்கியம். ஒரிரு தோல்விகளைக் கண்டு பயந்தால் எதுவும் சாத்தியமில்லை. எந்த முயற்சியில் தோற்றாலும், அதற்கான காரணத்தை ஆய்ந்து அதை சரிசெய்து இன்னும் அதிக ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் செயல்பட்டால்தான் வெற்றிக்கனி சாத்தியமாகும்.


விதையை விதைத்துவிட்டு தினமும் அது இருக்கிறதா? வளர்கிறதா? என்ற தோண்டிப்பார்த்தால், அந்த விதை எப்படி முளைக்கும். விதை துளிர்விட சிலதினங்கள், சிலவாரங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். விதைத்ததும் முளைத்து பழம் தரவேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். எல்லாவற்றிற்கும் உரிய நேரம் தரவேண்டும். அதற்குரிய நேரம் வரும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.


இசை, விளையாட்டு, ஓவியம் என்று கலைகள் ஆயிரமாயிரம் உண்டு. ஒவ்வொன்றிற்கும் சில நாட்களை ஆர்வத்துடன் செலவிட்டால், அவற்றின் அடிப்படைகளை எளிதில் கற்றுவிடலாம். ஆனால் எந்தவொன்றிலும் நிபுனத்துவம் பெறத்தான் நிறைய பொறுமையும், பயிற்சியும் வேண்டும். சிலநாட்கள் அதிக ஆர்வமும், உத்வேகமும் இருக்கும். சில நாட்கள் சோம்பேறித்தனமாய் போகும். எந்தநாளையும் விடாமல், பொறுமையாய் தொடர்ந்து பயிற்சி செய்பவருக்கு மட்டுமே வெற்றி சொந்தமாகும்.


குதித்தவுடன் சாதிக்க வேண்டுமென்று

ஆசையிருப்பதில் தவறேதுமில்லை;

ஆசைதான் போராடும் குணத்தை தூண்டும்;

ஆனால் ஆசைப்பட்ட வண்ணமே

எல்லாம் நிகழ்ந்தேறுமென்று பகல்கனவு கண்டுவிடாதீர்கள்;


சில சரிவுகள், சில ஏமாற்றங்கள் வரலாம்

தோல்விகளைக்கண்டு துவண்டுவிடாமல்

பொறுமையாய் யாரொருவர் முயற்சித்துக்கொண்டிருக்கிறாரோ

அவரால் எல்லாவற்றையும் அடையமுடியும்;


- [ம.சு.கு 01.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page