top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-97 – நாளை என்றொரு நாளில்லை!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-97

நாளை என்றொரு நாளில்லை!


  • வீட்டுப் படங்களை செய்துவர ஆசிரியர் சொல்லியிருப்பார். மாலைவேளையில் விளையாட நண்பர்கள் சேர்ந்தவுடன், விளையாடும் ஆர்வத்தில், எழுதுவதை நாளை செய்யலாம் என்று தள்ளிவைத்துவிட்டு பிள்ளைகள் விளையாட ஓடிவிடும். மறுநாள் காலை எழுவதற்கே தாமதமாகும் போது, கிளம்பும் அவசரத்தில் எங்கிருந்து வீட்டுப்பாடம் செய்வது. ஆசிரியரிடம் திட்டுவாங்கி நிற்க வேண்டியதுதான். வீட்டுப்பாடம் செய்ய 10 நாள் விடுமுறைவிட்டாலும், இதே கதைதான். நாளை செய்யலாம் என்று ஒவ்வொரு முறையும் தள்ளிப்போட்டு, வழக்கம்போல் கடைசி நாளில் செய்ய போராடுவதே பெரும்பாலான மாணவர்களுக்கு பழகிவிட்டது.

  • அலுவலகத்தில் செய்து முடிக்க நிறைய வேலைகள் இருக்கும். அவற்றை செய்வதற்கு போதுமான நேரம் இருந்தாலும், சக ஊழியருடன் அரட்டை அடித்து நேரம் கழிப்பார்கள். வேலைகளை “இப்போது என்ன அவசரம் - பின்னர் செய்யலாம்” என்று தள்ளிப் போடுவார்கள். மறுநாள் மேலாளர் செய்தாயிற்றா என்று கேட்கும்போது, இதோ செய்து கொண்டிருக்கிறேன் என்று அவசர அவசரமாக ஆரம்பித்து அரைகுறையாய் செய்துவிட்டு, அதிக வேலைப்பளு என்று குற்றம் சாட்டுவார்கள். நேரம் இருக்கும்போது செய்யாமல் நாளை என்று தள்ளிப் போட்டால், அந்த வேலையெல்லாம் ஒருநாளில் செய்ய முற்படும்போது, வேலை கஷ்டமாகத்தான் இருக்கும். இன்று செய்யவிட்டால், நாளை நாம் தானே கஷ்டப்படவேண்டும் என்று தள்ளிப் போடும்போது யாரும் யோசிப்பதில்லை.

“இன்றே செய்; இன்னே செய்” என்ற முதுமொழியை அறியாதவர் யாரும் இல்லை. ஆனால் அதை அன்றாடம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் தான் மிகமிகக் குறைவு. குழந்தை முதல் வயோதிகர்கள் வரை இந்த “நாளை செய்யலாம்” என்று தள்ளிப் போடும் பழக்கம் எல்லோருக்கும் வழக்கமாகிவிட்ட ஒன்று.


வாய்ப்பு கிடைத்தால், ஒவ்வொரு மனிதனும் சோம்பேறித்தனத்தையே இயல்பாகத் தேர்ந்தெடுக்கிறான் என்பது உளவியல். எனக்குத் தெரிந்தவரை இதற்கு விதிவிலக்காய் யாரும் இருந்ததில்லை. நீங்களும் சரி, நானும் சரி, வாய்ப்பு கிடைத்தால் ஓய்வெடுக்கிறோம் என்ற பெயரில் சோம்பேறிகளாய் நேரம் கழிக்கவே விரும்புகிறோம். அதை கடந்து “இன்றே செய், அதுவும் இக்கணமே செய்” என்று தன் மனதையும், உடலையும் ஊக்குவித்து, செய்து முடிப்பவரால் மட்டுமே வெற்றி இலக்கை குறித்த நேரத்தில் அடையமுடிகிறது.


பள்ளி வீட்டுபாட கதை கிட்டத்தட்ட எல்லா மாணவர்கள் வாழ்விலும் அன்றாட வழக்கமாகிவிட்ட ஒன்று. பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போட்டு கடைசி நாளில் செய்ய கஷ்டப்படுவதும், வீட்டுப்பாடம் செய்யாததால் ஏதேனும் சாக்கு சொல்லி பள்ளிக்கு விடுப்பெடுக்க முயற்சிப்பதும், கைவலி கால்வலி வயிற்றுவலி என்று சாக்கீடு சொல்லி ஆசிரியரிடம் அவகாசம் கேட்பதும், போன்ற எண்ணற்ற காரணங்களை நாமும் சொல்லியிருப்போம், அதையே இன்று நம் பிள்ளைகளும் சொல்லுவார்கள். காலம் எத்தனை மாறினாலும் மனிதனின் சோம்பேறித்தனம் துளிகூட மாறுவதில்லை. ஒவ்வொரு வேலையையும் பின்னர் செய்யலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் அன்றாடம் அதிகரிக்கிறதே தவிர கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை.


நிறுவனத்தின் முதலாளியானாலும், தொழிலாளியானாலும் வேலையை “பின்னர் செய்யலாம்” “நாளை செய்யலாம்” என்று தள்ளிப் போடுவது பெரும்பாலானவர்களின் இரத்தத்தில் ஊறிவிட்டு பழக்கம். நேரம் இருக்கும்போது சோம்பேறித்தனத்தினால் திளைத்துவிட்டு, பின்னர் அவசரவாதியில் அரைகுறை தரத்தில் வேலையை செய்பவர்களால் எப்படி செயற்கரிய சாதனைகளை செய்ய முடியும். இந்த நியதி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருந்தாலும், மனிதனின் இயல்பான சோம்பேறித்தனம் அவன் எண்ணங்களை சர்வசாதாரணமாக வென்று, சாதிக்கப்பிறந்தவனையும் சாமானியனாக்கி விடுகிறது.


செய்வதற்கு முக்கிய வேலைகள் எண்ணற்றவை இருந்தாலும்

  • தொலைக்காட்சி பார்ப்பது;

  • கைபேசியில் விளையாடுவது;

  • இணையத்தில், சமூகவளைதளத்தில் காரணமே இல்லாமல் உலாவுவது;

  • நண்பர்களுடன் வீணான அரட்டைக் கச்சேரி;

என்று எண்ணற்ற சோம்பேறித்தனமான செயல்களில் மனம் இலயித்து, வேலைகளை தள்ளிப் போட்டு விடுகிறது. அந்த “நாளை” என்ற ஒருநாள் வருவதே இல்லை என்பதுதான் வாழ்வின் நிதர்சனம். புராணத்தில் விநாயகர் சனிபகவானுக்குச் சொன்ன “இன்று போய் நாளை வா” கதைபோல, நம்எல்லோர் வாழ்விலும் “சோம்பேறித்தனம்” எனும் அரக்கன் வெவ்வேறுபெயரில் வினையாக விளையாடி, நம் பொன்னான நேரத்தை வீணடிக்க வைத்து, வெற்றிகளை விரட்டிவிடுகிறான்.


வாழ்க்கையில் ஜெயிக்க ஆசை இருந்தால்

“நாளை” என்பதை “இன்றாக்குங்கள்”

இன்றென்பதையும் “இப்போது” ஆக்கிடுங்கள்;


காரியத்தின் அவசர அவசியத்திற்கு ஏற்ப

முன்னிலைப்படுத்தி இக்கணம் முதல்

ஒவ்வொன்றாய் முடிக்க துவங்குங்கள்;


நாளை வரும் என்று காத்திருப்பவர்

காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்;

குறித்த நேரத்திற்கு முன்னதாக முடிப்பவர்களை

வெற்றி தேவதையால் எப்படி தவிர்க்க முடியும்;


நாளை என்ற சொல்லே முடிவிலி என்பதால்

நாளை என்றொரு நாள் நாளையும் வராது;


எண்ணிய எண்ணியாங்கு

எண்ணிய கணம் செய்து முடிப்பவர்கே

எண்ணம் போல் வாழ்வமையும்.


- [ம.சு.கு 14.01.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page