top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-94 – அளவான அறிவுரைகளோடு உங்கள் மரியாதையை காத்துக் கொள்ளுங்கள்!"

Updated: Jan 12, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-94

அளவான அறிவுரைகளோடு உங்கள் மரியாதையை காத்துக் கொள்ளுங்கள்!


  • பல ஆண்டுகளாய் சிறப்பாக தொழில் செய்துவரும் நீங்கள், உங்கள் மகன் அதே தொழிலிலை கவனிக்க சேர்த்துக் கொள்கிறீர்கள். ஆரம்பத்தில் உங்களிடம் எல்லாவற்றையும் மகன் கேட்டு செய்கிறான். நாட்கள் செல்ல, அதை நன்கு கற்று எல்லாவற்றையும் சரியாக அவனே செய்கிறான். நாளடைவில் நீங்களும் வயோதிகத்தின் காரணமாக கடைக்கு செல்வது குறைகிறது. உங்கள் மகன் இப்போது ஒரு சில விடயங்களை மட்டும் உங்களிடம் சொல்கிறார். தொழிலை சிறப்பாகவே நடத்துகிறார். ஏன் தன்னிடம் எல்லாவற்றையும் சொல்வதில்லை? ஏன் ஆலோசனை கேட்கவில்லை? என்று நீங்கள் ஒருபுறம் குறை கூறுகிறீர்கள். அதேசமயம் மகனும் என்ன இது, தன்னை இன்னும் சுதந்திரமாக செயல்பட விட தந்தை மறுக்கிறாரே? இன்னும் சின்ன பிள்ளையாக கருதி அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென்கிறாரே? என்று குற்றச்சாட்டை வைக்கிறார். இதே நிலைமை வேறு கோணத்தில் மகனுக்கும்-தாய்க்கும் இடையே நடக்கிறது. வேறொரு கோணத்தில் மருமகளுக்கும்-மாமியாருக்கும் இடையே நடக்கிறது. இந்த தலைமுறை இடைவெளியில் ஏற்படும் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

  • உங்களுக்கு ஆரம்பக்கல்வி பயிற்றுவித்த ஆசிரியர், பக்கத்து வீட்டில் குடியிருக்கிறார். இன்றைக்கு நீங்கள் பெரிய பட்டம் பெற்று நல்ல வேளையில் இருக்கிறீர்கள். உங்கள் ஆசிரியரின் ஊதியத்தை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கிறீர்கள். இன்றைக்கும் உங்கள் ஆசிரியர் அவ்வப்போது உங்களை சந்தித்து “நீ செய்வதில் இந்த தவறு இருக்கிறது”, “இதை இப்படிச் செய்ய வேண்டும்” என்று தொடர்ந்து அறிவுரை கூறுகிறார். அவர் இன்னும் பழமைகளையே பேசி அறிவுரை கூறுவது உங்களுக்கு பிடிக்கவில்லை. உங்கள் மனைவி-மக்களும் முகம் சுளிக்கிறார்கள். இந்த சூழ்நிலை அந்த ஆசிரியரின் மரியாதை எந்த அளவிற்கு இருக்கும்?

ஒருவருக்கு வயதாகும் போது, அவர் செய்துவந்த வியாபாரம், சேர்த்த சொத்துக்கள், வீட்டு நிர்வாகம் எல்லாம் படிப்படியாக அடுத்த தலைமுறையினரின் நிர்வாகத்தின் கீழ் மாறுவது இயல்பே. அந்த மாற்றத்தின் போது ஆரம்பத்தில் பெரியவர்களிடம் ஆலோசனைகளை அதிகமாக கேட்பதும், போகப்போக ஆலோசனை கேட்பது குறைவதும் இயல்பு. யதார்த்தத்தில் அடுத்த தலைமுறையினரின் அறிவாற்றல் இவர்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது. என்னதான் பிள்ளைகள் சிறப்பாக செய்தாலும், பெரியோர்களுக்கு தங்கள் அனுபவித்தல் கற்ற பாடத்தை தொடர்ந்து பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.


வயதாகும் போது பிள்ளைகள் தங்களுக்கு முன்னர் கொடுத்த முக்கியத்துவத்தை இப்போது கொடுப்பதில்லை என்று பெரியவர்கள் வருந்துகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் நலனுக்குத்தான் சொல்கிறார்கள் என்று பிள்ளைகளுக்கு தெரிந்தாலும், வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதால், அவர்களால் அதிக நேரம் பெற்றோருடன் செலவிட முடிவதில்லை. நல்ல கல்வியறிவு பெற்ற பலரும், இந்த நடைமுறை யதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். காலத்தின் கட்டாயத்தை புரிந்துகொண்டு, பெரியவர்கள் தங்களின் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் தொடர்ந்து அறிவுரை சொல்வதும், தேவையில்லாமல் கோபிப்பதுமாக இருந்தால், பிள்ளைகள் தனிகுடித்தனம் போகத்தான் செய்வார்கள். எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொண்டு, அவரவர்களின் சுதந்திரத்தை அங்கீகரித்தால், இந்த சிக்கல்கள் தானாக குறையும்.


உங்கள் மாணவனுக்கு ஆரம்பத்தில் அறிவுரைகள் சொல்லி பாடங்களை கற்பித்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னும், அதே அறிவுரைகளை தொடர்ந்து கொண்டிருந்தால், உங்களைக் கண்டவுடன் மாணவர்கள் தெரித்தோடத்தான் செய்வார்கள்.


சுயமாக சிந்தித்து செயல்பட இளைஞர்கள் துவங்கியதும், அறிவுரைகளை தவிர்த்து, அவர்களின் சிந்தனைகளை தூண்டும் வகையிலான கருத்துக்களை சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் கேட்டால் மட்டுமே ஆலோசனைகளையும் / அறிவுரைகளையும் சொல்ல வேண்டும். அதுவும் ஒருமுறை சொல்வதோடு நிறுத்திக் கொள்வது சாலச் சிறந்தது.


அவர்களுக்கு புரிந்துவிட்டபின் அதை ஏற்பதும்-விடுவதும் அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. எந்தக் கட்டத்திலும் உங்கள் அறிவுரைகளை திரும்பத்திரும்ப சொல்லி, செயல்படுத்துமாறு வற்புறுத்தி உங்கள் மரியாதை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அப்போதைக்கு, உங்கள் முன்னால் அவர்கள் ஒத்துக்கொள்வது போல சொன்னாலும், நீங்கள் விலகியபின் ஏளனமாகவும் / தவறாகவும் பேசுவார்கள்.


இன்றைய தலைமுறையினர், பெரியவர்களைக் காட்டிலும் வேகமாக சிந்திக்கின்றனர். அவர்களின் கையடக்கத்தில் உலகத்தின் அறிவுப்பெட்டகம் பொதிந்துகிடக்கிறது. பெரியவர்கள் அவர்களின் சிந்தனைகளை தூண்டினால் மட்டும் போதும். எங்கேனும் வழிதவறும்போது, உரிய காரணத்தோடு அவர்களுக்கு நேர்வழியை ஒருமுறை சொன்னால் போதும். ஒருவேளை நீங்கள் அதிகமாகச் சொன்னால், ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார்? என்று கோபப்பட்டு, நேர்மாறாக செயல்படவும் துணிகிறார்கள்.


நம் பிள்ளைகள், நம் அடுத்த தலைமுறை, நன்றாக இருக்க வேண்டுமென்ற ஆசையில் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. ஆனால் அந்த வழிகாட்டலுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

  • வீட்டை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும்?

  • பிள்ளைகளை எப்படி கவனிக்க வேண்டும்?

  • வியாபாரத்தை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும்?

  • உறவுகளோடு / மற்றவர்களோடு எப்படி பேச வேண்டும்?

என்று தொடர்ந்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தால், அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லவே பார்ப்பார்கள். உங்கள் வார்த்தைகள் மதிப்பிழந்து கொண்டே போகும். “உங்கள் மரியாதை உங்கள் கையில்”.


யாரும் உங்களுக்கு அடிமை இல்லை;

ஆரம்பத்தில் உங்களை கேட்டு செய்தவர்கள்

காலப்போக்கில் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பது இயல்பே;


சில காலம் உங்களுக்கு தகவலாக சொல்லக்கூடும்

பின்னர் அந்த தகவலும் வராது போகும்;

அதற்காக பிள்ளைகள் உங்களை ஒதுக்குவதாக எண்ணி விடாதீர்கள்;

உங்களுக்கு ஓய்வளிப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்;


எதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொண்டு

உங்கள் அறிவுரையை அளவோடு நிறுத்தினால்

உங்கள் மரியாதை காக்கப்படும்;

எதிர்பார்ப்புக்கள் குறைந்தால்

மனநிம்மதியோடு காலத்தை கழிக்கலாம்!


- [ம.சு.கு 11.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page