“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-28
களம்காணத் துணிவதில் தயக்கம் ஏன்?
ஏதேனும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெறுவோம். இடையிடையே நமக்கு சில சந்தேகங்கள் வரும். ஆனால் எல்லோர் மத்தியிலும் எழுந்து கேட்பதற்கு தயக்கம். இறுதியில் வகுப்பு பற்றிய கருத்துக்களை எல்லோரிடம் கேட்பார்கள். அதிலும் எழுந்து நம் கருத்துக்களை சொல்ல பெரிய தயக்கம். எதையும் எழுந்துநின்று கேட்பதற்கு, ஏன் இத்தனை தயக்கம்?
சந்தையில் எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. நமது நண்பர் பங்குகளில் நன்கு ஆராய்ந்து முதலீடு செய்து போதுமான இலாபம் சம்பாதிப்பார். பங்குச்சந்தை முதலீட்டில் இருக்கும் அபாயங்களை கருத்தில் கொண்டு, நாம் அதை முற்றிலுமாய் தவிர்த்து, வங்கியில் வைப்புநிதியில் சேமிப்போம். நம் பணம் வருடம் 5% வளரும். ஆனால் துணிந்து பங்கு சந்தையில் முதலீடு செய்த நண்பருக்கு 10%-50% சதவீதம் வரை வளரும். அவரின் செல்வ வளர்ச்சியை பார்த்து நாம் பொறாமைப் படுவோம்! ஒருபுறம் நமக்கு பங்குச்சந்தையை பார்த்து நியாயமான பயம். மறுபுறம் நம் ஊரில் யாரேனும் 5%மாத வட்டி கொடுப்பதாக கவர்ச்சி வார்த்தைகளை கூறினால், அவரை நம்பி பணத்தை கொடுத்து ஏமாறுவோம். ஏன் இந்த முரண்பாடு?
உங்களுக்குத் தெரியாததை கேட்டு தெரிந்துகொள்ள, உங்களுடைய கருத்துக்களை கேட்பவர்களுக்கு சொல்ல, ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்.
எந்த முதலீட்டிலும் ஆபத்திருக்கும். ஏன் வங்கிகளே கூட மூழ்கிப்போய் பைப்புநிதிக்கும் சிக்கல்வருகிறது. ஒரு கட்டத்தில் அரசாங்கங்களே திவாலாகின்றன. எந்தவொரு சிறிய அபாயமும் இல்லாமல், எல்லா வளர்ச்சியையும், வெற்றிகளையும் பெறுவது எப்படி சாத்தியமாகும்?
காலை படுக்கையை விட்டு எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்வது வரை தொடர்ந்து ஏதேனும் ஒரு அபாயம் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கும். சிறியதும்-பெரியதுமாய் இருக்கும் எண்ணற்ற ஆபத்துகளினூடே நாம் எப்படி பயணிக்கிறோம் என்பது தான் நம்முடைய அனுபவம்.
இருப்பதைக் கொண்டு வெறுமனே வாழ்க்கையை நகர்த்துவது நம் குறிக்கோளாக இருந்தால், பெரிதாக எதையும் துணிந்து செய்ய வேண்டியதில்லை. அதே சமயம்
பெரிய இலட்சியங்களை அடைய வேண்டும்
நிறைய செல்வம் சேர்க்க வேண்டும்
சமுதாயத்தில் நல்ல அங்கீகாரத்தையும், மரியாதையும் பெற வேண்டும்
என்ற விருப்பங்கள் இருந்தால், வெறுமனே காலம் கடத்துபவருக்கு, இது எப்படி சாத்தியமாகும்?
விளையாட்டில் சாதிக்க விரும்பினால், தினம்-தினம் உடலை வருத்தி எண்ணற்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்;
வியாபாரத்தில் வெற்றி பெற விரும்பினால், தயக்கமின்றி தினந்தோரும் புதிய வாடிக்கையாளர்கள் பலரை சந்தித்து விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்க வேண்டும்;
இருக்கின்ற செல்வத்தை பெருக்க வேண்டுமானால், முதலீட்டு வாய்ப்புகளை தொடர்ந்து நன்றாக ஆராய்ந்து, துணிந்து முதலீடு செய்ய வேண்டும். [குறிப்பு: எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைத்து விடாதீர்கள். முதலீட்டு அபாயங்களுக்கு ஏற்ப பிரித்து பலவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.]
சமுதாயத்தில் நற்பெயரும், அங்கீகாரமும் பெற விரும்பினால், பொது காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டும். நம் குடும்ப நலத்தோடு, நாம் வாழும் சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, பொது செயல்களில் தலைமையேற்று வழிநடத்தினால், நற்பெயரும், போதிய புகழும் அங்கீகாரமும் தானே வந்து சேரும்;
இப்படி உங்களுக்கு எது வேண்டுமானாலும், அதை நோக்கிய முதல் அடியை நீங்கள்தான் எடுத்து வைக்கவேண்டும்.
"எதுவுமே செய்யாமல் வெறுமனே இருந்தால்,
எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டு இருந்தால்,
வேடிக்கை மனிதராய் வெந்து சாக வேண்டியதுதான்;"
"வெற்றி-தோல்வியெல்லாம் களம் காண்பவர்களுக்கு மட்டும்தான்;
எல்லாவற்றையும் துணிந்து செய்யுங்கள்;"
"காரியங்களின் சாதக-பாதகங்களை கருத்தில் கொண்டு
கணக்கிட்டு களத்தில் குதியுங்கள்;
வென்றால் சரித்திரம்! தவறினால் அனுபவம்!"
- [ம.சு.கு 06.11.2022]
コメント