“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-52
குருவை தொடர்ந்து தேடுங்கள்!
இன்றைக்கு எண்ணற்ற வெற்றியாளர்களுக்கும், உயர் பதவியில் இருக்கும் நிர்வாக இயக்குனர்களுக்கும் அவர்கள் பயின்ற பாடத்திற்கும், செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. ஏன் இவர்களுக்கு, இவர்களின் குருமார்கள் பாடத்தை சரியாக சொல்லித் தரவில்லையா? என்ற கேள்விவரும். சற்று விசாரித்தால், இவர்களில் சிலர் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்று பதக்கம் வென்றவர்கள். ஆனால் இன்று வேறு பணியில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி?
நம் தேசத்தில் பரவியிருந்த குருகுல முறை கல்வியை ஒழித்து, வெள்ளையர்கள் பள்ளிக் கல்வி முறையை புகுத்தினர். காலப்போக்கில் வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர், ஆனால் பள்ளிக்கல்வி முறை தொடரட்டும் என அரசாங்கம் முடிவெடுத்து அதை தொடர்கிறது. எத்தனையோ விடயங்களில், நம் தேசத்தின் பழமையான முறைகளுக்கு மாற வேண்டும் என்று கேட்பவர்கள், ஏன் இந்த குருகுல கல்வி முறைக்கு மட்டும் போராடாமல் இருக்கிறார்கள்?
படித்தது ஒன்று, இன்று வேலை செய்வது ஒன்று என்றால், நீங்கள் சரியாக படிக்கவில்லையா என்று கேள்விவரும்? படித்தது வேதியலாக இருக்கும், ஆனால் செய்யும் வேலையோ விற்பனையாளராக இருக்கும். எல்லோருக்கும் விமானம் ஓட்ட ஆசை இருக்கிறது. ஆனால் அத்தனை விமானம் உலகத்தில் இல்லையே. படித்த துறை எதுவானாலும், செய்யும் வேலையில் கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், எங்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. புகுந்துள்ள துறையில் சாதித்து முன்னேற, உங்களுக்கு புதியவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வமும், முயற்சியும், உழைப்பும் இருந்தால் போதும். கற்றுக்கொள்ள தயாராக இருந்தால், உங்களுக்கு கற்றுக் கொடுக்க ஏதேனுமொரு வகையில் குரு வந்தடைவார். பள்ளியில் வந்த ஆசிரியர் மட்டுமே குரு என்றில்லை. பாதுகாப்பாய் வாகனம் ஓட்ட சொல்லிக் கொடுத்த ஓட்டுனரும் குரு தான்.
அன்றைய குருகுலமுறையில் ஒரு ஆசான் எல்லாவற்றையும் போதித்தார். அன்று பாடங்கள் குறைவு. விஞ்ஞானத்தை காட்டிலும் மெய்ஞானம் பெரிதாக இருந்தது. இன்று விஞ்ஞானம் பல்லாயிரம் அவதாரங்களில் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. உலகின் மொத்த அறிவில் 1% தெரிந்தவர் என்று யாரும் இல்லை. ஒருவரிடம் எல்லாவற்றையும் கற்க வாய்ப்பே இல்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் நடத்துவார். பின் ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை, பாடத்திற்கு ஒரு ஆசிரியர், ஏனெனில் பாடங்கள் அதிகரித்து அடுத்த கட்ட செய்முறை அறிவை நோக்கி பயணிக்கும்போது, ஒருவரால் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்று மாணவர்களுக்கு போதிக்க இயலாது. அதனால்தான் இன்றைய சுதந்திர அரசாங்கமும் பழைய குருகுலமுறையை பெரிது படுத்தாமல், பள்ளிக் கல்வி முறையில் பல பாடங்களை தொடர்ந்து போதிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு, பாடங்களின் அளவு மிகப்பெரிய பாரம்தான். ஆனால் அவர்களின் அறிவும், கற்கும் வேகமும் சென்ற தலைமுறையைவிட மிக அதிகம்.
ஒவ்வொரு துறையிலும் அன்றாடம் எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடக்கின்றன. தினந்தோறும் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வருகின்றன. கணினியானாலும், மொழியியலானாலும், மருத்துவமானாலும், அந்தவொரு துறையை முழுவதுமாய் கற்றவர் என்று யாருமில்லை. இன்றைய உலகத்தின் வேகம், நாம் கற்கின்ற வேகத்தைவிட பலமடங்காய் இருக்கிறது.
எல்லாவற்றையும் நாமே அனுபவத்தில் தெரிந்துகொள்ள நீண்டகாலமாகும் என்பதால், பிறருடைய அனுபவங்களை வார்த்தைகளாக்கி நம் எண்ணத்தில் ஏற்ற முயற்சிக்கிறது இன்றைய புத்தகம் சார்ந்த கல்வி முறை. எண்ணங்களில் ஏற்றாமல் வெறுமனே தேர்விற்காக படித்து வாந்தி எடுத்துவிட்டு வருபவர்கள், எந்த அனுபவமும் இன்றி சமுதாயத்தில் களம்புகுகின்றனர். இந்த அரைவேக்காடுகளுக்கு அடிப்படை கணிதம், அறிவியல், வரலாறு எல்லாமே புதிதாய் புரிந்துணர வேண்டியதாகிறது. குருவிடம் கற்பது எப்படி என்று தெரியாததால், களத்திலும் இவர்களுக்கு திண்டாட்டம்தான்.
ஆசிரியர் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு கற்றுக்கொடுத்து அறிவை முழுமையாக்கிவிட முடியாது. நடக்கக் கற்றுக் கொடுத்த தாய் எனும் குருவில் தொடங்கி, வீட்டு நிர்வாகத்தை கற்றுக் கொடுக்கும் மனைவியில் பயணித்து, புதிய தொழில்நுட்ப கைபேசியை உபயோகிக்க சொல்லித்தரும் உங்கள் பேரன்/பேத்தி வரை எல்லோருமே உங்களுக்கு குரு தான். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நீங்கள் இருந்தால், எண்ணற்ற குருமார்கள் உங்களைச் சுற்றியிருக்கிறார்கள். உங்களுக்கு கற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டால், யாருமே கண்டு கொள்ளப் போவதில்லை.
புதியவற்றை தொடர்ந்து கற்பதன்மூலம், இன்று செய்பவற்றை எளிதாக்கி, அடுத்தகட்ட தொழில்நுட்பத்தை புகுத்தி எளிதில் பெரிய சாதனைகள் நிகழ்த்த முடியும். அதேசமயம், உலகில் வரும் எல்லா புதியவற்றையும் நீங்களே கற்றுணர நேரம் போதாது. குறுகிய காலத்தில் அறிவை வளர்க்க கேள்விஞானம் மட்டுமே சிறந்த வழி. எண்ணற்றவர்களோடு கலந்துரையாடும்போது, அவர்களின் அனுபவத்திலிருந்து பலவற்றை எளிதாக தெரிந்துகொள்ளலாம். எந்தத்துறையிலும் உங்களுக்கு அதன் சூட்சுமங்கள் பிடிபட சிலகாலம் எடுக்கும். உங்களுக்கு நல்லதொரு கிடைத்தால், அந்த சூட்சுமங்களை விரைவில் கற்றுணர முடியும்.
உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரிடமும் தொடர்ந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது உங்கள் கையில்.
விஞ்ஞானத்தை கற்பதனாலும்
மெய்ஞானத்தை உணர்வதானாலும்
உரிய குரு இருந்தால்
உங்களின் கற்றல் எளிதாகும்;
குரு இல்லாத பயனம்
கண்ணைக்கட்டி காட்டில் விட்ட கதைதான்;
ஒருசிலரால் மட்டுமே
தட்டுத்தடுமாறி வெளியேற முடிகிறது;
ஏனையவர்கள் உள்ளேயே சிக்கி மடிகின்றனர்;
- [ம.சு.கு 30.11.2022]
Comments