“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-37
சென்ற ஆண்டே துவங்கி இருக்க வேண்டுமோ?
புதிதாக புத்தகம் ஒன்றை வாசிக்க ஆரம்பித்து ஒரு மாதத்தில் முடிக்கிறீர்கள். புதியவற்றை தெரிந்து கொண்ட மனநிறைவை உணர்கிறீர்கள். கடந்த 10-15 ஆண்டுகளாய் புத்தகங்களை வாசித்து அறிவை விசாலப்படுத்த தவறிவிட்டேனே என்று வருந்துகிறீர்கள்;
உங்களுக்கு புல்லாங்குழல் வாசிக்க மிகவும் ஆசை. ஆனால் பக்கத்து பகுதியில் வசிக்கும் குருவிடம் சென்று பயில்வதை தொடங்காமல் காலம் கடத்துகிறீர்கள். திடீரென்று உங்களின் அடுத்த தெரு நண்பர் நன்றாக புல்லாங்குழல் வாசிப்பதை கேட்க நேரிடுகிறது. அவர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த குருவிடம் பயிற்சி பெருவதாக கூறுகிறார். நீங்களோ இன்னும் முதலடியையே எடுத்து வைக்கவில்லை. என்றைக்கு நீங்கள் துவங்குவது? என்றைக்கு வித்துவான் ஆவது?
திருமணமாகி முதல் 3-5 வருடத்தில் பலருக்கு கிடுகிடுவென்று உடல் பருத்து தொப்பை வந்துவிடுகிறது. அதை உணரும்போது கிட்டத்தட்ட 15-20 கிலோ அதிகரித்திருக்கும். பின்னர் அதை குறைப்பதற்காக, இடையிடையே பட்டினியிருக்க நேரிடுகிறது. அப்போது யோசிக்கிறோம், அன்றைக்கே அளவாக சாப்பிட்டு இருந்தால், இன்று இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லையே என்று!
எல்லவாவற்றிற்கும், காலங்கடந்தபின் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்.
புத்தகம் படித்தால் பாண்டித்தியம் பெறலாம் என்பது நமக்கு தெரியும். ஆனால் புத்தகங்களை கையில் எடுக்க சோம்பேறித்தனம்.
இசை கலையை கற்க குருவைத் தேடிப் போக வேண்டும். கற்றதை தினமும் பயிற்சிக்க வேண்டுமென்று நமக்கு தெரியும். ஆனால் நாம் அதை உரிய நேரத்தில் துவக்காமல் வித்துவானாக ஆசைப்படுகிறோம்.
அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பெருத்து, தொப்பையை சுமக்க வேண்டும் என்று நமக்கு தெரியும். ஆனால் உண்ண ஆரம்பித்தால், எல்லாம் மறந்துபோகிறது.
இப்படி, என்ன செய்தால் என்ன ஆகும் என்று நன்றாக நமக்கு தெரியும். அதற்கான உதாரணங்களை நம் சமுதாயத்தில் கண்கூடாக பார்த்திருப்போம். ஆனால் அவற்றை நாம் செய்ய வேண்டும் என்று வரும்போது, ஏனோ! நாளை செய்துகொள்ளலாம் என்று சாதாரணமாக தள்ளிப் போட்டு விடுகிறோம். அது தலைக்கு மீறி போகும்போது, ஐயகோ! முன்னரே கவனித்து செய்யாமல் விட்டுவிட்டேனே என்று வருந்துகிறோம்.
வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டாமல், வந்தபின் வருந்திப்பயனென்ன. எல்லா தேவைகளும், நிகழ்ச்சிகளும், உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே அவற்றை முறையாக செய்துவிடுங்கள். சோம்பேறித்தனத்தினால் காலம் தாழ்த்திவிட்டு, எல்லாம் கைமீறிப்போன பின்னால் ஐயகோ என்று வருந்துவதில் பயனேதுமில்லை?
வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால், இப்போதே சிந்தியுங்கள்:
அடுத்த ஆண்டு அமர்ந்து யோசிக்கும் போது, இதை அன்றே செய்திருக்கலாமே என்று நீங்கள் வருத்தப்பட நேரிடும் விஷயங்களை இன்றே பட்டியலிடுங்கள்;
பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் நல்ல காலம் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் சீக்கிரத்திலேயே துவக்கி விடுங்கள்;
செய்யும் செயல், எடுக்கும் பயிற்சி, எதுவானாலும் முறையாக தினம் தவறாமல் குறித்த நேரத்தில் செய்து வாருங்கள்;
செய்ததை அப்படியே திரும்பச் செய்வதோடு, அதில் தினமும் 1% முன்னேற்றம் காண முயற்சியுங்கள்.
இன்று என்ன செய்தோம் என்பதை குறிப்பெடுங்கள். குறிப்புகளை மறு ஆய்வு செய்து தவறுகளை திருத்துங்கள்;
உங்கள் தினத்தை திட்டமிட்டு, பட்டியலிட்டு, அவசர-அவசியங்களுக்கு ஏற்ப காரியங்களை முடியுங்கள்;
இவைகள் யாவற்றையும் முறையே தொடர்ந்து செயல்படுத்தி வந்தால், உங்களுக்கு
எட்டாக்கனியென்று எதுவும் இருக்காது:
தவறவிட்டு விட்டோம் என்று வருந்துவதற்கும் எதுவும் இருக்காது;
அடுத்த ஆண்டு செய்யாமல் விட்டுவிட்டேனே என்று வருந்துவதற்கு பதிலாய், இன்றிலிருந்து செய்யத் துவங்கி சாதித்து விடுங்கள்;
- [ம.சு.கு 15.11.2022]
Fantastic one 👌