top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-91 – தீட்டினால் தான் கூர்மை நிலைத்திருக்கும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-91

தீட்டினால் தான் கூர்மை நிலைத்திருக்கும்!


  • பள்ளிப் பருவத்தில் சிறந்த தடகள வீரர்களாக வலம்வந்த நிறைய நண்பர்கள், இன்று உடல் பெருத்து நடப்பதற்கே சிரமப்படுகிறார்கள். கல்லூரியை கடந்து பணி, குடும்பம் என்றானவுடன், தினமும் செய்து வந்த உடற்பயிற்சி, ஓட்டம் எல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டு, உணவு பழக்கங்களின் நேரங்காலம் மாறிப்போய், உடல்பருத்து சிரமப்படுகிறார்கள். அவர்கள் இன்றிருக்கும் நிலையில், சிறு குழந்தைகளின் வேகத்திற்கு கூட அவர்களால் ஓடமுடியவில்லை. உங்களின் உடல் ஆரோக்கியமும், விளையாட்டுத் திறமைகளும், என்றென்றைக்கும் அப்படியே இருந்துவிடுமா? ஜாம்பவானாகவே வலம் வந்துகொண்டிருந்தாலும், அகந்தையில் பயிற்சி செய்ய தவறினால், எதிரணியின் புதிய உத்திகளை தாக்குப் பிடிக்க முடியாமல் தோற்கநேரிடலாமே?

  • கறிவெட்டும் கத்தியோ, காய்கறி வெட்டும் மனையோ, சவரம் செய்யும் பிளேடோ, மரம் அறுக்கும் ரம்பமே, எதுவானாலும் நாள்பட்ட உபயோகத்தில் கூர்மை மழுங்கத்தான் செய்யும். அப்படியே தொடர்ந்து உபயோகித்தால், வேலை செய்வதும் கடினம், செய்வதற்கும் அதிக நேரமெடுக்கும். செய்யும் தொழில் எதுவானாலும், அதை சிறப்பாகச் செய்ய, தேவைப்படும் அனைத்து உபகரணங்களின் கூர்மையையும் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எந்தவொரு பொருளும், உபயோகத்தில் கூர்மை மழுங்கும். அதேசமயம், உபயோகிக்காமல் வைத்திருந்தாலும், துருப்பிடித்து கூர்மை மறைந்திடும். குறிப்பிட்ட இடைவெளியில், தீட்டி கூர்மை செய்ய மறந்தால், வெட்டவேண்டியதை வெட்டுவதற்கு சிரமப்பட வேண்டியதுதான்.

நீங்கள் கால்பந்து வீரரோ, இறகுப்பந்து வீரரோ, உங்கள் கையும்-காலும் உங்களின் எண்ணத்தின் கட்டுப்பாட்டில், நுணுக்கமாக செயல்பட வேண்டுமானால், தொடர்ந்து அவற்றிற்கு பயிற்சி அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் உடல், தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டால், அதற்கு நீங்கள் எஜமானன். உங்கள் பேச்சை அது கேட்கும். நீங்கள் பயிற்சி செய்ய தவறினால், உடல் சோம்பேறித்தனத்தில் திளைத்து, உங்களுக்கு எஜமானாகி, எண்ணமும் உடலும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்காத நிலை ஏற்படும். ஆண்டாண்டு காலமாய் இசைக்கருவி கற்று நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், ஓராண்டு தொடவில்லை என்றால், மறுமுறை ஆரம்பிக்கும்போது சுருதி சேரமால் சிலநாட்கள் திண்டாடத்தான் வேண்டும்.


உங்களுக்குத் தெரிந்த கலைகள், தொடர்ந்து கைவசப்பட்டிருக்க வேண்டுமானால், அனுதினமும் அதை பயிற்சித்துக் கொண்டு, புதுமைகளை தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவுதான் சிறந்த தையல்காரராக ஒருகாலத்தில் புகழ்பெற்றிருந்தாலும், இன்றைய மக்களின் புதிய ஆடை வடிவங்களை கற்றுக் கொள்ள தவறினால், புதிய வாடிக்கையாளர்கள் வருவது குறைந்தே தீரும். உங்களுக்குத் தெரிந்தது மட்டுமே காலத்திற்கும் போதுமென்றெண்ணி தங்கிவிடாதீர்கள். மாறிவரும் உலகில், தொடர்ந்து தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். உங்கள் திறமைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு, பட்டைதீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.


எப்படி கத்தியானது உபயோகத்தில் மழுங்கிப்போனால், சாணம் பிடித்து கூர்மையை மீண்டும் அதிகரிக்கிறோமோ, அதேபோல் உங்கள் திறமைகளை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கற்றபின் எதுவும் செய்யாமல் இருந்தால், கற்றவை காலப்போக்கில் மறந்து போகும். பட்டப்படிப்பு முடித்த சில பெண்கள், குடும்பப் பொருப்புக்களை ஏற்றபின், தங்களின் கல்வியறிவை மேம்படுத்துவது குறித்து எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், கல்வியின்பயனாய் பெற்ற திறமைகளை மழுங்கடித்து விடுகின்றனர். என்றேனும் தேவை ஏற்படும் போது, அவர்களால் அவர்களை நிரூபிக்க முடிவதில்லை.


சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருந்தாலும், சிலகாலம் வாசிப்பை நிறுத்தி, பேச்சை விட்டிருந்தால், மீண்டும் பேசத்துவங்கும்போது, நிறைய திக்கத்தான் செய்யும். எதுவுமே நிரந்தரமான திறமை கிடையாது! எந்தவொரு திறமையையும், ஆற்றலையும் உங்கள் உயிருள்ளவரை நிரந்தரமாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால், அனுதினமும் பயிற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


சமையலானாலும், சர்க்கஸானாலும்

ஆடுகளமானாலும், போர்க்களமானாலும்

கரண்டியானாலும், கைத்துப்பாக்கியானாலும்

தொடர்ந்து கையில் விளையாடிக் கொண்டே இருந்தால்தான்

என்றைக்கும் அது உங்கள் கைவசப்பட்டிருக்கும்;

நீங்கள் அதை தொடமறந்தால்

கையாளும் நுணுக்கங்கள் நாளடைவில் மறந்தே போகும்!


எதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க – உங்கள்

கையும்-காலும்

எண்ணமும்-உள்ளமும்

தொடர்ந்து பயிற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்;

தீட்டத்தீட்டத்தான் கூர்மை நிலைத்திருக்கும்;


உங்கள் திறமைகள் எதையெதை

இன்றைக்கு பட்டை தீட்ட வேண்டுமென்று

அனுதினமும் தொடர்ந்து யோசித்திருங்கள்!


-[ம.சு.கு 08.01.2023]



16 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page