“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-40
உங்கள் வெற்றயை தீர்மானிப்பது - பேச்சா? செயலா?
தனித்துவமிக்க பேச்சாற்றலால், அரசியல் கட்சியை துவக்கி, வழிநடத்தி, தேசங்களை ஆண்ட மாபெரும் தலைவர்கள் பலரைப்பற்றி நாம் படித்திருக்கிறோம். சில தலைவர்களின் பேச்சைக் கேட்க, வெயில்-மழை பாராது, பலமணி நேரங்கள் பெருங்கூட்டம் நம் ஊர்களில் காத்திருந்ததாக பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் இன்றோ, அரசியலின் தரம் சற்று தாழ்ந்து விட்டது. மக்களை மயக்கும் பேச்சாளர்களும் குறைந்து விட்டனர்.
விற்பனையாளர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்கள் சிறந்ததென்றும், சிறப்பான சேவை வழங்கப்படுமென்றும் ஆயிரம் வசனங்கள் பேசுவார்கள். அதே சமயம், அந்த குறிப்பிட்ட நிறுவனப் பொருட்களின் தரம் & சேவை பற்றி நீங்கள் முன்னரே அறிந்திருந்தால், அவரின் பேச்சுக்கு மயங்கமாட்டீர்கள். முந்தைய அனுபவத்தைப்பொருத்தே, அந்தப் பொருளை வாங்குவது குறித்து தீர்மாணிப்பீர்கள்.
தங்களின் சிலேடைப் பேச்சாலும், எதுகை-மோனையிலும், ஒரு காலத்தில் மக்களை நிரந்தரமாக கட்டிபோட்டிருந்தனர். முந்தைய காலகட்டங்களில், அந்தப் பேச்சாளர்கள், தங்களின் செயலிலும் தீரர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் இருந்தனர். இன்றும் சில பேச்சாளர்கள் சிறப்பாக அரசியல் கூட்டங்களில் பேசினாலும், ஏனோ அவை பெரிதாக பொருட்படுத்தப்படுவதில்லை!
யதார்த்தத்தில், இன்று அவர்களின் பேச்சும், அவர்களின் செயலும் முற்றிலுமாய் வேறுபட்டிருப்பது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். இன்றும் சிறந்த பேச்சாற்றலுக்கு திரளான மக்களை கட்டிப்போடும் வல்லமை இருக்கிறது. ஆனால் அது நீண்டகாலம் நீடித்திருக்க முடிவதில்லை. பேச்சாளர், சொன்னதை செய்து காண்பித்தால், அவர் சொல்லுக்கு உலகம் கட்டுப்பட்டிருக்கும். ஆனால், சொல்லும் செயலும் மாறுபட்டால், பேச்சுகள், காற்றோடு போகவேண்டியதுதான்.
வியாபாரிகள் தங்களின் ஜாலவார்த்தைகளால், வாடிக்கையாளரை கவரலாம். விற்பனைக்காக சொல்லப்படும் அவர்களின் சிலபல பொய்களை அப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், பொருட்களின் தரம் வாங்கிய சில தினங்களில் காட்டிக் கொடுத்துவிடும். தரமற்ற பொருளை ஏமாற்றி விற்றால், நாளை அந்த கடைக்கு யார் வருவார்கள்?
சந்தையில் ஆயிரம் பொருட்கள் இருக்கலாம். எதுவொன்று தரத்தில் சிறந்து, காலத்திற்கு நீடித்திருக்கிறதோ, அதுமட்டுமே சந்தையிலும் நிலைத்திருக்கிறது. ஏனைய பொருட்கள் சில தினங்களில் குப்பைக்கு போய் விடுகின்றன. அவை ஆரம்பத்தில் எவ்வளவு மின்னினாலும், காலத்தை தாங்கிநிற்கும் தரம் இல்லாவிட்டால் பயனற்று போகும்.
அப்படித்தான் நம் வாழ்க்கை முறைமையும். நாம் நிறைய பேசலாம்! நம் பேச்சுக்கு மக்கள் மயங்கலாம்! ஆனால் அது எத்தனை காலம் நீடிக்கும்? நியாயத்தையும், தர்மத்தையும் நிறைய பேசுபவர்கள், அன்றாட வாழ்வில் அதை சிறிதேனும் கடைபிடித்து வாழவில்லையென்றால், அவர் பேசும் பேச்சுகளுக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது.
குறிப்பிட்ட நேரத்துக்கு வருவேன் என்று உறுதியளிக்கிறீர்கள். குறித்த நேரத்தில் அங்கு வந்து நின்றால் உங்களின் சொற்கள் மதிப்படையும். எல்லாமுறையும் காலம் தாழ்த்தி வந்தால்?
பெற்ற கடனை பத்து நாளில் திருப்பித் தருவேன் என்று உறுதியளிக்கிறீர்கள். பத்து மாதமாகியும் தராமல் இழுத்தால், உங்கள் நாணயம் என்னவாகும்?
இரகசியம் காப்பேன் என்ற உறுதியளித்தவிட்டு ஊர் பூராவும் விஷயத்தை கூறினால், உங்கள் வாக்குறுதிக்கு என்ன மரியாதை?
உங்களை முன்னிலைப்படுத்த, உங்கள் திறனை உலகம் அறிந்துகொள்ள, சமுதாயத்தில் உரிய அங்கீகாரத்தை பெற, உங்களின் முக்கியத்தேவை பேச்சாற்றல். பேசத் தெரியவில்லையென்றால், பத்தோடு-பதினொன்றாக கூட்டத்தோடு நிற்க வேண்டியதுதான். நன்கு பேச தெரிந்தவன், மக்களை கவர்ந்து மெதுவாக தலைமையை நோக்கி முன்னேறுகிறான்.
பேச்சாற்றல் மிக்கவனுக்கு, தலைமை வாய்ப்புகள் தானாக வருகிறது.
பேசத்தெரிந்த பணியாளன், தன் மேலாளரை எளிதாக சமாளித்து முன்னேறுகிறான்.
பேச்சுத்திறமையால் வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனை அதிகரிக்க முடிகிறது.
பேச்சாற்றலால் வாக்குகளை பெற முடிகிறது;
பேச்சாற்றலால் படைவீரர்களை உற்சாகப்படுத்தி, வழிநடத்த முடிகிறது.
ஆம்! பேச்சாற்றலால் எல்லாம் முடியும். ஆனால் அது எவ்வளவு காலம் தொடர்ந்து சாத்தியமாகும் என்பது அவனது செயலின் வேகத்திலும், செயலின் தரத்திலும் தான் இருக்கிறது.
தன் கம்பீரமான பேச்சால், படையை உத்வேகப்படுத்தி வழிநடத்தும்போது, தானும் களத்தில் முன்நின்று போரிட்டால், அவரின் தலைமைக்கு படையென்றும் தயாராக இருக்கும். ஆனால் பயந்து பின் வாங்கினால், அடுத்த முறை அவரின் பேச்சை, யார் மதிப்பார்கள்?
பேச்சால் மக்களை கவரலாம்; வாக்காளர்களை கவரலாம்; பணியாளர்களை கவரலாம்; பேசியதற்கு இணங்க அவரின் செயல் ஆக்கபூர்வமாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தால், அவரை பின்தொடர்ந்து கூட்டம் வரும். ஆனால் செயலில் கோட்டைவிட்டால், அடுத்தமுறை கேட்பதற்கே ஆளிருக்காது.
சாதிப்பதற்கு பேச்சாற்றல் முக்கியம்;
எங்கு? எதை? எப்படி?
பேச வேண்டுமென்று தெரிந்தவன்
எந்த சூழ்நிலையும் சமாளித்து வெற்றிகொள்கிறான்;
பேச்சாற்றல் பெற்று தருமிடத்தை, உயரத்தை
பேச்சாலேயே காலத்திற்கும் தக்கவைக்க முடியாது?
காலத்திற்கும் நிலைத்திருக்க - செயல் முக்கியம்;
பேசிய பேச்சுக்கள் மறந்து போகும்;
செயலால் படைத்தவைகள் காலத்திற்கும் நிலைத்திருக்கும்;
பேச கற்றுக் கொள்ளுங்கள் - செயலால் நிரூபியுங்கள்!
சொல்லும் செயலும் ஒன்றானால்
விண்ணும் மண்ணும் எளிதில் வசப்படும்!
- [ம.சு.கு 18.11.2022]
Kommentare