“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-102
நல்ல பழக்கவழக்கம்தான் மிகப்பெரிய வெற்றி!
சற்றே உடல் பருமனான நீங்கள், மருத்துவர் ஆலோசனையின் பேரில் உடல் எடையை சீக்கிரமாக குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. உடனே உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தும், உணவை குறைத்தும், சில மாத்திரைகளை உட்கொண்டும், வைராக்கியத்தோடு ஓரிரு மாதங்களில் கணிசமாக எடையை குறைத்து விட்டீர்கள். உங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். இந்த எடை குறைப்பின் இரகசியத்தை எல்லோருமே கேட்கின்றனர். நினைத்ததை சாதித்து விட்ட மகிழ்ச்சியில், குறைத்தவரை போதும் என்றெண்ணி, வழக்கம் போல நண்பர்களுடன் சுற்றுவதையும், கண்டதை திண்பதுமான பழைய முறைக்கு படிப்படியாய் மாறிவிடுகிறீர்கள். விளைவு என்னவாகும்? கஷ்டப்பட்டு குறைத்து 10 கிலோ எடை, 15 கிலோவாக சீக்கிரத்திலேயே கூடி விடுகிறது! என்ன நேர்ந்தது உங்கள் வைராக்கியத்திற்கு?
விற்பனை பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் இலக்குகள் இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் வாடிக்கையாளரை அணுகி விற்பனை செய்வர். பலப்பிரதிநிதிகள் நிறுவனம் சொல்லும் இடங்களுக்குச் சென்று விற்பனை முயற்சிகளை மேற்கொண்டனர். ஒரு சில விற்பனை பிரதிநிதிகள், கூடுதலாக வாங்குவதற்கு சாத்தியக்கூருடைய எல்லா வாடிக்கையாளர்களையும் பட்டியலிட்டு தினந்தோறும் 15-20 வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தின் இவர்களின் அணுகுமுறையில் பெரிய விற்பனை ஏற்படவில்லை என்றாலும் ஆறு மாத காலத்தில் விற்பனையின் அளவு மாறியது. பட்டியலிட்டு தினமும் புதிய வாடிக்கையாளர்களுக்கு விளக்கிய பிரதிநிதிகள் விற்பனை படிப்படியாக அதிகரித்தது.
நடைமுறையில் உங்கள் உடலையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பது என்பது ஒரு வாழ்க்கை முறைமை. ஒருநாள் கஷ்டப்பட்டு செய்வதில் எதுவும் மாறிவிடாது. எடைகுறைய வைராக்கியத்தோடு 10 நாள் விரதம் இருந்து எடையை குறைக்கலாம். ஆனால் அதை நிரந்தரமாக கடைபிடிப்பது சாத்தியமில்லை. ஏன் எடை கூடுகிறது? உணவு பழக்கங்கள் எவற்றை மாற்ற வேண்டும்? என்று நன்றாக ஆய்ந்து படிப்படியாக அன்றாட உணவு பழக்கத்தையும், உறக்கத்தையும், உடற்பயிற்சியையும் சீர்செய்து பழக்கப்படுத்தினால், உடல் எடை படிப்படியாக சீராகிவிடும். அதை அன்றாடம் கடைபிடிப்பதன் மூலம், அந்தப் பழக்கம் வழக்கமானால், அதுவே வாழ்க்கை முறைமையாகிவிடும். பின்னர் நீங்களே நினைத்தாலும் எடை ஏறுவது சாத்தியமில்லை. ஏனெனில் உங்கள் பழக்கவழக்கம் முற்றிலும் ஆரோக்கியத்தின் பாதையில் மாறிப் போய் இருக்கும்.
விற்பனை பிரதிநிதிகள் தினம் தினம் எத்தனை புதிய வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்பது முக்கியம். ஒன்றிரண்டு குறிப்பிட்ட வாடிக்கையாளரை மட்டும் அணுகி வியாபாரத்தை முடிப்பவர்கள் அதே அளவோடு நின்றிருப்பார்கள். சாத்தியக்கூறுடைய புதிய வாடிக்கையாளர்கள் பலரை திட்டமிட்டு தொடர்ந்து அணுகி விளக்குபவர்களுக்கு, நாளடைவில் அந்த ஒவ்வொருவரும் வாடிக்கையாளர்களாக மாற வாய்ப்பு அதிகம். தினம் 2 விற்பனை என்பது நாளடைவில் 10-15 ஆக மாற, உங்களின் அன்றாடம் பழக்கங்கள் மாறவேண்டும். வியாபாரம் என்பது ஒருநாள் கூத்தல்ல. அன்றாடம் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை அணுகுவதும், இருக்கின்ற எல்லா வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் சேவை செய்வதுமான பழக்கம், நிறுவனத்தின் கலாச்சாரமாக வேரூன்ற வேண்டும்.
தொடர்ந்த பயிற்சி விளையாட்டில் வெற்றியும், நல்ல பழக்கவழக்கங்கள் சீரான உடல் ஆரோக்கியத்தையும் எப்படி தருகிறதோ, அதேபோல நிறுவனத்திலும் / வியாபாரத்திலும், அதன் பணியாளர்களின் பழக்கவழக்கங்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த நிறுவனம் தினந்தோறும் பட்டியலிட்டு புதிய வாடிக்கையாளரை அணுகுவதும், இருக்கும் வாடிக்கையாளரை தொடர்பில் வைத்து குறித்த நேரத்தில் சேவை வழங்குவதும், வியாபாரத்திற்கான பொருள் வாங்கல்-விற்றலில் போதிய திட்டமிடலுடன் தட்டுப்பாடின்றி செய்வதும், பணப்பரிமாற்றத்தை தினந்தோறும் கவனமாக நிர்வகிப்பதுமாக இருக்கிறதோ, அந்த நிறுவனம் படிப்படியாக முன்னேற்றம் காண்கிறது. ஒரு நிறுவனத்தின் மேலாண்மை என்பது அன்றாட பழக்கவழக்கம். எல்லா துறைகளையும் தொடர்ந்து தினமும் கவனித்து, உரிய முடிவுகளை அவ்வப்போது எடுத்து, புதியவற்றை புகுத்தி நிர்வகிக்க வேண்டும்.
நேரம் கிடைக்கும்போது மட்டும் நிர்வாகம் செய்தால் நிறுவனம் ஈடேற முடியாது. தினமும் குறிப்பிட்ட நேரத்தை அதற்கென்று ஒதுக்கி, தினம் தவறாமல் நிர்வகித்தால்தான் நிறுவனம் தொடர்ந்து இயங்கும்.
வீராப்பிற்காக ஒரு நாள் 10 மைல் ஓடிக் காட்டலாம். அடுத்த நாள் கைகால் வழியில் படுத்து கிடக்க வேண்டியதுதான். அதேசமயம் அன்றாட தேகப் பயிற்சியும், ஓட்டப் போட்டிக்கான முறையான பயிற்சியையும் செய்து வந்தால், ஒரு நாள் மட்டுமல்ல, தொடர்ந்து பத்து நாட்களுக்கும் பத்துபத்து மைல்களை ஓடி சாதிக்கலாம்.
இலக்கை நிர்ணயித்து அடைவதல்ல வெற்றி;
இலக்கை நோக்கிய பயணம்தான் வெற்றி;
பயணத்தின் பாதை உங்களை வடிவமைக்கும்;
வெற்றியும் தோல்வியும் வெறும் விளைவுகளே!
பயணத்தின் பாதையில் கிடைக்கும் அனுபவமும்
பாதையில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கவழக்கங்களுமே
உங்களை நிரந்தரமாய் வெற்றியின் அருகில் குடியமர்த்தும்;
ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் மட்டுமே வெற்றியல்ல
தொடர்ந்த பயிற்சியில் கிடைக்கும்
நிரந்தர உடல் ஆரோக்கியமும் பெரிய வெற்றிதான்;
வியாபாரத்தில் பெரிய இலாபம் மட்டும் வெற்றியல்ல
தொடர்ந்து வாடிக்கையாளர் சேவையும்,
நீடித்த தரமுமே நிரந்தர வெற்றியாகும்;
உடல் ஆரோக்கியத்திற்கும், வியாபார வளர்ச்சிக்கு
தேவையான நல்ல பழக்கங்களை வடிவமைத்து
அன்றாடம் கடைபிடித்தலில் அவற்றை நிரந்தர வழக்கமாக்குங்கள்;
நல்ல பழக்கங்கள் யாவும் அன்றாட வழக்கமானால்
வெற்றியும் வாழ்த்துக்களும் தானாய் வந்து குவியும்!!
- [ம.சு.கு. 19.01.2023]
Comments