“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-21
தொழில்நுட்ப வளர்ச்சியை உங்களுக்கு சாதகமாக்குங்கள்!
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு பெரியவர் சொன்னார், வலைதளங்களில் இரயில் முன்பதிவு, பணப்பரிவர்த்தனை, மாப்பிள்ளை தேடல் என்று எல்லாமே நடக்கிறது. மனிதனை மனிதன் நம்பிய காலம் மலையேறிப்போய்விட்டது. “காலம் கலிகாலம்”. இந்த அவசரயுகம் எங்கு தான் போய் முடியுமோ என்று ஆதங்கப்பட்டார்;
கொரோனா பெருந்தொற்று காலத்தில், பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், கூடியவரை மாணவர்களின் கல்வி இணையத்தின் உதவியால் தொடர்ந்தது. பெரும்பாலானவர்களின் அலுவலக வேலைகளும் வீட்டிலிருந்து தொடர்ந்தது. “இணையம்” எல்லோரையும் “இணைத்து வைத்திருந்தது”, ஒருவகையில் எல்லோருக்கும் ஒரு மிகப்பெரிய ஆறுதல்தான்;
கடந்த ஒரு நூற்றாண்டாய் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதகுலம் தோன்றியது முதல் ஏற்பட்ட அனைத்து வளர்ச்சியையும் ஒருசேர விழுங்கி புதிய பரிமாணத்தை தொடங்கிவிட்டது. இயற்கையான உயிரினங்களுக்கு நிகராய், செயற்கை உயிரினம் வரத்துவங்கிவிட்டன. தொழில்நுட்பம் எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைசியாக ஆன்மீகத்திலும் புகுந்து அதிலும் தன் ஜாலவித்தைகளை காண்பிக்கிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பார்த்து, ஏன் ஒரு சாரார் [குறிப்பாக வயதானவர்கள்] பயப்படுகின்றனர். அதை சமுதாயத்தின் சீரழிவு என்று ஏன் அவர்கள் சாடுகின்றனர். அப்படி என்னதான் அதில் குற்றம்?
தொழில்நுட்பம் உடல் உழைப்பை குறைத்து, மனிதனை நிரந்தர நோயாளி ஆக்கிவருகிறது;
தொழில்நுட்பம் சாதாரண மனிதனின் சிந்தனைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் குறைத்து விடுகிறது;
தொழில்நுட்பம் தனிமனித சுதந்திரத்தை முற்றிலுமாய் சிதைத்து எண்ணற்ற மன நோயாளிகளை உருவாக்குகிறது;
தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு நல்ல பயன்பாட்டிற்கு எதிராகவும், எண்ணற்ற எதிர்மறை தீயவிளைவுகள் வளர்ந்து வருகின்றன;
உண்மையில் இவர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாமே சரிதான். ஆனால் அவற்றைப் பார்க்கும் கோணமும், அதை அவர்கள் அணுகும் முறையும்தான், காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை;
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஒருவரே சமையலறையில் எல்லாவற்றையும் செய்யமுடிகிறது. பல உணவு வகைகளை, சில மணி நேரங்களில் தயார் செய்ய முடிகிறது. முந்தைய காலத்தில் 3-4 பேர் குடும்பத்தில் சேர்ந்து செய்தது, இன்று ஒருவரால் சாத்தியபடுகிறது;
25 கிலோமீட்டர் பயணத்திற்கு இரண்டு நாள் மாட்டு வண்டி பயணம் சென்றகாலம் போய், வெறும் 30 நிமிட பேருந்து பயணம் என்று சுருங்கி விட்டது;
உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் அறிவு பெட்டங்கள், நம் கண்ணெதிரே, கணினித்திரையில் நம் கட்டுப்பாட்டில் படித்துணர ஏதுவாய் கிடைக்கிறது;
வணிகம், வங்கி சேவை, பயணங்கள், நிகழ்ச்சிகள் என்று எல்லாமே கணினிமயமாகி, நம் விரல் நுனியில் கிடைக்கப்பெறுகிறது;
முன்னர் 100 தொலைபேசி எண்களை நினைவில் கொண்டு தொடர்புகொள்ள சிரமப்பட்டோம். இன்று 10,000 எண்களையும் நொடி பொழுதில் கையாளவும், பேசவும் கைப்பேசி இருக்கிறது;
தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதேசமயம் எதிர்மறை விளைவுகளும் நிறைய உண்டு. எல்லா எதிர்மறை விளைவுகளையும் தாண்டி, தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக மனிதகுல வளர்ச்சிக்கும், நம் தனி மனித வெற்றிக்கும் பயன்படுத்த, நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
தேவையின்றி சமூக வலைதளங்களில் உலாவுவதை குறைத்து, அளவோடு நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு, ஏனைய பொழுதில் அறிவார்ந்தவற்றை வாசியுங்கள்;
குழந்தைகளுக்கு தொடுதிரை நேரத்தைக் குறைத்து, மற்ற குழந்தைகளோடு வெளியில் சென்று விளையாட வையுங்கள்;
புதியவற்றை தேடித்தேடி கற்றுக் கொள்ளுங்கள்; புதிய கண்டுபிடிப்புகள், உங்களின் வாழ்க்கையை எளிமையாக்கி, வளமாக்கும்;
தொழில்நுட்ப வளர்ச்சியை, உங்கள் அன்றாடப் பணியிலும், செய்யும் தொழிலும் எப்படி பயன்படுத்தி வெற்றி பெறுவது என்று தொடர்ந்து சோதனை கொண்டிருங்கள். ஒன்றில்லாவிட்டாலும், மற்றொன்று உங்களின் வளர்ச்சிக்கு பேருதவியாய் இருக்கும்;
தொழில்நுட்ப வளர்ச்சியென்பது, தனிமனித மேம்பாட்டிற்கும், சமுதாய வளர்ச்சிக்குமான அரிய சொத்து. அதை எதிர்மறையாக கையாண்டு வீழ்ந்து விடாதீர்கள். தொழில்நுட்பத்தின் எல்லா வளர்ச்சியையும், ஆக்கபூர்வமாக கையாண்டு, நாமும், நம் சமுதாயம் வளம் பெற தொடர்ந்து முயற்சி செய்வோம்.
- [ம.சு.கு 30.10.2022]
Comments