top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-95 – நீங்கள் யாராக வேண்டும் – அடிமையா? ஆள்பவனா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-95

நீங்கள் யாராக வேண்டும் - அடிமையா? ஆள்பவனா?


  • பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்திருப்பார். பல போராட்டங்களில் பங்கெடுத்திருப்பார். ஆனால் அவருக்கு தேவையேற்படும் நாளில் அவர் பின்னால் யாரும் வந்து நிற்க மாட்டார்கள். அதே சமயம் புதிதாக கட்சிக்கு வந்தவர், சிபாரிசில் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் வென்றிருப்பார். அவர் பின்னால் 10-15 பேர் வந்து போவார்கள். பஞ்சாயத்து உறுப்பினர் துவங்கி, வட்டம், மாவட்டம், வாரியம், சட்டப்பேரவை, மக்களவை, மேலவை உறுப்பினர் என்று ஏதேனும் ஒன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கக் கூடியவர் பின்னால் ஒரு கூட்டம் நிற்கிறது. அப்படி பின்னால் நிற்கும் தொண்டனின் பின்னால் யாராவது நிற்பார்களா? தெரு அளவிலோ அல்லது தேசத்தின் அளவிலோ, யார் தலைமை ஏற்கிறாரோ, அவர் பின்னால் கூட்டம் நிற்கிறது. தொண்டனாக, ஏவலாளியாக இருப்பவர் பின்னால் யாரும் நிற்கத்தயாரில்லை எனும்போது, நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?

  • குழந்தைகள் விளையாட்டில் தங்களுக்குள் சிறுசிறு குழுக்களாக பிரிந்து போட்டியிடும்போது, ஒவ்வொரு குழுவிற்கும் யார் தலைமை ஏற்பது என்பதில் இன்னொரு போட்டி வரும். தான் தலைமை ஏற்று வெற்றி கொள்வதில் குழந்தை பெரும்மகிழ்ச்சி காண்கிறது. ஒருவேளை தான் தலைமை ஏற்காவிட்டால், தனக்கு பிடித்த நண்பனின் தலைமையில் கைகோர்த்து வெற்றி அடைய முயற்சிக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயமின்றி தாங்களே தலைமை ஏற்க முன்வருகின்றனர் அல்லது தலைமையுடன் கைகோர்த்து சாதிக்க முயல்கின்றனர். பயமறியாத குழந்தைகள், ஏனோ பெரியவர்களாகும்போது மட்டும் பயம், கூச்சஉணர்வு, தாழ்வு மனப்பான்மையின் காரணமாக தலைமையேற்க தயங்கி ஒதுங்கிவிடுகின்றனர்?

ஒரு தொண்டனாக ஓடியோடி உழைத்திருப்பீர்கள். தலைவன் சொல்வதை தட்டாமல் செய்யும் நீங்கள், காலத்தின் போக்கில் ஏதேனும் சிறிய தலைமைப் பொறுப்பேற்க வாய்ப்பு கிடைக்குமா என்பதை மட்டும் பார்க்க தவறியிருப்பீர்கள். எந்தவொரு பதவியும், பொறுப்பும் கேட்காமல் கட்சிக்கு உழைத்தால், நீங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். பதவி இல்லாவிட்டால், உங்களிடம் “இதை செய், அதை செய்” என்று கட்டளைகள் மட்டும் வந்துசேரும். உங்களுக்கென்று “இதை வைத்துக்கொள்” என்று யாரும் எதையும் கொடுக்க மாட்டார்கள். கட்சிக்கு புதிதாய் வந்தவர்களெல்லாம் தங்களுக்குத் தெரிந்த மேல்மட்டத்தை சந்தித்து ஏதேனும் பதவி பெற்று கட்சியில் வளர்ந்து கொண்டே போவார்கள். ஆனால் ஆண்டாண்டுகளாய் நீங்கள் வட்டத் தலைமைக்குகூட வழியில்லாமல், அடிமைகளாகவே காலம் கடத்தவேண்டியதுதான்.


சின்னஞ்சிறு குழந்தைகள் முதல், எல்லோருமே விளையாட்டில் தலைமை ஏற்பதற்கு முயல்கிறார்கள். ஏனெனில் தலைமைக்கு இருக்கும் முக்கியத்துவம், சாதாரண வீரனுக்கு இருப்பதில்லை. குழந்தைகளுக்குத் தெரிகிறது - தலைமை ஏற்றால் குழுவின் உள்ளவர்கள் எல்லாரும் தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் விளையாடுவார்கள், விளையாட்டின் திட்டத்தை தான் வகுக்கலாம், முடிவுகள் யாவும் தன்னைச் சுற்றியே எடுக்கப்படும் என்று. அதேசமயம் ஒரு சாதாரண விளையாட்டு வீரனாக இருந்தால், தலைமை சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டும், ஒரு போட்டியில் நீ விளையாடவேண்டாம் என்றால், ஒதுங்கிநிற்பதைத் தவிர வேறுவழியில்லை. தலைமை ஏற்பவர் வேண்டுமென்றால், வேண்டும்! வேண்டாம் என்றால், வேண்டாம்! அதனால் தானோ சில பிள்ளைகளும், பெரியவர்களும் எப்போதும் தலைமையிடம் காக்காபிடித்தே காலம் கடத்துகின்றனர்.


விளையாட்டுப் பருவத்தில் தலைமையேற்க துடித்த சிலர், பெரியவர்களாகும்போது ஏனோ தலைமையேற்க பயப்படுகின்றனர். எங்கோ ஏற்பட்ட சிறு தோல்விகளும், அவமானங்களும் அதீத பயத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் நிரந்தரமாக்கி தலைமையேற்க அச்சுறுத்திவிடுகிறது. ஒன்றை மறந்துவிடாதீர்கள் - எவ்விடத்தும், தலைமைக்குத்தான் முக்கியத்துவம். தலைவன் எவ்வழியோ ஏனையவர்கள் அனைவரும் அவ்வழியே.


உங்கள் பின்னால் கூட்டமா? கூட்டத்தின் பின்னால் நீங்களா?

தலைமை ஏற்க தயங்கினால் – சாதிக்கும் எண்ணத்தை மறந்து

கூட்டத்தோடு கோவிந்தா போடவேண்டியதுதான்;


சாமானியனாகப் பிறந்து, சாதிக்கத் துடிப்பவராக நீங்கள் இருந்தால்

  • கிடைக்கும் வாய்ப்பில், தலைமையேற்க தவறிவிடாதீர்கள்;

  • வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், புதிய வாய்ப்புகளை நீங்களே உருவாக்க முயன்றிடுங்கள்;

  • யாரையும் வஞ்சகத்தால் வீழ்த்தி தலைமையடைய முற்படாதீர்கள், இன்னொருநாள் நீங்களும் அதே பாணியில் வீழ்த்தப்படலாம்;

  • உங்களைச் சுற்றி அடிமைகளை உருவாக்கித் தலைமை ஏற்காதீர்கள்; உங்களைச் சார்ந்தவர்களை சிந்திக்க வைத்து, அறிவைப் பெருக்கி தலைமையை அடையுங்கள்; முட்டாள்களை ஆள்வதில் பயனில்லை. அறிவாளிகளை ஆள்பவனால் மட்டுமே அரசனாக அழியாப்புகழெய்த முடியும்;

  • தலைமை என்பது பிறப்புரிமையல்ல; அதற்கான தகுதியை வளர்த்து கிரகித்துக் கொள்ள வேண்டிய உணர்வுநிலையது;


வீரத்தினால் தலைமை ஏற்காலம்;

விவேகத்தினால் தலைமை ஏற்கலாம்

வஞ்சனையினால் தலைமை ஏற்று விடாதீர்கள்

காலம் முழுதும் நிந்தித்து கொண்டே இருப்பார்கள்;


சிறிய வெற்றிகளை - தனிமனிதனாய் அடையலாம்;

ஆனால் சரித்திர வெற்றிகளைப் படைக்க

குழுவையும் / படையையும் வழிநடத்த வேண்டும்;

குழுவை அரவணைத்து வழிநடத்தும் தலைவனே

சாதனை படைத்து இரவாப் புகழெய்துகிறான்;


அடிமையாய் வாழ்வதற்கு யாரும் பிறந்திடவில்லை;

பயத்தை வென்று தயங்காமல் தலைமை கொள்ளுங்கள்;

வென்றால் சரித்திரம் – தோற்றால் அனுபவம்;


- [ம.சு.கு 12-01-2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comentarios


Post: Blog2 Post
bottom of page