“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-29
உங்களுக்கு என்ன தெரியாதென்று உங்களுக்கு தெரியுமா?
வீட்டில், சிறிய விவாதத்தின் போது, சமையல் என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்டு விடுகிறீர்கள்? எங்கே! ஒரு சுவையான உணவை சமைத்து காட்டுங்கள் என்று சவால் வந்தால், உங்கள் பாடு திண்டாட்டம் தான். சமையல் செய்வதை பலமுறை பார்த்திருக்கலாம். ஆனால் எதை, எப்பொழுது, எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று அனுபவத்தில் தெரியாமல் செய்தால், நீங்கள் சமைத்ததை நீங்களே சாப்பிட மாட்டீர்கள்;
குழந்தைகள், தன் தாய்-தந்தையர், சகோதர-சகோதரிகள் செய்யும் செயலை / உபயோகிக்கும் ஏதேனுமொரு பொருளை, அவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுவர். அதில் உள்ள சிறிய அபாயங்களை கருத்தில் கொண்டு, குழந்தைகளிடம் இப்போதைக்கு செய்ய வேண்டாம் என்று பெரியவர்கள் மறுத்து விடுவார்கள். ஆனால் அந்தக் குழந்தை, பெரியவர்கள் இல்லாத நேரத்தில், அந்தப் பொருளை எடுத்து உபயோகப்படுத்தி பார்க்கும். சில சமயங்களில் முயற்சி செய்துவிட்டு அப்படியே வைத்துவிடும். பல சமயங்களில் ஏதேனும் ஒன்றை தவறாக செய்து மாட்டிக் கொள்ளும்.
சமையல் ஒரு நுணுக்கமான கலை. ஆயக்கலைகள் 64 அப்படித்தான். அவைகளை பார்ப்பதில் மட்டும் நிபுணத்துவம் வந்துவிடாது. முறையாக கற்று, தொடர்ந்து பயிற்சித்தால் மட்டுமே நிபுணத்துவம் பெற முடியும். அவ்வாறு முறையாக கற்காமல், வெறுமனே என்னால் முடியும் என்று மோதிப் பார்த்தால், ஆரம்பத்தில் சொதப்பல்கள் தான் மிஞ்சும்.
இங்கே குழந்தைக்கு, தனக்கு என்ன தெரியும்-என்ன தெரியாது? எதைச் செய்யலாம்-எதை செய்யக்கூடாது? என்று தெரியாது. ஆனால் அதற்கு எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும் என்று ஆசை. குழந்தையின் ஆசையில் தவறேதுமில்லை. ஆனால் குழந்தைகள் செய்யும் ஒருசில முயற்சிகள், அவர்களை பெரிய ஆபத்தில் சிக்கவைத்துவிடுகிறது.
பிறக்கும்போதே எல்லாமும் தெரிந்துகொண்டா பிறக்கிறார்கள்? எல்லாம் முயற்சித்தால் வருகிறது! என்று சொல்கிறீர்களா!! நீங்கள் சொல்வது மிகச் சரி!
ஆனால் அந்த முயற்சியில் முக்கியமான சூட்சுமம் என்னவென்றால், இன்று, இவ்விடத்தில், இக்கணத்தில் எனக்கு என்ன தெரியும்? என்ன தெரியாது? என்பது நமக்கு தெளிவாக தெரிந்தால், இப்போது
என்ன செய்ய வேண்டும்!
எதை தவிர்க்க வேண்டும்!
எதை கற்றுக்கொண்டு பின் செய்ய வேண்டும்!
எதை பிறர் துணைகொண்டு செய்ய வேண்டும்!
என்று தெளிவாக முடிவெடுக்க முடியும்.
நமக்குத் தெரியாதவற்றை செய்யும்போது, முன்னெச்சரிக்கையாக அதை தெரிந்தவர் உதவியை நாடி, அவர் துணைகொண்டு செய்தால், எந்தவொரு தெரியாத காரியமும், முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக / சிறப்பாக செய்ய வாய்ப்பு அதிகம். இல்லை-இல்லை! நானே செய்துவிடுவேன், யாருடைய உதவியும் வேண்டாம் என்றால், முதல் முறையில் வெற்றி வாய்ப்பு சற்று குறைவுதான் அதுவும் உங்கள் போட்டியாளர் கற்றுத் தேர்ந்தவர் என்றால் உங்கள் வெற்றி வாய்ப்பு சுருங்கிவிடும்.
நமக்குத் தெரிந்தவற்றில் நாம் நிபுணர்களாக இருக்கலாம். நமக்கு தெரியாதவைகளானால், அடிப்படைகளிலேயே தவறுகள் செய்து வீழ்ந்துவிடக்கூடும்.
அப்படியானால், தோற்றுவிடுவோமென்று பயந்து தெரியாதவைகளை என்றுமே செய்யக்கூடாதா? என்று நீங்கள் கேட்கலாம்.
வாழ்க்கையில் எதை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும், அதை நீங்கள் களம் கண்டு முயற்சித்தால் மட்டுமே முடியும். ஆனால் எதை செய்யவேண்டும்? எப்பொழுது செய்யவேண்டும்? எதற்கு தெரிந்தவர்களின் துணை கொண்டு செய்ய வேண்டும்? என்று நீங்கள் செய்வதற்கு முன்னர் அலசி ஆராய்ந்து, தெரியாததை நேர்மையாக ஒத்துக்கொண்டு, உரியவரிடம் பயிற்சியெடுத்த பின் களம்கண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
யதார்த்தம் யாதெனில், நிறையபேருக்கு
விஷயம் தெரிவதில்லை – மேலும்
தனக்கு இது தெரியாதென்ற விஷயமும்
அவர்களுக்கு தெரிவதில்லை!
இப்படி இரண்டுமே தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள்தான்
கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்;
நீங்கள் வெற்றிபெற விரும்பினால்,
தெரிந்த அறிவை, ஆழப்படுத்துங்கள்;
தெரியாத அறிவை, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்;
“கல்லாதது உலகளவு” என்பதை மறந்து விடாதீர்கள்;
தெரியாதென்று பயந்து ஒதுங்கி விடாதீர்கள்;
தெரியாததை தெரிந்து கொள்ள, முயற்சி செய்யுங்கள்;
முயற்சித்தால், எல்லாம் தெரியவரும்!
எப்படி முயற்சி செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்;
கற்றவரின் துணைகொண்டு முயற்சித்தால்
எல்லா முதல் முயற்சியையும் வெற்றியாக்கலாம்;
- [ம.சு.கு 07.11.2022]
Commentaires