top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-48 – பொருட்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-48

பொருட்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள்!


  • நம்மில் பலர் “எனக்கு என் மெத்தையில், என் தலையணையில், என் போர்வையை போர்த்தினால் தான் உறங்கமுடியும், இல்லாவிட்டால் தூக்கமே வராது” என்பர். ஒரு சிலர் எதற்கெடுத்தாலும், “எங்கள் ஊரில் இப்படி இல்லப்பா! நாங்களெல்லாம் இந்தமாதிரி செய்யமாட்டோம்” என்பார்கள். ஒரு சிலர் “எனக்கு இந்த ஆடை வடிவம் தான் பிடிக்கும், இந்த நிறம் தான் உடுத்துவேன்” என்று அடம்பிடிப்பார்கள்.

  • தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் காபி [குளம்பி] வேண்டும் என்று சிலர். சாப்பிட்ட உடன் புகைபிடித்தால் தான் நிம்மதி என்று சிலர்; தினமும் இரவு ஓரிரு குவளை மது அருந்தினால் தான் நிம்மதி என்று சிலர்; அதையும் தாண்டி சில தவறான சகவாசங்கள், பழக்கவழக்கங்களில் கட்டுண்டு சிலர்; இப்படி மது-மாது-சூது என்று ஏதேனும் ஒன்றில் அடிமையாகி கிடக்க வேண்டுமா?

நம்மவர்களின் வார்த்தைகளை உற்று கவனித்தால், என் தலையணை, என் ஆடை, எனக்கு பிடித்த நிறம், எங்கள் ஊரில் இப்படி, என்று எதற்கெடுத்தாலும் “நான்”, “எனது” என்று தன்னை மட்டுமே மையமாக வைத்து, தனக்குப் பிடித்தவையே உலகத்தில் சிறந்தவை என்று மனதளவில் நிர்ணயித்துக்கொண்டு, தன்னுடைய அந்த சிறிய வட்டத்துக்குள்ளேயே சுழல்கின்றனர். அவர்களிடன் கேட்டால், ஏதோ உலகத்தையே அலசி சிறந்தவற்றையே தாங்கள் கொண்டிருப்பதாக கூறி, அந்த சிறியவட்டத்தில் சிறைபட்டுக் கொள்கின்றனர்.


ஒருபுறம் “நான், என்னுடைய” என்ற மாயையில் சிக்கியிருக்க, மறுபுறம் வெவ்வேறு வகையான மதுபழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவது, ஒருவகை மீளாத்துயர நிலை. தேநீரில் துவங்கி, வெவ்வேறுபட்ட மதுபானங்களைக் கடந்து, சூதாட்டம் எனும் போதையில் சிக்கி, தன்னையும் இழந்து தன் சொத்தையும் இழந்து நிற்கின்றனர். ஏன் இந்த அடிமைத்தனம்?


வெள்ளையன் வெளியேறியதோடு அடிமைத்தனம் விலகியதென்றனர்! சாதிய வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து வருவதால் அடிமைத்தனம் விலகுகிறதென்கின்றனர்! இருக்கலாம். ஆனால், இவையனைத்தும் வெளியுலகின் பிரச்சனைகள். தனிமனிதனாய் உடனடிமாற்றத்தை உங்களால் ஏற்படுத்தமுடியாது. ஆனால் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள், குறிப்பிட்ட பொருட்களின் மீதான அதீத பற்றுதல், உங்களை அதற்கு அடிமையாக்கி, மேற்கொண்டு சிந்திக்கவிடாமல், உலகத்தைப் பற்றிய அறிவையும் மேம்படுத்த விடாமல் தடுத்துவிடும். இன்னும் சிலர், ஆச்சாரம் என்ற பெயரில், வெளியில் உணவுண்ண மாட்டார்கள். விடுதியில் தங்க மாட்டார்கள். இப்படி பழமைவாத கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால், உலகத்தை எப்படி சுற்றி வருவது.


அதற்காக, “போதும்” என்ற மனநிறைவில், தன்னிடம் உள்ளவற்றோடு நிம்மதியாக வாழ்வது தவறென்று நான் சொல்லவில்லை. உண்மையில் “போதும் என்ற மனம் தான் மிகப்பெரிய மன நிம்மதி”. ஆனால் எனக்கு இந்தப் படுக்கைதான், இந்தக் குவளைதான் என்று பொருட்களுக்குள் சிறைப்பட்டு விடாதீர்கள் என்பதே இங்கு வேண்டுகோள். உங்கள் வீட்டில் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்துங்கள். பத்துநாள் வெளியே சென்றால், கிடைப்பவற்றில் நிம்மதியாக உறங்க, கிடைக்கின்ற உணவை மகிழ்வுடன் உண்ண, மனம் தயாராக இருக்க வேண்டும். நாம் கொண்டு செல்லும் பொருட்களை, பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை வரும்போது, மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளும் மனநிலை வேண்டும்.


அந்தப் பகிர்ந்துண்ணும் எண்ணமும், கிடைப்பதில் மகிழ்வரும் மனநிலையும் அமையப்பெற்றால், உங்களால் எந்த சூழலிலும் மகிழ்வுடனும், மனநிறைவுடனும் பயனிக்க முடியும். மாறாக பொருட்களின் மீது அடிமைப்பட்டு கிடந்தால், அவற்றின் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதோடு, எப்போதும் ஏதேனுமொரு குறையோடு வாழ்வது போன்ற மனநிம்மதியற்ற நிலையே தொடர்ந்து நீடிக்கும்.


உங்கள் வீட்டில் உள்ளவற்றை அனுபவியுங்கள் – ஆனால்

அதற்கு அடிமையாகி விடாதீர்கள்;

வெளியுலகப் பயணத்தில்

கிடைப்பதை மகிழ்வுடன் ஏற்கும் மனநிலை இருந்தால்

எங்கும் எதிலும் மகிழ்வுடன் வாழலாம்;

பொருட்களோடு சிறைபட்டு கிடந்தால் – ஏதேனுமொரு

குறை தெரிந்து கொண்டே தான் இருக்கும்;


மனநிம்மதியோடு வாழ்வதற்கு

கணினியோ, கைப்பேசியோ,

படுக்கையோ, குளிர்சாதன பெட்டியோ

இட்லியோ, பீட்சாவோ

எதற்குள்ளும் சிறைபட்டு விடாதீர்கள்!


- [ம.சு.கு 26.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Commentaires


Post: Blog2 Post
bottom of page