“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-24
நேரம்! தரம் ! விலை - மூன்றையும் வெல்வது சாத்தியமா?
மிகச்சிறந்த, கலை நயம் மிக்கதொரு கட்டிலோ, நாற்காலியோ உங்கள் வீட்டிற்கு வேண்டுமானால், கைதேர்ந்த ஆசாரியிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும். அவர் செய்வதற்கு ஒத்துக் கொள்வதற்கு முன் அதை செய்ய 2-3 மாதமாகும் என்று காலக்கெடுவை கூறிவிடுவார். ஏனெனில் சிறந்தவைகளை அவசரத்தில் செய்து விடுவது சாத்தியம் இல்லை;
ஒரு மணி நேரத்தில் 500 கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பாக பயணிக்க வேண்டுமானால், இன்றைய காலகட்டத்தில் விமானம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழி. விமானத்தில் பறக்கும் கட்டணம் இரயிலை விட மிகமிக அதிகம் தான். ஆனால் பாதுகாப்பாக ஒரு மணி நேரத்தில் சென்று சேர வேண்டுமானால், அதற்கான விலையை கொடுத்தால் தானே சாத்தியப்படும்;
உங்களுக்கு - சிறந்த பொருட்கள் வேண்டும்;
சீக்கிரமாக வேண்டும்;
விலை மலிவாக வேண்டும்;
இவை மூன்றும் ஒரு சேர கிடைப்பது
எப்படி சாத்தியமாகும்?
எல்லாவற்றிலும் சிறந்ததாகவே உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், அதற்கான விலையை கொடுத்துத்தானே ஆக வேண்டும்.
ஒருவேளை உங்களால் அதிக விலையை கொடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நல்ல பொருளாக வேண்டுமென்றால், நிறைய பொறுமை வேண்டும். சந்தையிலே பல கடைகள் ஏறி-இறங்கி தேட வேண்டும். எங்கு தரமான பொருள் குறைவான விலையில் விற்கப்படுகிறதென்று தேடியலைந்து வாங்க வேண்டியதுதான். ஒருவேலை அது புதிதாக செய்யப்பட வேண்டிய பொருளென்றால், நீங்கள் தயாரிப்பாளரிடம் அவசரப்படுத்த முடியாது. அவர் வேலைப்பளு குறைந்த நாட்களில், உங்களுக்கு நன்றாக செய்து தருவார். கூலியும் குறைவாகவே வாங்குவார். இன்றைக்கே, இப்பொழுதே என்று அவசரப்படுத்தினால், அவர் விலை அதிகமாகத்தான் கேட்பார்.
திருவிழா, பண்டிகை வருகையில், பெருநகரங்களில் வேலையின் பொருட்டு தங்கியிருக்கும் எல்லோருமே தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். ஒரே நாளில் எல்லோரும் கிளம்ப முயற்சிப்பதால், பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துவிடுகிறது. தேவை அதிகமாக இருப்பதால், தனியார் சொகுசு பேருந்து கட்டணங்களும், பல மடங்கு உயரத்தான் செய்கிறது. அதே பேருந்துக்கட்டணம், சாதாரண நாட்களில் குறைவாகத்தான் இருக்கிறது.
பொருள்சார்ந்த வணிகமோ, சேவை சார்ந்த வணிகமோ, ஒன்றைமட்டும் மறந்து விடாதீர்கள் - நேரம் / தரம் / விலை என்ற மூன்றும் ஒருசேர ஒருவர் பக்கம் இருப்பது சாத்தியமில்லை. நீங்கள் வியாபாரியாக இருக்கலாம் அல்லது வாடிக்கையாளராக இருக்கலாம், நேரம் /தரம் / விலை இந்த மூன்றின் சிறப்பும் ஒருவருக்கே கிடைப்பதற்கு சாத்தியமில்லை; என்னதான் பரிவர்தனையானாலும், அதிகபட்சம் அந்த மூன்றில் இரண்டை மட்டுமே உங்களால் கட்டுப்படுத்த முடியும் - மற்றொன்று அடுத்தவர் சொல்வது தான்;
தரமான பொருள் சீக்கிரத்தில் வேண்டுமென்றால், விலை அதிகம் கொடுத்தாக வேண்டும்;
விலை குறைவாக இருக்க வேண்டும், அதே சமயம், சீக்கிரம் வேண்டுமென்றால் மிகச் சிறந்த தரத்தில் அது கிடைக்கப் பெறுவது சாத்தியமில்லை;
தரமான பொருள் வேண்டும் - அதே பொருள் குறைந்த விலையில் வேண்டும் என்றால் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. நீங்களே அலசி ஆராய்ந்து தேட வேண்டும் அல்லது உற்பத்தியாளருக்கு போதுமான நேரத்தை கொடுத்து, தயாரித்துத்தர சொல்ல வேண்டும்.
எப்பொழுதும், மூன்று விடயங்களில் இரண்டை மட்டுமே உங்களால் எந்த தருணத்திலும் தேர்ந்தெடுக்க முடியும். காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப, எந்த இரண்டு உங்களுக்கு தேவை என்பதை நீங்கள் முடிவெடுங்கள்; மற்றொன்றை எதிரில் இருப்பவர் முடிவெடுப்பார்!
- [ம.சு.கு 02.11.2022]
Comments