“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-82
நொடிக்கு நொடி கவனிக்கப்படுகிறீர்கள்!
உங்கள் குழந்தையிடம், யாராவது வந்து உங்களை கேட்டால், நீங்கள் அங்கு இல்லை என்று பொய் சொல்லிவிடச் சொல்கிறீர்கள். குழந்தையும் நீங்கள் சொல்லியதை சரியாக ஒப்பவித்தது. ஒருவேளை அந்த நபர் நீங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளே வந்து குழந்தை இல்லையென்று சொல்கிறதே என்று கேட்டால், அவன் ஏதோ தெரியாமல் சொல்லிவிட்டான் என்று அந்த குழந்தையின் மீது பழி போடுகிறீர்கள். குழந்தையை நேருக்குநேர் கேட்காமல், திட்டுவது போல நடிக்கிறீர்கள். உங்களின் இந்த தவறான செயல்களை, பொய்களை இறைவன் கவனிக்கிறான், பாவக்கணக்கில் சேர்க்கிறான், கட்டாயம் தண்டனை உண்டென்று புராணம் சொல்லலாம். அதற்குமுன்னால், உங்களின் இந்த பிரட்டான செயல்கள் எல்லாவற்றையும் உங்கள் குழந்தை கவனித்து உள்வாங்குகிறது என்பதை மறந்து விடாதீர்கள்!
ஒரு குருவாக மாணக்கரிடம் நீங்கள் எண்ணற்ற போதனைகளை, தத்துவங்களை, வாழ்வியலை நீங்கள் வாய்மொழியாக கற்பிக்கலாம். குருவின் மீதிருக்கும் மரியாதையில், இவையனைத்தையும் மாணாக்கர்கள் மதிப்புடன் கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில், அந்த குருவின் தனிப்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகள் அவருடைய போதனைகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால், அந்த மாணவர்கள் எப்படி குருவின் வார்த்தைகளை உளமாற மதிப்பார்கள். குருவின் ஒவ்வொரு சொல்லும் செயலும் சமுதாயத்தால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு கொண்டே இருக்கும்போது, தன் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் பார்க்கக் கூடாது என்று குரு எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்?
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பதை விட, நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதில் தான் அதிகம் கற்றுக்கொள்கிறது. நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் குழந்தை கவனிக்கிறது. உங்கள் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால், குழந்தை வாக்கு சுத்தத்தை கற்கிறது. நீங்கள் பொய்யுரைப்பவராக, ஏமாற்றுக்காரராக இருந்தால், குழந்தை அதையும் அப்படியே கவனித்து கற்றுக் கொள்கிறது.
ஆசானாக நீங்கள் என்ன போதிக்கிறீர்கள் என்பது 50% தான். மீதமுள்ள 50% சதவீதம், உங்களின் தனிமனித செயயல்பாடுகள் எந்தளவிற்கு மதிக்கத்தக்கதாக இருக்கிறது என்பதை பொறுத்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் அட்டூழியங்களை செய்துவிட்டு, பாடசாலையில் போதனைகள் நடத்தினால் யார் கேட்பார்கள். யாருக்கும் தெரியாமல் செய்வதாக நீங்கள் நினைத்தாலும், உங்கள் ஒவ்வொரு செயலையும், நடத்தையையும் சமுதாயம் கவனித்துக் கொண்டேதான் இருக்கும்.
ஒரு அதிகாரி அதிகாரியாக நீங்கள் நேர்மையானவராக இருந்தால், உங்களால் உங்கள் ஊழியர்கள் மீது அதிகாரம் செலுத்த முடியும். அவர்களின் தவறுகளை தட்டிக்கேட்க முடியும். நீங்கள் கையூட்டு பெருபவராக இருந்தால், உங்களை யாராவது மாட்டிவிட்டு விடுவார்களோ என்று ஊழியர்களுக்கு பயந்து தான் வாழ வேண்டும்.
ஒரு தலைவனாக, தன் கொள்கையில் பிடிப்போடு இருந்தால், அதை கவனிக்கும் தொண்டனும் உண்மையானவனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. தலைவன் கொள்கையை விட்டு இஷ்டம் போல் செய்தால், தொண்டனிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்.
நீங்கள் சாதாரணமானவர். நீங்கள் இந்த சமுதாயத்தில் ஒரு பொருட்டேயல்ல. உங்கள் செயல்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ண வேண்டாம். நீங்கள் ஒவ்வொரு கனமும் முழுவதுமாக கவனிக்கப்படுகிறீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். யாரும் வாய் திறந்து எதையும் அப்போது கேட்க மாட்டார்கள். நீங்கள் இல்லாதபோது, உங்களைப் பற்றி கதைக்கட்டி பேசுவார்கள்.
நீங்கள் நல்லது செய்தால், கவனிக்கப்பட்டாலும் யாரும் பெரிதாக பேசமாட்டார்கள். நீங்கள் ஒரு தவறு செய்தால், உலகம் அதற்கு ஆயிரம் வடிவம் கொடுத்து பேசும். யாரும் உங்களிடம் நேரில் கேட்கமாட்டார்கள். நீங்கள் இல்லாதபோது, உங்கள் செயல்கள் அவர்களுக்கு பெரிய பேசுபொருளாக இருந்து விடும்.
நீங்கள் என்றோ வாய்தவறி சொன்ன வார்த்தைகளை, தவறாக செய்த செயல்களை, உங்கள் மனைவி ஞாபகம் வைத்து இன்று வேறொன்றோடு சம்பந்தப்படுத்தி கேள்வி கேட்கக்கூடும்.
விவாதங்களில் வரும் சில கடுமையான வார்த்தைகள், பிறரை புண்படுத்தி பிரிவை ஏற்படுத்தலாம்.
பொதுவாழ்வில் உங்களால் மேலோட்டமாக சொல்லப்பட்ட ஒரு கருத்து, ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகி தலைவலியை ஏற்படுத்தலாம்.
நீங்கள் உங்கள் பெற்றோரை கவனிக்காமல் விட்டதை, உங்கள் மகன் கவனித்து, உங்கள் வயோதிகத்தில் திரும்பச் செய்யக்கூடும்;
எல்லோரும் அவரவர் வேலைகளை செய்யவே திண்டாடும்போது, உங்களை கவனிக்க யாரும் இல்லை என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், போகிற போக்கில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் கவனித்துக் கொண்டே தான் போகிறார்கள். அப்போதைக்கு யாரும் எதையும் சொல்ல மாட்டார்கள். ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் கண்டதை, சமயம் பார்த்து நீங்கள் அன்று இப்படி சொன்னீர்கள், இப்படி செய்தீர்கள் என்று உங்களுக்கு எதிராக அதை உபயோகிப்பார்கள். என்று செய்தோம் என்று நீங்கள் மறந்திருந்தாலும், மற்றவர்கள் மறக்காமல் உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள்.
உங்களில் ஒவ்வொரு சொல்லும் செயலும்
ஒவ்வொரு கணமும்
வெவ்வேறு மனிதர்களால்
தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது;
யாரும் எதையும் சொல்லவில்லை என்பதற்காக
நீங்கள் செய்வது சரியென்றாகி விடாது;
எல்லாம் ஒருசமயம் சொல்லிக் காட்டப்படும்;
தவறானதானால், கட்டாயம் ஒருநாள்
எதிர்வினையாகத்தான் முடியும்;
உங்கள் எண்ணங்கள் உயர்வானதாய்
சொல்லும் செயலும் அக்கப்பூர்வமானதாய்
எப்போதும் இருக்குமானால் – காலப்போக்கில்
உங்களின் சொற்கள் கவனிக்கப்பட்டு மதிக்கப்படும்;
உங்களின் செயல்கள் கவனிக்கப்பட்டு போற்றப்படும்;
- [ம.சு.கு 30.12.2022]
Comments