top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-90 – இருப்பதை முழுமையாக உபயோகிக்கிறோமா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-90

இருப்பதை முழுமையாக உபயோகிக்கிறோமா?


  • ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண் ஒருவர் தன்னிடம் 300 கைப்பைகள், 100 ஜோடி செருப்புகள் இருப்பதாக கூறினார். எதற்கு இத்தனை என்று கேட்கப்பட்டதற்கு, தான் உடுத்தும் உடைக்கு பொருத்தமான கைப்பை, செருப்பு தேவைப்படுவதாக கூறினார். செல்வந்தரான அவரின் இந்த அணுகுமுறை சரியா? தவறா? நீங்கள் ஒருநிமிடம் யோசியுங்கள் - உங்களிடம் எத்தனை துணிமணிகள், எத்தனை ஜோடி செருப்புகள், இருக்கின்றன? எத்தனை உபயோகிக்காத எழுதுகோல்கள்? எத்தனை படித்து முடிக்காத புத்தகங்கள் இருக்கின்றன?

  • எங்கள் ஊரில் ஒரு பெரிய தொழிற்சாலை இயங்கி வந்தது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்து வந்த நிறுவனம், ஆற்றுநீரை பெரியளவில் மாசுபடுத்தி வந்தது. தேர்தல் வேட்பாளர், ஆற்று குடிநீரை மாசுபடுத்தும் அந்த நிறுவனத்தை தான் வென்றால் மூடவைப்பேன் என்று வாக்குறுதியளித்தார். சில வருடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. அடுத்த தேர்தலில் இன்னொரு வேட்பாளர், வேலை வாய்ப்புகளை உருவாக்க புதிய நிறுவனங்களை திறக்க வழிவகை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்! என்ன ஒரு முரண்பாடான வாக்குறுதிகள்! இப்படி தேசம் முழுதும் எத்தனை நிறுவனங்கள் நலிவடைந்து மூடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் அதிகம் தேவைப்படும் சூழலில், ஏன் இந்த நிறுவனங்களை மாற்றிப் பயன்படுத்தாமல் புதிய முதலீடுகளை தேடுகின்றனர்?

வீட்டில், நமக்குத் தேவைப்படும் என்று எத்தனை பொருட்களை வாங்கி குவிக்கிறோம். அவற்றில் எதை முழுமையாக உபயோகிக்கிறோம்? உங்கள் அலமாரியில் ஒரு முறை மட்டுமே அணிந்து கழட்டி வைக்கப்பட்ட உடைகள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணி உள்ளீர்களா? உங்கள் மேசையில் வாங்கி எழுதப்படாமல் வைத்திருந்து வீணாகிப் போன எழுதுகோல்கள் எத்தனை? வாங்கி படிக்காமலே தூசுபடியும் புத்தகங்கள் எத்தனை?


குழந்தைகள்தான் புரியாமல் பொருட்களை வாங்கி, ஓரிருமுறை உபயோகத்தில் சலித்து போய் வேறு ஒன்றுக்கு தாவுகிறார்கள் என்றால், எல்லாம் தெரிந்த பெரியவர்களும், இருப்பதை பயன்படுத்தாமல், புதியவற்றை வாங்கி தேவையில்லாமல் வீட்டில் இடத்தை அடைப்பதில் என்ன பயன்? பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது, நன்றாக இருக்கிறதென்று வாங்கி உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தால், சில மாதங்களில் அது பாழ்பட்டு போய்விடுமென்பது உங்களுக்கு புரிகிறதா? இல்லையா? தேவையில்லாமல் அதற்கு செலவிட்ட பணத்தை வேறொரு ஆக்கத்திற்கு பயன்படுத்தியிருந்தால், எல்லோரும் பயன்பட்டிருக்குமல்லவா! அப்படி எத்தனை பொருட்களை உங்களிடம் பயன்படுத்தாமல் வைத்துள்ளீர்கள் என்று சற்று மறு ஆய்வு செய்து பாருங்கள்.


வீட்டைத்தாண்டி, தேசமென்று கண்ணோட்டத்தில் மூடப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தேசத்தின் சொத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றன. உங்களிடம் பணம் இருக்கிறது, வாங்கி சும்மா வைத்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம்! ஆனால் தேசத்தின் வளங்கள் இப்படி பணக்காரர்கள் வசம் முடங்கிக்கிடந்தால், அந்த வளங்களால் தேசம் காண வேண்டிய முன்னேற்றம் தடைபடுகிறதே?


ஒருபுறம் தங்கக்கட்டிகள் நிறைய பதுங்கி உறங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் தேசத்தின் பற்றாக்குறையான அந்நியச்செலாவணி, தங்கம் இறக்குமதி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஒரு நாடு தன்னிடம் இருக்கும் வளங்களை முழுமையாக பயன்படுத்தாமல், தேவையில்லாது இறக்குமதி செய்து கொண்டிருந்தால், தேசத்தில் வளர்ச்சி எப்படி சாத்தியப்படும்?


வீடானாலும், நாடானாலும், தன்னிடம் இருக்கின்ற வளங்களையும், பொருட்களையும் முறையாக, முழுமையாக பயன்படுத்துவது முக்கியமான தேவை.

  • வீட்டில் சமைத்த உணவை, தட்டில் போட்ட உணவை, முழுமையாக உண்ணுங்கள். வீணடிக்காதீர்கள்! நீங்கள் சம்பாதித்த காசை வீணடிப்பதாக இருந்தாலும், தேசத்தின் வளத்தை வீணடிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை;

  • வாங்கிய உடையைகளை உபயோகியுங்கள். ஒருவேளை சலித்துப் போயிருந்தால், இல்லாதவருக்கு கொடுத்து பயன்படுத்த வையுங்கள். அலமாரியில் உறங்கி கிழிந்து போவதால் பயனேதுமில்லை.

  • உங்களால் நிறுவனத்தை நடத்த முடியாவிட்டால், அதை மூடிவைக்காதீர்கள். முடிந்தால் உபயோகப்படுபவருக்கு வாடகைக்கு கொடுங்கள் அல்லது விற்றுவிடுங்கள். நிறுவனங்கள் இயங்கினால்தான், அதைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் பொருளாதாரம் மேம்படும்.

எதை வாங்கும் போதும் - இது நமக்குத் தேவையா? இதை என்னால் முழுமையாக பயன்படுத்த முடியுமா? என்று பலமுறை உங்களை நீங்களே கேட்டு திருப்திப்படுத்திக் கொண்டபின் வாங்குங்கள். வாங்கியபின் உபயோகிக்காமல் வீட்டில் வைத்தால், காலவெல்லத்தில் அந்த பொருள் வீணாவதோடு, அந்த பொருள் வைக்கப்படும் இடம், வாங்க செலவழித்த பணம், எல்லாமே வீண் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


உங்கள் பணத்தில்

எதையும் வாங்கி அனுபவிக்கும் உரிமை

உங்களுக்கும் முழுமையாய் உண்டு;

அதே சமயம் - வாங்கிய பொருளை வீணடிக்க

உங்களுக்கேது உரிமை?


இயற்கையின் எல்லா வளங்களும்

மனித குலத்தின் பொதுவுடமை சொத்து;

அவற்றை நீங்கள் உபயோகிக்கலாம் வீணடிக்கக்கூடாது;


உங்களிடம் இருப்பதை முழுமையாக பயன்படுத்துவதென்பது

ஒருபுறம் உங்களுக்கு இலாபகரமானதாக இருப்பதோடு

மறுபுறம் தேசத்திற்கான பெரும் சேவையாக இருக்கும்;


நம்முடைய சொத்தை, தேசத்தின் வளத்தை

பொறுப்புடன் முழுமையாக உபயோகித்தால்

சமுதாயம் செழிப்படைவதோடு

நம் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து, மகிழ்ச்சி பொங்கும்!


- [ம.சு.கு 07.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page