top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-89 – கைமீறும் நேரங்களில் என்ன செய்யலாம்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-89

கைமீறும் நேரங்களில் என்ன செய்யலாம்?


  • பங்குச்சந்தையில் சில இலட்சங்களை முதலீடு செய்திருந்த ஒருவர், தினமும் விலைமாற்றங்களை கவனித்து வந்தார். 2020-ஆம் வருட மார்ச் மாதம் கடைசி வாரங்களில், பங்கு சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை காணத் துவங்கின. ஊரடங்கு அறிவிப்புக்களால், உலகின் எல்லா பங்குகளும் கட்டுக்கடங்காமல் சரிந்தன. அவசரத்தில் அந்த மனிதர் இரண்டு நிறுவன பங்குகளை விற்றார். ஒரு சிலவற்றை விற்க முடியாமல் அப்படியே வைத்தார். மேலும் ஏப்ரல் மாதத்தில் இன்னும் சரிந்து, பங்கின் விலை எல்லா எல்லைகளையும் கடந்து தரைமட்டமாவதை உணர்ந்து, பேசாமல் இருந்துவிட்டார். இன்று இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின், போதுமான இலாபத்திற்கு அவற்றை விற்றுள்ளார். அன்றைய தினம் அவசரமாக இரண்டு பங்குகளை நஷ்டத்திற்கு விற்றதற்காக இன்று வருந்துகிறார்....

  • குழந்தைகள் சிறு வயதில் தாய் தந்தையரையே சுற்றிச்சுற்றி வரும். அவர்கள் வார்த்தைகளை தட்டாமல் செய்யும். சிறிது வளரவளர வேலைகளைச் செய்ய சலிப்பு ஏற்பட்டு, மறுக்கத் துவங்கும். பெற்றோர்கள் சற்று சத்தம் போட்டால், அமைதியாக செய்வார்கள். அதேசமயம் பதின்ம வயதை அடையும் குழந்தைகள், என்ன செய்கின்றன என்று பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் ஏதாவது ஒன்றை சொல்லி பிள்ளைகள் சமாளிப்பார்கள். அவர்கள் மறைக்கிறார்கள், நம் கைமீறி செயல்படுகிறார்கள் என்பது பெற்றோருக்கு தெரிந்தாலும் உடனே அவர்களை திட்டமுடியாது. ஒருவேளை திட்டினால், பதின்மவயதினர் மேலும் நம்மை விட்டு விலகிச் செல்வர். அப்படி கைமீறி நடக்கிறது என்பதை தெரிந்தபின்னும், ஏதும் செய்யாமலிருக்க மனம் ஒத்துக்கொள்வதில்லை, அதேசமயம் ஏதாவது செய்தால் எதிர்வினையாகிவிட வாய்ப்பிருக்கிறது. என்னதான் செய்வது?

பங்குச்சந்தை, தங்கம் விலை அனுதினமும் ஏற்ற இறக்கத்தோடே இருக்கும். தரகர்கள், தங்களின் சிறு இலாபத்திற்கு அன்றாடம் வாங்கல்-விற்றல் மூலம் விலையில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அதே சமயம் முதலீட்டாளர்கள், முதலீடு செய்து சில மாதங்கள், சில வருடங்கள் பொறுத்திருந்து நல்ல இலாபத்திற்கு விற்பார்கள். இடையிடையே சில பெரிய சரிவுகள் வரலாம். கொரோனா போன்ற கைமீறிய சமயங்களும் வரலாம். அவசரப்பட்டால் பெரிய நஷ்டங்களை சந்திக்க நேரிடும். காலச்சூழலை கவனித்து, சற்றே பொறுமைகாத்தால், நஷ்டம் இல்லாமல் வெளிவரலாம்.


சந்தையின் தற்போதைய சூழ்நிலை என்ன? தற்போதைய மாற்றங்கள் தற்காலிகமானதா-நிரந்தரமானதா? நாம் முதலீடு செய்த நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடன் தொடர்கிறதா? என்று ஆராய்ந்து பொறுமையாக முடிவெடுக்க வேண்டும். இக்கட்டான பொருளாதார சூழ்நிலைகளில், எடுத்தோம்-கவிழ்த்தோம் என்று முடிவெடுத்தால், இருப்பதையும் இழந்து நிற்க வேண்டியதுதான்.


நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சார்ந்தவர்கள் எல்லா சமயங்களிலும் நமக்கு கட்டுப்பட்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக செயல்படக்கூடும். அந்த தருணங்களில் அவர்களோடு சண்டையிட்டால், தேவையற்ற மனகசப்பும், உறவில் விரிசலும் ஏற்படக்கூடும். சில சமயங்களில் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். அவர்கள் போக்கிலேயே போய், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் நம்மோடு சண்டையிடுகிறார்கள் என்பதற்காக, அவர்களை அப்படியே விடவும் முடியாது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நம் பிள்ளைகள். அவர்கள் தெரிந்தோ-தெரியாமலோ புதைகுழியில் விழுந்துவிடாமல் இருக்க, நாம் போதிய முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்க வேண்டும். பதின்ம வயதினருக்கு, அவர்களைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களை உதாரணங்களாக்கி, நாசுக்காக புரிய வைக்க வேண்டும். அவர்களை அதற்றிப்பேசினால் ஒன்றும் சாதிக்க முடியாது.


வாழ்வின் யதார்த்தம் யாதெனில், எதுவுமே நம் கையிலில்லை. எல்லாமே இருப்பது போன்றதொரு மாயையில்தான் நாம் உலாவுகிறோம். நமக்கு வேண்டிய தருணத்தில், பலவிடயங்கள் நமக்கு உதவியாக இருப்பதில்லை. அப்படி கை மீறிய தருணங்களில், நாம் எப்படி சமாளிக்கிறோம், என்ன பதில் அளிக்கிறோம், எப்படி தாக்குப் பிடித்து நிற்கிறோம் என்பதுதான் நமது சாமர்த்தியம்.


பொருளாதார வீழ்ச்சியால், தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். பொருளாதார மந்தநிலை தொடரும் சூழலில், வியாபாரத்தை மேலும் தொடர்வதா? இல்லை நிறுத்துவதா? அல்லது இப்போதைக்கு குறைத்துக் கொள்வதா? என்று சூழ்நிலையை அலசி முடிவெடுக்க வேண்டும். விட்டதை பிடிக்கிறேன் என்று வீராப்பாக களத்தில் இறங்கினால், மிஞ்சியிருப்பதையும் இழக்க நேரிடலாம்.


காலச் சூழ்நிலைகள் நம் வசமமில்லை;

அவசர அவசியங்கள் நம் வசமில்லை;

ஏற்றத்தாழ்வுகள் நம் வசமில்லை;

கொடுத்தவை திரும்ப வருவதும் நம் வசமில்லை;

இப்படி எதுவுமே நம் வசமில்லாத போது

வாழ்க்கை மட்டும் நம் வசப்படுவது எப்படி சாத்தியமாகும்?


மாற்றங்களை எதிர்நோக்கி காத்திருங்கள்;

நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றாதீர்கள்;


காலநேரம் கைகூடும் வரை

எதையும் பெரிதுபடுத்தாமல்

எதையும் விளம்பரப்படுத்தாமல்

கனிபறிக்க காத்திருங்கள்;

எதுவுமே உங்கள் வசமில்லாவிட்டாலும்

காத்திருந்து கல்வீசுபவருக்கு

எல்லாமொருநாள் ஒவ்வொன்றாய் வசப்படும்;


- [ம.சு.கு 06.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

댓글


Post: Blog2 Post
bottom of page