top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-67 – உங்களில் முதலீடு செய்யலாமே!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-67

உங்களில் முதலீடு செய்யலாமே!


  • சமீபத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரிடம் அவரது வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்று கேட்டதற்கு “பெரிதாக ஒன்றுமில்லை” என்று சாதாரணமாக சொல்லிவிட்டார். “ஒரு சொந்த வீடு, மூன்று வேளை சாப்பாடு, செலவிற்கு கொஞ்சம் கைப்பணம் இருந்தால் போதும், நிம்மதியாக காலத்தைப் போக்குவேன்” என்றார். எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று ஒரு கணம் நானே அசந்துவிட்டேன். ஆனால் இப்படி சாதிக்கும் இலட்சியம் ஏதுமில்லாமல், வெறுமனே நிம்மதியாக காலம்கடத்த முயற்சிப்பது, நிஜத்தில் நிம்மதியும் மனநிறைவும் தருமா?

  • இன்றைய வாழ்வியல் முறை நோய்களாக மாறிவிட்ட இரத்தஅழுத்தும், உடல்பருமன், நீரிழிவு நோய்களில் பாதிக்கப்பட்டு, தினமும் 10-15 மாத்திரைகளை உண்டு, தன் உடலையே பாரமென சுமந்து வாழும் ஒரு நபரிடம், ஏன் இப்படி என்று கேட்டதற்கு, அவர் சாதாரணமாகச் சொன்னார் “நல்லா இருந்த காலத்துல ஆடுனேன், இன்று முடியாமல் கிடக்கிறேன்” என்று. அது என்ன “நல்லா இருந்த காலத்துல ஆடினேன்” என்ற வார்த்தையை யோசித்தேன், என்னுடைய வாழ்க்கை முறையும், என்னைச் சார்ந்தவர்கள் பலரின் வாழ்க்கை முறையும் மனத்திரையில் ஓடி, போதுமான விளக்கத்தை எனக்கு கொடுத்தது. அப்படி என்ன ஆடுகிறோம் நாம்?

இலட்சியம் ஏதுமில்லை என்று சொன்ன நபர், வாழ்வதற்கான தன் பொருள் சார்ந்த சில தேவைகளை மட்டும் பட்டியலிட்டு வைத்துள்ளார். எவ்வளவு பொருள் தேவையென்ற தெளிவு இருக்கும் அவருக்கும், அது நிரந்தரமாக கிடைக்கப்பெற என்ன செய்ய வேண்டும் என்று தெளிவு இல்லை. இன்றைக்கு செய்து கொண்டிருக்கும் வேலை நிரந்தரமாக இருக்குமா? என்றால் “சந்தேகம் தான்”. அசாதாரண நேரங்களை சமாளிக்க போதிய சேமிப்பு செய்திருக்கிறாயா? என்றால் “இல்லை”. உன் தனிப்பட்ட திறமைகள் என்ன? என்றால் “ஏதுமில்லை”. இப்படி எதுவும் தெரியாமல், எதையும் செய்யாமல், நிம்மதியான வாழ்க்கை எப்படி சாத்தியமாகும்.


இளவயதில் நேரம் காலம் பார்க்காமல், கண்டதைத் தின்று, கண்ட நேரத்திற்கு உறங்கியெழுந்து, ஒரு முறையற்ற வாழ்க்கையை தன் இஷ்டம் போல் வாழ்வதன் விளைவு, உடல்நிலை படிப்படியாக சீர்கெட்டு எல்லா உடல் உபாதைகளும் நிரந்தரமாகின்றன. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாததால் உடல்பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வருகிறது. தேவையற்ற கோபம், மனஅழுத்தங்களின் காரணத்தால் இரத்தக்கொதிப்பும் தொற்றிக் கொள்கிறது. தன் உடலை, வாழ்க்கை முறைமையை இப்படி சரிவர கவனிக்காமல் விட்டால், முதுமையில் வரவேண்டிய பிணிகள் 40-50 வயதிலேயே உடலை ஆக்கிரமித்து படுக்கையில் கிடத்திவிடுகிறது. அன்றாட இயக்கமே ஒரு பெரும் சுமையாகி விடுகிறது.


தகவல் தொடர்பும், அறிவுக் களஞ்சியங்களும் நிறைந்த உலகில், தன்னைப் பற்றிய அறிவும், புரிதலும் இல்லாமல் பயனிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர். வெளிப்புறத்தையும், மற்றவர்களையும் கவனிக்கின்ற அளவிற்கு, தன்மீது கவனம் செலுத்துவதில்லை. பொருள் சேர்ப்பதில் சுயநலவாதிகளாக இருக்கும் எண்ணற்றோர், தன்னை மேம்படுத்தும் விடயத்தில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். தன் வாழ்க்கைமுறை, தன் ஆரோக்கியம் என்னும் விடயத்தில் அக்கறையின்றி வாழ்வது வேதனைக்குறியதே!


நாம் நன்றாக இருந்தால் தான், மற்றவை எல்லாமே சாத்தியமாகும்” என்ற புரிதல் இல்லாமல், தன்னில் முதலீடு செய்யாமல், சுற்றியுள்ளவைகளில் அதிக கவனம் செலுத்துவதில் என்ன பயன். நம் வாழ்க்கை சிறக்க, நம்மை மேம்படுத்த என்ன முதலீடு செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா! எனக்குத் தெரிந்த சிலவற்றை பட்டியலிடுகிறேன்.


உடல் ஆரோக்கியத்திற்கு

  • அன்றாட உணவை ஆரோக்கியமானதாக வடிவமைத்திடுங்கள்

  • போதுமான உடற்பயிற்சி / ஓய்வு / உறக்கத்தில் கவனம் செலுத்துங்கள்

  • குடும்ப உறவுகளை / நட்பை மேம்படுத்தி மகிழ்ந்திடுங்கள்

அறிவை வளர்க்க

  • நூல் பல வாசிப்பது தலையாயது

  • நல்லதொரு குருவிடம் கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

  • பேச்சாற்றலை வளர்த்திடுங்கள் - பல விடயங்களுக்கு உதவியாக இருக்கும்

  • புதிய திறன்களை கற்று வளர்த்திடுங்கள்

  • புதிய இடங்கள், நாடுகளுக்கு பயணித்திடுங்கள் / புதிய மொழிகளைக் கற்றிடுங்கள்

  • தினமும் எழுதுங்கள் (குறிப்பெடுங்கள்) – எழுதுவது உங்கள் சிந்தனையை முறைப்படுத்தும்

இலட்சியங்களை அடைய

  • முறையாக திட்டமிடுங்கள் (அன்றாட திட்டம் / குறுகிய காலத்திட்டம் / நீண்ட காலத்திட்டம்)

  • தன்னம்பிக்கையுடன் செயல்களை அணுகுதல்

  • எல்லாவற்றிலும் சாதக-பாதகங்களை, அவசர-அவசியங்களை முறையாக சிந்தித்து முடிவெடுங்கள்

  • பண வரவு-செலவுகளில் போதிய கவனம் செலுத்துங்கள்

  • தொடர்பு வட்டத்தை தொடர்ந்து அதிகரித்திடுங்கள்

  • பொருட்களின் அளவைக் காட்டிலும், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

இவையாவும், என் அறிவிற்கு புலப்பட்ட சில முக்கியமான விடயங்களே. உங்கள் தேவையை, உங்கள் வளர்ச்சியை, உங்களை சிந்தனையில் வார்த்தெடுப்பதுதான் உண்மையான முன்னேற்றத்தின் துவக்கம்!


மறந்துவிடாதீர்கள்


உங்கள் வாழ்க்கை சிறப்புற

முதலில் உங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்;

மற்றவை எல்லாம் அடுத்தது தான்;

நீங்கள் நன்றாக இருந்தால் தான்

எல்லாமும் சாத்தியப்படும்;

உங்களை மேம்படுத்த

என்ன செய்ய வேண்டும் என்று

தினம் தினம் சிந்தித்து செயல்படுங்கள்!


- [ம.சு.கு 15.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page