“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-36
பகிர்ந்தளிக்க தயக்கம் ஏன்?
உங்களுக்கு நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. ஆனால் அப்பா கொடுக்கும் செலவு பணத்தில் ஓரிரு புத்தகங்கள் மட்டுமே வாங்க முடியும். இதுவே உங்கள் புத்தக ஆர்வம் கொண்ட பல நண்பர்களின் நிலையும் கூட. எல்லோரிடமும் காசு குறைவு. இங்கு இந்த நண்பர்களின் புத்தக ஆர்வத்திற்கு தீர்வு இருக்கிறதா? இல்லையா?
மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்படாத கற்காலத்தில், மிருகங்களை வேட்டையாடினால், ஒருவரால் எல்லாவற்றையும் உண்டு தீர்க்க முடியாது. வேட்டையாடியதை தன் சமுதாயத்தோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு வேட்டை கிடைக்காத நேரங்களில், மற்றவர் கொண்டு வருவதில் பங்கு கிடைக்கப்பெற்று உண்டனர். இங்கே உணவைப் பாதுகாக்க குளிர்சாதன பெட்டி இல்லாத காலத்தில், சகமனிதனின் வயிறு அவனுக்கு குளிர்சாதன பெட்டியாக உதவியது.
உங்கள் சேமிப்பில் மாதம் ஒரு புத்தகம் தான் வாங்க முடியுமென்றால் நண்பர்களுடன் கலந்தாலோசித்து யார் எதை வாங்குவதென்று திட்டமிடுங்கள். ஒருவர் படித்து முடித்த புத்தகத்தை மற்றவருடன் கைமாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் படித்து முடிக்க முடிக்க, படிப்பதற்கு வெவ்வேறு புத்தகங்கள் நண்பர்களிடம் நிறைந்திருக்கும். இந்த நட்பின் வட்டம் பெரிதானால், நீங்கள் கூட்டாக ஒரிராண்டில் நூலகமே திறந்துவிடலாம்.
பகிர்ந்தளித்து உண்பது அன்றைய காலகட்டத்தில் உணவை வீணாக்காமல் இருக்க வழிவகுத்தது. இன்று குளிர்சாதன பெட்டி வந்துவிட்டதால், எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி பழையவற்றை சூடாக்கி உண்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால்வரை மிஞ்சிய உணவை யாரேனும் ஒரு வேலையாளுக்கு கொடுத்து விடுவார்கள். இன்று அவை குளிர்சாதன பெட்டிக்குள் நாளை நாமே சாப்பிட பதுங்கிக் கொள்கிறது. எத்தனை குளிரூட்டினாலும், உணவின் தன்மை நேரம் செல்லச் செல்ல கட்டாயம் பாழ்படுவது இயற்கை. பிறருக்கு கொடுக்காமல் நாமே வைத்து நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.
உணவு விஷயத்தில் நமக்கில்லாமல் தீர்ந்து போகக்கூடும் என்ற பயத்தில் கொடுக்கத் தயங்கலாம். ஆனால் உங்களின் நூல்கள், பெற்ற அறிவு, அனுபவங்களை பிறருடன் பகிர்ந்துகொள்வதில் என்ன இழப்பு வந்துவிடப்போகிறது? மாறாய், உங்கள் அறிவை பகிர்ந்து கொள்வதால், உங்களுக்கு பல்வேறு பட்டவர்களின் அனுபவங்கள் தெரியவரும். உங்களின் அறிவும் ஞானமும் இன்னும் விசாலமாகும்.
உங்களிடம் இருக்கும் பொருள் எதுவானாலும்
சமுதாயத்தோடு பகிர்ந்தளித்து உண்பது உங்களுக்கு கட்டாயம் கூடுதல் பயணையே தரும்;
தீர்ந்துபோகும் பொருட்களின் விஷயத்திலும், அப்போதைக்கு பகிர்ந்தளிப்பதில் தீர்வதுபோல தோன்றினாலும், உங்களுக்கு வேண்டிய காலங்களில் அதன் பிரதிபலன் பன்மடங்காய் வந்துசேரும்;
சமுதாயத்தில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அது கட்டாயம் அணுவளவும் குறையாமல் உங்களுக்கு வந்து சேருமென்பது வாழ்வின் எழுதப்படாத நீதி.
நாம் செல்வந்தரென்றால். “பெறுவதினும் கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும்”. நாம் பிறந்தது முதல் இறப்பு வரை வாழ்வதற்கு தேவையான எல்லாவற்றையுமே, இந்த பூமியிடமும், சமுதாயத்திடமிருந்தும் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். நம்மால் எத்தனை முயன்றாலும் பெற்ற கடனை அடைக்க முடியாது.ஏனெனில் அதுவும் இங்கிருந்தே பெறப்பட்டதாகும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் உலக நியதியாகும் போது, பகிர்ந்தளிக்க என்ன தயக்கம்.
பகிர்ந்தளிப்பதால் செல்வம் குறைந்துவிடும் என்றெண்ணுபவர்க்கு குறைகிறது.
பகிர்ந்தளித்து செல்வத்தை பெருக்க முடியும் என்றெண்ணுபவர்க்கு செல்வம் பெருகுகிறது;
என்றுமே கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை பெறுவதில் பெற முடியாது.
ஆயிரம் கோடி செல்வம் சேர்த்தாலும், அது இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் முதலீடு செய்யப்பட்டால் தான் அதற்குப் பயன். ஒன்றும் செய்யாமல் பெட்டிகளில் பூட்டி வைக்கப்பட்டால், கால வெள்ளத்தில் அதன் மதிப்பு குறைந்துவிடும். நீங்கள் தானமாக பிறருக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, பெட்டிகளில் பூட்டிவைக்காமல், சமுதாயத்தில் அந்த செல்வம் புலங்க வழிவகுத்தால், போதுமான பணப்பரிமாற்றம் ஏற்பட்டு, சமுதாயம் செழிப்பதோடு, உங்கள் செல்வமும் தானாய் பெருகும்.
இறுதி யாத்திரையில் எதுவும் வராதிருக்க
பூட்டி வைப்பதில் பயன் என்ன?
அளவுக்கு மிஞ்சியதை பகிர்ந்தளியுங்கள்;
கொடுத்து வாழத் தயங்கினால்
பெறுகின்ற தகுதியை இழக்கின்றீர்கள்!
- [ம.சு.கு 14.11.2022]
Comments