top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-31 – அனுதினமும் தவறாமல் செய்வது தான் வெற்றிக்கான ஒரே இரகசியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-31

அனுதினமும் தவறாமல் செய்வதுதான் வெற்றிக்கான ஒரே இரகசியம்!



  • மலைவாழ் மக்களை பார்த்திருப்பீர்கள். தினமும் ஆயிரக்கணக்கான படிகளை, செங்குத்தான மலைப்பகுதிகளை சர்வசாதாரணமாக ஏறி-இறங்குவார்கள். அதேசமயம் நாம் என்றாவது ஒருநாள் பழனி மலையின் ஆயிரம் படிகளை ஏறி இறங்கினால் கால்வலியென்று ஒருவாரம் பிதற்றுவோம். அதே பழனி மலையை அங்குள்ள ஊழியர்கள் சர்வ சாதாரணமாக தினம் தினம் ஏறி இறங்குகிறார்கள்.

  • மாபெரும் வெற்றியாளர்கள் எல்லோரும் (நீச்சலில் பெல்ப்ஸ், ஓட்டத்தில் உசேன் போல்ட், மட்டைப்பந்தில் சச்சின், கால்பந்தில் மெஸ்ஸி....) தினம்தினம் களத்தில் பல மணி நேரம் ஓய்வின்றி ஓடினார்கள். பயணக்களைப்பு, கைகால் வலியென்று காரணம் சொல்லாமல், தினம் தவறாமல் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவினால், களத்தில் அவர்களால் தைரியமாக எதையும் சந்தித்து சாதிக்க முடிந்தது. அவர்கள் யாரும் திடீரென்று ஒரு நாளில் முளைத்து விடவில்லை. ஓராயிரம் நாட்கள் கடுமையான பயிற்சிக்குப்பின் களத்தில் நிரூபித்தார்கள்.


நூறு படிகளை இறங்கினாலே நமது பின்னங்களில் இரத்தம் கட்டுகிறது. ஆனால் அனுதினமும் ஏறி இறங்கும் பலருக்கு, ஆயிரமாயிரம் படியானாலும் கால்கள் பழகிப் போய் விடுகின்றன புதிதாய் என்றேனும் ஒரு நாள் செய்பவருக்குத்தான் எல்லா வலியும் வரும். அனுதினமும் செய்பவருக்கு எல்லாமே பழகிப்போகிறது. நம் கை-கால்கள் தானாக அவற்றிற்கு ஒத்துப்போய்விடுகிறது.


பலமணிநேரம் பயணம் செய்து களைத்திருந்தாலும், மறுநாள் அதிகாலையில் களத்திலே பயிற்சிக்கு வந்து நின்றார்கள். தனக்கு இங்கு வலிக்கிறது, அங்கு வலிக்கிறதென்று காரணம் சொல்லி ஓய்வெடுக்காமல், தினமும் போராடியதால், போட்டியன்று எப்பேர்பட்ட சவாலையும் சந்தித்து வெல்ல அவர்களால் முடிந்தது.


ஆம்! வெற்றி என்பது ஒரு நாளில் எழுதப்படும் சரித்திரம் அல்ல. அந்த சரித்திர நாளுக்கு உங்களை தயார்படுத்தும் முறைதான் வெற்றியின் இரகசியம். விளையாட்டு, போர்களம், அரசியல், விவாதமேடை என்று களம் எதுவாக இருந்தாலும், வெற்றிகாண நீங்கள் பலநூறு இரவுகள் போராடி பயின்றிருக்க வேண்டும். ஒரே இரவில் உலகை வெல்வேன் என்று புதிதாய் முளைப்பவர்க்கு சரித்திரம் என்றுமே இடம் கொடுத்ததில்லை.


உங்கள் ஆரோக்கியத்தை எடுத்துக்கொள்வோம். தினமும் சத்தான உணவு உண்டு (போதுமான அளவுமட்டும்) போதிய உடற்பயிற்சி செய்தால்மட்டுமே உடலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். அவ்வப்போது ஏதேனும் காரணங்களுக்காக 1-2 நாட்கள் உணவின் அளவு கூடினாலே, சிறுசிறு உடல் உபாதைகள் துவங்கிவிடுகின்றன. அப்படி 1-2 நாள் என்று ஆரம்பிக்கும் ஒழுக்கமின்மை, ‘இன்றொரு நாள் மட்டும்’ என்ற சாக்கில் தொடர்கதையாகிவிடுகிறது. கடைசியில், கடைபிடித்த ஒழுக்கம், கட்டுக்குள் வைத்த ஆரோக்கியம் காற்றோடு போகிறது.


செய்யாமல் இருக்க பலநூறு காரணங்கள் கிடைக்கும்போது, அதை கட்டாயம் இன்று செய்வதற்கென்று ஒரு வழுவான காரணமும் கிடைக்காதா? நீங்கள் காரணங்களை கண்டுபிடித்து தள்ளிப் போடுவதால் யாருக்கு நஷ்டம். ஒரு நாள் ஓய்வென்று ஆரம்பிக்கும் காரணம், படிப்படியாய் ‘இன்றொரு நாளென்று’ தினமும் தொடர்ந்து, உங்கள் கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை, பயிற்சியை முற்றிலுமாய் சீரழித்துவிடுகிறது. ஆறு மாதம் கழித்து பார்த்தால், நீங்கள் தொடங்கிய இடத்திலேயே நின்றிருப்பீர்கள்.


நீங்கள் வெற்றியாளராக விரும்பினால், உங்கள் இலட்சியத்தை நோக்கிய பயணம் அனுதினமும் மெருகேற்றப்பட வேண்டும். உங்கள் பயிற்சியும், பயணமும் இரத்தத்தில் ஊற வேண்டும்.


தினம் தவறாமல் பயிற்சி செய்ய, சில யோசனைகள்:

  • கூடியவரை உங்களின் தினத்தை, அதிகாலையில் துவக்கிவிடுங்கள்;

  • உங்களின் அன்றாட இலக்கு தெளிவாக இருக்கட்டும்;

  • அன்றாடம் குறித்த நேரத்தில் இலக்குகளை நோக்கிய பயிற்சி தொடங்கப்படட்டும்;

  • நீங்கள் மறந்தாலும், உங்களுக்கு நினைவூட்டும் வகையில் குறிப்புக்களை அமைத்துக் கொள்ளுங்கள்;

  • உங்கள் வாழ்க்கைச் சூழலை, உங்கள் இலட்சியத்திற்கு ஏற்ப மாற்றியமையுங்கள்;

  • தினம் தவறாமல் பயிற்சி செய்யுங்கள்; முழுமையாக செய்ய வாய்ப்பில்லாத நாட்களில், செய்யாமல் தவிர்ப்பதற்கு பதிலாய், குறைந்தது 5 நிமிடம் பயிற்சித்துவிடுங்கள்;

  • தன்னம்பிக்கை தரும் நூல்களை (வெற்றியாளர்களின் எழுத்துக்களை) தினம் தவறாமல் படியுங்கள்.

  • சிறுசிறு இலக்குகளை நிர்ணயித்து, சாதித்து காட்டுங்கள். ஒவ்வொரு இலக்கை அடைவதும் உங்களுக்கு மனநிறைவு தரும். உங்களுக்கு நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

  • தினம் தினம் என்ன செய்கிறோம்! எவ்வளவு செய்கிறோம்! என்பதை குறித்து வைத்து தெளிவாக அலசிப் பாருங்கள். குற்றங்குறைகளை திருத்துவது நம் பயனத்தை எளிமையாக்கும்;

வெற்றிக்கு தினம்தினம் செய்வது முக்கியம். அதனினும் அதிமுக்கயம் அனுதினமும் செய்ததையே, செய்த அளவே, செய்தவண்ணமே செய்து கொண்டிருக்காமல், குறைந்தது 1% முன்னேற்றத்திற்கு குறிவையுங்கள். தொடர்ந்த வளர்ச்சி இருந்தால்தான், பெரிய வெற்றிகள் சாத்தியம்.


முதலில் செய்யத் துவங்க வேண்டும்;

துவக்கம் உறுதிசெய்யப்பட்டபின்

அனுதினமும் 1% வளர்ச்சிக்கு திட்டமிடவேண்டும்;

செய்ததையும், செய்து கொண்டிருப்பதையும்

தொடர்ந்து அலசி போதிய திருத்தங்களை செய்ய வேண்டும்;

இவையணைத்தும் இடைவிடாமல் தொடர்ந்தால்

வெற்றிமகள் இல்லம்தேடி வந்து குடியேறுவாள்;


- [ம.சு.கு 09.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page