“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-86
இல்லை என்று சொல்ல தயக்கம் ஏன்?
உங்கள் அன்றாட வாழ்க்கையும் வியாபாரமும் பெரிய பற்றாக்குறையின்றி, அதேசமயம் கடனுமின்றி நகர்த்துவரும் சூழலில், உங்களின் நண்பர் தன் வியாபார சிக்கலை தீர்க்க, ஒரு பெரிய தொகையை கடனாக கேட்கிறார். அந்தத்தொகை உங்களிடம் இல்லை என்று சொன்னாலும், எங்கேனும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு வற்புறுத்துகிறார். உங்களின் தனிப்பட்ட நாணயத்திற்காக, நீங்கள் உத்தரவாதம் அளித்தால் உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் அந்த பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு பெரிய தொகையை, சிக்கலில் இருக்கும் நண்பன் வாங்கியபின் ஒருவேளை கட்ட தவறினால், உங்கள் சொத்தை விற்று உங்கள் நாணயத்தை காக்கவேண்டிய அபாயகரமான நிலைவரும். இந்த விஷப்பரீட்சை தேவையா? நண்பனிடம் தன்னால் “முடியாது” “இல்லை” என்று சொல்ல தயங்கி உங்கள் வாழ்க்கையை கேள்விக்குரியாக்க வேண்டுமா?
உங்களுடைய அன்றாட அலுவல் வேலைகளினிடையே, சில தேவையற்ற அழைப்புகள் வரலாம், தேவையற்ற நபர்கள் உங்களை சந்திக்க நேரம் கேட்கலாம், தேவையற்ற விவாதங்களில் நீங்கள் உள்ளிழுக்கப்படலாம். அப்போதைக்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது என்பதற்காக, அவர்களின் வரவை, அழைப்பை ஏற்றுக்கொண்டு நேரும் செலவிட ஒத்துக்கொண்டால், அந்த தருணத்தில் வேறு முக்கிய அழைப்புகளோ, வாடிக்கையாளரோ வர நேரம் கேட்டால் மறுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தேவையற்றது என்று தெரிந்திருந்தும் “இல்லை” என்று சொல்ல தயங்கி ஒத்துக்கொண்டு, முக்கியமான வாய்ப்புகளை இழந்ததற்காக பின்னர் உட்காரந்து வருந்துகிறீர்களா?
பண விடயத்தில் உங்களிடம் உதவி கேட்டு நண்பன் வந்தால், உங்களிடம் போதிய பணம் இருந்தால், அந்த உதவி தேவைப்படுவதின் காரணத்தை அறிந்து கொடுத்து உதவுவது நன்று. அதேசமயம் உங்களிடம் பணம் இல்லாதபோது, நீங்கள் கடன் வாங்கி அவருக்கு உதவுவதனால், நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. நண்பன் கேட்டுவிட்டான், “இல்லை” என்று சொன்னால் தன்னை நிராகரித்துவிடுவானோ என்று பயந்து, தன் சக்திக்கு மீறிய பெரிய தொகைக்கு உத்தரவாதம் அளித்து மாட்டிக்கொண்ட பல தர்மபிரபுக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வாங்கியவன் கடன்கட்ட தவறும்போது, தன் சொத்தை விற்றுக் கடனைக்கட்டி தேவையின்றி குடும்பப் பிரச்சினைகள் ஏற்படுத்திக்கொண்டு நிம்மதியான வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.
உங்களால் முடியாத, உங்கள் சக்திக்கு மீறியவற்றை ஏன் தேவையில்லாமல் ஒப்புக்கொண்டு மாட்டிக்கொள்ள வேண்டும்? உங்களிடம் பணம் இருந்தால் கொடுக்கலாம். இல்லாத போது “இல்லை” என்று சொல்ல தயங்கி கடன் வாங்கி கொடுத்து நீங்கள் சிக்கலில் மாட்ட வேண்டியது அவசியமா?
பணத்தைப்போல உங்களுடைய நேரமும் அடுத்த பெரிய சொத்து. அதை எதற்கு செலவிடுகிறோம் என்பதில்தான் உங்களின் வளர்ச்சி தீர்மானமாகிறது. உங்களின் பொன்னான நேரத்தை, உங்கள் வியாபாரத்தை பெருக்கவும், உங்கள் திறமைகளை வளர்க்கவும், புதிய முயற்சியை மேற்கொள்ளவும் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கைத்தரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த வாய்ப்பாகும். அதைவிடுத்து தேவையற்ற அழைப்புகள், தேவையற்ற சந்திப்புகள், வீண் விவாதங்களுக்கு நேரத்தை ஒதுக்கி விரயமாக்கினால், வளர்ச்சி எப்படி ஏற்படும்? நண்பன் கேட்கிறான், வாடிக்கையாளர் கேட்கிறார், சக ஊழியர் கேட்கிறார், என்று நிறைய அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். அவற்றுள் முக்கியமானவற்றை ஏற்றுக்கொண்டு, தேவையில்லாதவற்றிற்கு “இல்லை” என்று சொல்லத் தயங்கி ஒப்புக்கொண்டால், வளர்ச்சிக்கு எங்கிருந்து நேரம் ஒதுக்குவது?
ஒன்றை மறந்து விடாதீர்கள்!
“ஆம்” “செய்கிறேன்” என்று ஏற்றுக் கொள்வது ஒரு முடிவு;
அதை செய்வதற்காக ஒத்துக்கொண்ட நேரம்
உங்களுக்கு முடிந்து போன நேரம் - அதே சமயம்
“இல்லை” “முடியாது” என்பது ஒரு துவக்கம்;
அந்த நேரத்தில் நீங்கள் வேறு நல்லதொரு வேலையை செய்து
நேரத்தை பயனுடையதாக்க வாய்ப்பு திறந்திருக்கிறது;
“இல்லை” என்று சொல்வதும், ஒரு முக்கியமான தேர்வுதான். அதை எங்கு சொல்ல வேண்டுமோ, அங்கு சொல்லத் தயங்கக்கூடாது. தயங்கினால் பொன்னான நேரத்தையும், பொருளையும் இழக்க நேரிடலாம்.
இந்த திட்டதில் முதலீடு செய்தால் வட்டி அதிகம் கிடைக்கும், இந்த காப்பீடு எடுத்தால் பலன் அதிகமுண்டு என்ற ஆசைவார்த்தைகளும், எனக்காக உதவி செய்யமாட்டாயா என்று வேண்டுகோள்களும், நிர்பந்தங்களும் வந்தவண்ணம் இருந்தாலும், உங்களுக்கு பொருந்தவில்லையென்றால், “இல்லை” என்று தெளிவுபட உரைப்பதில்தான் உங்கள் வாழ்வின் வளர்ச்சியும், நிம்மதியும் அடங்கியிருக்கிறது.
செயலின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப
யாரால் செய்ய முடியும் என்பதற்கு ஏற்ப
உங்களின் நேரத்தை ஒதுக்குங்கள்:
தேவையற்ற வேண்டுகோளுக்கு
இல்லை என்று சொல்லத் தயங்காதீர்கள்;
நீங்கள் சும்மா இருக்க நேர்ந்தாலும் பரவாயில்லை!
தேவை இல்லாதவற்றிற்கு ஒப்புக்கொண்டு
சிக்கிக் கொள்ளாதீர்கள்;
பணத்தை தாண்டி – உங்களின்
நேரமும் மிகப்பெரிய சொத்து என்பதை
எப்போதும் மறவாதீர்கள்.
- [ம.சு.கு 03.01.2023]
Comments