“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-39
ஆரம்பக்கட்ட சரிவுகள் - வழிகாட்டவா? எச்சரிக்கவா?
ஒரு சிறிய பையன் மிதிவண்டி (சைக்கிள்) ஓட்ட கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். அவனாக அதை எடுத்து சிறிது தள்ளி, ஓட்ட முயற்சிக்கும் போது கீழே விழுந்து விடுகிறான். அடுத்தடுத்த நாட்களிலும் அவன் ஆரம்பிக்கும்போது கீழே விழுகிறான். தொடர்ந்து 3-4 முறை முயற்சித்தும், கீழே விழுந்து விட்டதால், இனி இந்த மிதிவண்டி தனக்கு வேண்டாம் என்று அவன் முடிவெடுப்பானா?
நீங்கள் கோவாவிற்கு ஒரு வாரம் சுற்றுலா செல்கிறீர்கள். அங்கு சென்ற முதல் நாளில், நண்பர்களுடன் சூதாட்ட விடுதிக்கு [கஸீனோ] செல்கிறீர்கள். ஒருமுறை சும்மா விளையாடி பார்க்கலாம் என்று ஒரு விளையாட்டில் பணம் கட்டுகிறீர்கள். முதல் முயற்சியில் இலாபம் வருகிறது. சுலபமாக வந்த இலாபம் ஆசையைத் தூண்ட, மீண்டும் மீண்டும் விளையாடுகிறீர்கள். கடைசியில் அன்று கையில் வைத்திருந்த ரூ.5000 ரொக்கத்தை முழுவதுமாய் இழந்து விடுகிறீர்கள். இன்றைய தோல்வி தற்காலிகமானது, நாளை வென்றே தீருவேன் என்று மீண்டும் பணம் எடுத்துக் கொண்டு போவீர்களா?
மிதிவண்டி ஓட்டிப் பழகும் போது 5-6 முறை விழுவது இயல்பு. யாரேனுமொருவர் துணையிருந்தால் பயில்வது சுலபமாகும், கீழே வீழ்வதும் குறைவாக இருக்கும். அதேசமயம், யாருடைய துணையும் இல்லாமல் பழகும் போது கீழே விழுவது அதிகம் இருக்கும். 1-2 வார கூடுதல் முயற்சியில் தனியாகவே கற்றுக்கொள்ளலாம். எத்தனை முறை விழுந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்தால், யார் வேண்டுமானாலும் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளலாம் என்று சாதாரணமாக பலராலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இங்கு ஆரம்ப முயற்சி சரிவுகள், நம்மை முழுவதுமாய் தயார்படுத்த, நம் கவனத்தை ஒருமுகப்படுத்த, நம்மை வலுவேற்றத் தானே தவிர, நம்மை அச்சுறுத்தி விரட்டிவிட அல்ல.
ஆனால், முதல் நாள் சூதில் இழக்கும் பணம், நம்மை எச்சரிக்கும் ஒரு அபாய மணி. அடுத்தமுறை கவனமாக ஆடினால் ஜெயிக்கலாம் என்று நண்பர்கள் சொன்னாலும், என்றுமே சூது நீண்ட கால வெற்றியை தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சூதிலே இன்று வென்றாலும், ஒரு நாள் உங்களை கட்டாயம் சூது கவ்வும். அந்த முதல் நாள் தோல்வியை எச்சரிக்கையாக ஏற்றுக் கொண்டு, விலகி விட்டால் உங்கள் பணம் மிஞ்சும். அந்த எச்சரித்கையை புரிந்து கொள்ளாமல், நம்மை அறிவாளியாக நினைத்துக்கொண்டு அவற்றை திரும்பச் செய்தால், இருப்பதையும் தொலைத்து ஓட்டாண்டியாக வேண்டியதுதான்.
நாம் எங்கு சென்றாலும், எதை செய்தாலும், அது நமக்கு ஏற்புடையதா? இல்லையா? என்று நமக்கு உள்ளூர ஒரு வழிகாட்டுதல் தோன்றும். அந்த மனத்தின் எண்ணங்களைத் தாண்டி, வெளிப்புறத்தில் சில நிகழ்வுகளும், நிமித்தங்களும் அந்த அபாயத்தை உணர்த்தும் வண்ணம் வந்து போகும். அவற்றை இனம் கண்டு உரிய முடிவெடுக்க வேண்டும். நம் மனம் சொல்வதை கேட்காமல், நமக்கு ஏற்படும் சிலபல தோல்விகளை பொருட்படுத்தாமல், மீண்டும் அவற்றைச் செய்தால், அந்த செயலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவே.
நமக்கு பொருந்தாதவற்றில் கட்டாயம் ஆரம்பக்கட்ட தோல்விகள் நிகழும். அதேசமயம் ஆரம்பத்தில் தோல்வி ஏற்படுபவைகள் எல்லாமும் நமக்கு பொருந்தாததென்றும் சொல்லிவிட முடியாது. சூது நமக்கு பொருந்தாது. ஆனால் மிதிவண்டி ஓட்டுவது சாத்தியப்படக்கூடியதுதான்.
நமக்கு முன்னர் இலட்சம் பேர் மிதிவண்டியோட்டி நிரூபித்திருக்கிறார்கள். கீழே விழுந்ததற்காக பயந்து விலகத் தேவையில்லை. ஏனெனில் இன்று மிதிவண்டி ஓட்டுபவர்கள் எல்லாருமே, ஒரு நாள் கீழே விழுந்துதெழுந்து பழகியவர்கள் தான்.
மறுபுறம் நம்மைப் போல் இலட்சம் பேர் முன்னரே சூதில் கலந்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் அதில் யாரேனும் ஒருவர் வென்று பணக்காரராகினாரா? என்று விசாரித்துப் பாருங்கள். யாருமிருக்க வாய்ப்பில்லை. சூதில், கட்டாயம் ஒரு நாள் தோல்வி நிச்சயம். ஏனெனில் அது அதிர்ஷ்டம் சார்ந்தது, உழைப்பிற்கு அங்கு வெகுவாக ஏதும் வேலை இல்லை. அப்படி தோல்விகள் ஏற்படுவது இயல்பாக நிரூபிக்கப்பட்ட விளையாட்டுக்களிலும், அதிகம் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் விடயங்களில், வருகிற ஆரம்பகட்ட தோல்விகளை, நீங்கள் மிகப்பெரிய எச்சரிக்கையாக கொண்டு விலகிவிட்டால், தப்பித்தீர்கள். அந்த எச்சரிக்கைகளை புரியாமல் தொடர்ந்து விளையாடினால், இருப்பதையும் தொலைத்துவிட்டு வீதியில் நிற்க வேண்டியதுதான்.
செயல்களை துவங்குவதற்கு முன் அவை ஏற்புடையதா என்று அலசங்கள்;
ஆரம்பத்தில் தோல்விகள் ஏற்பட்டால் மறு ஆய்வு செய்து பாருங்கள்;
முன்னர் ஆயிரம் பேர் வென்றிருந்தால் நீங்களும் போராடி வெல்லலாம்;
யாருமே வெல்லாத ஒன்றென்றால், மீண்டுமொருமுறை அலசிப்பாருங்கள்;
யாருமே வெல்லாததை நீங்கள் வெல்ல
என்ன சாத்திய கூறி இருக்கிறதென்று
நன்றாக கணக்கிட்டு பின் களத்தில் குதியுங்கள்;
புதியவற்றைப் படைக்க - சில சமயம
யாரேனும் ஒருவர் அபாயங்களை சந்திக்கதானே வேண்டும்!
- [ம.சு.கு 17.11.2022]
Comments