top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-93 – சராசரியில் நிம்மதியடைந்து விடாதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-93

சராசரியில் நிம்மதியடைந்து விடாதீர்கள்!


  • இந்திய மக்களின் சராசரி வாழ்க்கை 70 ஆண்டுகள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உங்களுக்கு 70 வயது பூர்த்தியாகும் போது உடல் நலம் சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே சராசரி ஆயுளை கடந்து விட்டதால், இனி எதற்கு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்கிறீர்கள், பேசாமல் விட்டுவிடுங்கள், நடப்பது நடக்கட்டும் என்று மருத்துவர் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உடனே மருத்தவர் மீது பாய்ந்து விடுவீர்களல்லவா?

  • இலட்சரூபாய் சம்பாதிக்க வேண்டிய நல்ல திறமைசாலியாக இருக்கும் உங்களுக்கு, நிறுவனத்தில் சராசரி ஊதியமான 20,000/- மட்டுமே தருவோம் என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள்? சராசரி ஊதிய உயர்வு, சராசரி ஊக்கத்தொகை, என்று நிறுவனத்தின் சராசரி அளவுகோளையே உங்களுக்குப் பயன்படுத்தினால் நீங்கள் மேலும் ஈடுபாட்டுடன் வேலை செய்வீர்களா? பள்ளியில் எல்லோரும் தேர்வு எழுதுகிறார்கள். எல்லோருடைய மதிப்பெண்ணையும் சராசரியாக்கி, எல்லோருக்கும் ஒரே சராசரி மதிப்பெண்ணை அளித்தால் மாணவர்களும், பெற்றோர்களும் ஒப்புக் கொள்வார்களா?

வாழ்க்கையில் ஒரு சிலர் அற்ப ஆயுளில் இறக்க நேரிடும். ஒரு சிலர் நூறு வயதுவரை வாழ்வார்கள். மருத்துவம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 70 வயதை தொட்டுள்ளது. இன்றைய சராசரி 70 வயது என்பதற்காக

  • நீங்கள் உங்கள் வாழ்க்கையை 70 வயதில் முடித்துக் கொள்ள விரும்புவீர்களா? [அல்லது]

  • நல்ல ஆரோக்கியத்தோடு 100 வயதுவரை வாழ விரும்புவீர்களா?

ஒருவேளை 50 வயதில் நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவரிடம் சராசரி 70 வயதுவரையேனும் என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்கலாம். ஆனால் 70 வயதுடையவர் யாரேனும் வாழ்ந்தது போதும் என்று சொல்கிறார்களா? சராசரி ஆயுட்காலத்தையும் கடந்து சுகமாக 100 ஆண்டு வாழ வேண்டும் என்று உங்களுக்கு ஆசையிருக்கும் போது, உங்கள் வாழ்வின் இலட்சியங்கள் அடைகின்ற பயணத்தில் மட்டும் ஏன் பாதியிலேயே நின்றுவிடுகிறீர்கள்? ஏன் சராசரியில் சமாதானம் ஆகிறீர்கள்?


பள்ளியிலே சராசரி மதிப்பெண்ணை பொதுவுடமை ஆக்கினால், அடுத்த தேர்வில் யார் படிப்பார்கள்? நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கு என்ன ஊக்கமிருக்கப் போகிறது? எவ்வளவுதான் படித்தாலும், சராசரி மதிப்பெண்தான் கிடைக்குமென்றால், அவரும் படிப்பை குறைத்துவிடுவாரே! விளைவு, சராசரியும் தானாக குறைந்து போகுமே! அலுவலகத்தில் எல்லோருக்கும் சராசரி சம்பளம் என்றால், நன்றாக உழைப்பவற்கு என்ன ஊக்கம் இருக்கப்போகிறது? போதிய ஊக்கமில்லாமல், புதியவைகளைப் படைப்பது எப்படி? சராசரி ஊதியத்தில் உங்கள் ஊழியர்கள் சரித்திரம் படைக்க உதவ வேண்டும் என்று எண்ணினால் அது சாத்தியமாகுமா?


தோல்விகளில் துவண்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த சராசரிகளைக்கூறி உங்களை சமாதானப்படுத்துவார்கள். இந்த சராசரிகள் எல்லாமே வெறும் புள்ளிவிவரங்கள் தான். நடைமுறையில் அந்த சராசரி புள்ளியருகில் கால்பகுதி மக்கள்கூட இருக்கமாட்டார்கள். சராசரியிலிருந்து இரண்டு துருவங்களில் சிலரும், சராசரிக்கும் துருவங்களுக்கும் இடையே நின்று பலரும் சராசரியை இருபக்கமும் இழுத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் குறைவான மதிப்பெண்ணை, குறைவான ஊதியத்தை, பெறுபவரானால், இந்த சராசரியை தொடுவதை உங்கள் முதலாவது இலட்சியமாக / மைல்கல்லாக கொள்ளலாம். சராசரியை தொட்டு அங்கேயே நின்றுவிட்டால் சாதிக்க முடியாது. அந்த சராசரி கணக்கிடப்பட்ட எண்களின் உச்சத்தில் ஒருவர் இருப்பார். அவரை அடைவதுதான் உங்களின் இலக்காக இருக்க வேண்டும்!!


10 மதிப்பெண்ணும் 90 மதிப்பெண்ணும் பெற்றிருக்கும் மாணவர்கள் மத்தியில், சராசரி 50 மதிப்பெண் என்று கணக்கிட்டாலும், அதில் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள் என்பதுதான் இங்கு கேள்வி? குறைவான மதிப்பெண் பக்கம் இருப்பீர்களானால், உங்கள் பயனம் 50 நோக்கி முதலில் இருக்கட்டும். ஐம்பதை கடந்தவுடன், 90 நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றியாளராக ஜொலிக்கலாம்.


எக்காரணத்தைக் கொண்டும் 50 அடைந்தவுடன் தங்கிவிடாதீர்கள். சராசரி என்பது வெறும் ஒரு இடைப்பட்ட நிலை மட்டுமே! சராசரியில் தங்கி உங்கள் முன்னேற்றத்தை தொலைத்துவிடாதீர்கள். சராசரியை கடந்து உங்கள் இலக்கு முதன்மை நிலையை அடையவேண்டுமென்று இருந்தால், உங்கள் உள்ளத்தின் ஊக்கமும், தன்னம்பிக்கையும் தானாக உங்களை வழிநடத்தும்.


சாதிக்கப் பிறந்த உங்களுக்கு

சராசரிகள் யாவும் - வெறும் புள்ளி விபரங்களே!


உச்சத்தை அடைவதுமட்டுமே

உங்கள் இலக்காக வேண்டும்;

சாமானியனாக சராசரியில் தங்கி

வேடிக்கை மனிதராய் வீழ்ந்து விடாதீர்கள்!


பத்தோடு பதினொன்றாக வாழ்வதற்கும்

அந்தப் பத்திற்கு தலைமை ஏற்பதற்கும்

நிறைய வேறுபாடு உண்டு;


உங்களின் சாதனைகளால்

சராசரியை உயர்த்துங்கள்;

சமுதாயத்தை வழிநடத்தி மேம்படுத்திட

தன்னம்பிக்கையாளர்களும், சாதனையாளர்களும்

தலைமையேற்க நிறைய தேவைப்படுகிறார்கள்!!


- [ம.சு.கு 10.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page