“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-98
வெற்றிக்கு சில தியாகங்கள் அவசியம்!
எனக்கு நன்கு பரிட்சயமான ஒரு குடும்பத்தில், அவர்களது மகள் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறியிருந்தார். பொது தேர்வுக்கு மகள் கவனச்சிதறலின்றி நன்றாக தயாராக வேண்டும் என்பதற்காக, தங்கள் வீட்டின் தொலைக்காட்சி இணைப்பை ஒராண்டிற்கு துண்டித்துவிட்டனர். பக்கத்து வீடுகளிலும் தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்கள். ஒருவருட காலம் கல்யாணங்காட்சி, திரைப்படம் என்று வெளியில் செல்வதை தவிர்த்தார்கள். நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற சில சிற்றின்பங்களை துறக்க வேண்டும், கவனச் சிதறல் இருக்கக்கூடாது என்று மகளுக்கு அறிவுரை கூறுவதற்கு பதிலாய், அதையே தங்கள் வாழ்விலும் கடைபிடித்து மகள் நன்கு படிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆம்! முக்கிய தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமானால், கல்விக்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். முக்கியமற்ற எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, கவனத்தைச் சிதறடிக்காமல், கல்வியில் இலயிப்பவரால் மட்டுமே, தேர்வுச் சவால்களை தைரியமாக சந்தித்து சாதிக்க முடியும்.
உங்கள் கையிலே இன்றைக்கு ரூ.1000/- மட்டும் இருக்கிறது. அதைக் கொண்டு இன்று உயர்தர உணவகத்தில் நன்றாக சாப்பிடலாம் (அல்லது) புதிதாக வெளிவந்த திரைப்படத்துக்கு போகலாம் (அல்லது) உங்களின் தொழில் துவங்கும் கனவுக்கு, மூலதனமாக சேமிக்கலாம். ஒன்றைச் செய்தால், இன்னொன்று சாத்தியமில்லை. நன்கு சாப்பிட முடிவெடுத்தால், திரைப்படம் இல்லை. எதிர்கால இலட்சியத்திற்காக சேமித்தாலும், திரைப்படம் இல்லை. இப்படி உங்களிடம் பணம் குறைவாக இருக்கும்போது, அந்த பணத்திற்கான தேவைகள் பலவற்றுள், இன்றைக்கு நீங்கள் எதை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? எதை தியாகம் செய்யப்போகிறீர்கள் என்று முடிவெடுப்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மாணிக்கிறது.
பிள்ளைகளின் படிப்பிற்காகவும், குடும்பத்தினரின் வளமான வாழ்விற்கும் தங்களின் உடலை வருத்தி உழைத்து செல்வம் சேர்க்கின்றனர். பிள்ளைகள் நன்கு படிக்க தங்களின் சிறு சந்தோஷங்களை சிலகுடும்பங்கள் தியாகம் செய்கின்றன. பிள்ளைகளும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், நல்ல மதிப்பெண் பெற அதிகாலை 5 மணி முதல் இரவு 9-10 மணி வரை தொடர்ந்து கற்பதற்காக பள்ளிக்கும், ஆசிரியர்களின் தனிப்பட்ட பயிற்சி மையங்களுக்கும் சென்று போராடுகின்றனர். தினம் தினம் பயிற்சித் தேர்வுகளை எழுதுகின்றனர். தங்களின் விருப்பமான நடிகர்களின் புதிய பட வெளியீடுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வெளியூர் பிரயாணங்கள், சுற்றுலாக்களையெல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பது ஒன்றே குறிக்கோளாக உழைக்கிறார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் கட்டாயம் கிடைக்கத்தான் செய்யும். நன்றாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதால், அவர்களின் மேற்படிப்பிற்கு, சிறந்த கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைக்கிறது.
பொதுவாக மனிதர்களிடம் இருக்கும் பொருட்செல்வத்திற்கு ஒரு எல்லையுண்டு. அதேபோல, வாழ்கின்ற காலத்திற்கும் ஒரு எல்லையுண்டு. வாழ்கின்ற அளவான காலத்திற்குள், நம்மிடம் இருக்கும் செல்வத்தைக்கொண்டு மனநிறைவோடு வாழ்ந்துவிட வேண்டுமென்பதே நம் எல்லோருடைய ஆசையுமாகும். நம்மைச் சுற்றியுற்ற எல்லாவற்றையும் நாம் அடைய வேண்டும், எல்லா சாதனைகளையும் நாம் புரிய வேண்டும், உலகத்தின் எல்லா புகழ்களையும் நாம் பெறவேண்டுமென்று ஆசைப்படுவது மனித இயல்பு. ஆனால் எல்லாமே எல்லோருக்கும் கிடைக்கபெறுவது அசாத்தியம்.
நடைமுறையில், இருக்கின்ற குறைந்த நேரத்தில், ஒரு அளவிற்குத்தான் நம்மால் செய்யமுடியும், சாதிக்க முடியும் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். உலகில் நமக்குத் தேவையான பல பொருட்களின் விலை ஆயிரம் ரூபாயைவிட குறைவாக இருந்தாலும், நம்மிடம் இப்போதைக்கு இருக்கும் ஓராயிரம் ரூபாயில் அவற்றுள் ஒன்றிரண்டை மட்டுமே வாங்கமுடியும்.
நம்மிடம் இருக்கும் செல்வத்தில் இவ்வளவுதான் வாங்கமுடியும் என்று எல்லையிருக்கும்போது, எதை தேர்வுசெய்து வாங்குகிறோம், எதை இப்போதைக்கு தள்ளிப்போடுகிறோம் என்பது முக்கியமான முதல் கேள்வி?
நமக்கிருக்கும் 24 மணி நேரத்தில் எந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்கிறோம், முக்கியமில்லாதவற்றை எப்படி தவிர்கிறோம் என்பது அடுத்த முக்கியமான கேள்வி?
கேளிக்கைகளுக்கும், சோம்பேறித்தனத்திற்கும், பெரிய இலட்சியங்களுக்குமான வித்தியாசத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து, எதை தியாகம் செய்து எதை அடையவேண்டுமென்பது உங்கள் முன்னிருக்கும் அதிமுக்கியமான கேள்வி?
திரைப்படம் பார்ப்பதற்காகவும், நண்பர்களுடன் சுற்றுவதற்காகவும், சிலர் கல்வியைத் தவிர்க்கிறார்கள். நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக கேளிக்கைளை சிலர் தவிர்க்கிறார்கள். இரண்டுக்கும் இடையே எது சரி? எது தவறு? என்று தெரியாமல் திண்டாடுவோர் பலர்.
குடும்பத்தினர் சிரமமின்றி வாழ வேண்டும் என்பதற்காக, குடும்பத்தைவிட்டு கண்காணாத தேசங்களில் பணிக்குசென்று அல்லல்படும் சிலர்!
தனிப்பட்ட குடும்ப வாழ்வை தியாகம் செய்து மக்கள் சேவையை பிரதானமாக்கி பொதுவாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அறப்பணியாற்றும் சிலர்!
தன் பிள்ளைகளை நன்மக்களாய் வளர்க்க, தன் இலட்சியக் கனவுகளையெல்லாம் தியாகம் செய்யும் மங்கையர் பலர்!
ஆட்சிப் பணி பதவிகள், மருத்துவர் கனவு, விஞ்ஞானி கனவுகளை மெய்பிக்க, தம் உறவுகளுடனும், நண்பர்களுடனுன் செலவழிக்கும் நேரத்தை தியாகம் செய்து சாதிக்கும் சிலர்!
ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இரண்டுமே செய்து சாதிக்க வேண்டுமென்றால், அது பெரும்பாலும் முடியாது! இரண்டில் எது முக்கியமோ அதை தேர்ந்தெடுத்து, மற்றொன்றை தியாகம் செய்தே தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் வரும். அந்த தருணத்தில் சரியாக முடிவெடுக்காமல், இரண்டிற்கும் ஆசைப்பட்டு இரண்டையும் செய்ய முற்பட்டால், எதையும் சிறப்புடன் செய்ய முடியாமல் அரைகுறையாகத்தான் போகும்.
ஒன்றைப் பெற
மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டியது
காலத்தின் கட்டாயம்;
எதற்காக எதை தியாகம் செய்கிறீர்கள் என்பதுதான்
உங்கள் வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும் முடிவு;
சிற்றின்பங்களுக்கு ஆசைப்பட்டு
பேரின்பத்தை தொலைத்தவர்கள்
சாமானியராகவே சாகின்றனர்;
சாதிப்பதற்காக தன்னை வருத்தி
கேளிக்கையை தவிர்த்து
குறிக்கோளை நோக்கி ஓடியவர்கள்
சரித்திர சாதனைகளை படைக்கின்றனர்;
இவற்றில் நீங்கள் எப்படி?
- [ம.சு.கு 15.01.2023]
Comments