“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-20
தேவையற்ற சுமைகளை அதிக தூரம் சுமக்காதீர்கள்!
சிறு வயதில் வகுப்பில் மாணவர்கள் மத்தியில் நாம் ஏதேனுமொரு தலைப்பில் பேச முயற்சிப்போம். முதல் முயற்சியில் மிகவும் திக்கித் தடுமாறி பேசுவோம். அதை சகமானவர்கள் கிண்டலடித்து சிரித்திருக்ககூடும். அந்த முதல் முறை அனுபவம் தவறானதால், இன்று வரையிலும் மேடை ஏறி பேசத் தயங்குகின்ற / பயப்படுகின்ற எண்ணற்றவர்கள் இருக்கின்றனர்.
ஒருசிலர் மலைப் பகுதியில் பேருந்தில் சென்றால் தனக்கு வாந்திவரும் என்று கூறுவர். சிறுவயதில் ஓரிருமுறை அவ்வாறு நிகழ்ந்திருக்கும். அது இன்றைக்கும் அவர்கள் நினைவில் இருந்துகொண்டு, மலைப் பகுதி பிரயாணம் என்று சொன்னவுடன் வயிறு கலக்க ஆரம்பித்துவிடும். தொடர்ந்து சென்றால் கட்டாயம் அவர்களுக்கு வாந்திவந்துவிடுகிறது. அதேசமயம், அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது எவ்வளவு வளைவான மலைப்பகுதியைக் கடக்கும்போதும் எந்தவொரு குமட்டலும், வாந்தியும் வருவதில்லை.
என்றைக்கோ நடந்ததை ஏன் இந்த மனம் இன்றைக்கும் நினைத்து பயப்படுகிறது, என்பது எல்லோருக்கும் ஒரு புரியாத புதிர்தான்.
இன்று மிகப்பெரிய பேச்சாளர்களாக இருக்கும் எல்லோருமே தங்களின் முதல் முயற்சிகளில் பெரிய தோல்வியடைந்தவர்களே! தொடர்ந்து முயற்சித்தார்கள், வென்றார்கள்!
மலைப்பகுதி பயணம் என்று நம் எண்ணங்களுக்கு தெரியாமல் உறங்கினால் எந்த தொந்தரவும் இருப்பதில்லை. அது தெரிந்தால், உடனே எண்ணங்கள் பழைய நினைவுகளோடு ஒப்பிட்டு குமட்டலை துவக்கிவிடுகிறது.
சிறுவயதில் பெற்றோரிடம் / உறவுகளிடம் / பள்ளியில் சகமாணவர்களிடம் / ஆசிரியர்களிடம் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் இன்றைக்கும் மனதை பாதித்துக்கொண்டிருக்கும்;
சில தவறான பழக்கம் வழக்கங்களுக்கு அடிமையாகி வெளிவர முடியாமல் சிக்கி, தெரிந்தே வாழ்க்கையை மேலும் சீரழித்துக் கொண்டிருப்பார்கள்;
வாழ்வில் ஏற்பட்ட சில அசாதாரண நிகழ்வுகள், இன்றைக்கும் கனவு-நினைவுகளில் வந்தாலே மனம் பதபதைத்து, உடல் வியர்த்து விருவிருத்துப் போகும்;
முன்னர் செய்த ஏதேனுமொரு தவறினால் பிறருக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்த்து, இன்றும் குற்ற உணர்வில் வேதனையடைவர்;
எதிர்பார்த்தது நடக்காமல் தன்னை ஏமாற்றியவர்களை, இன்றைக்கும் அதே கண்ணோட்டத்தில் பார்த்து ஒதுக்குவார்கள்;
சக ஊழியரோ / நண்பரோ, பழைய கசப்பான அனுபவத்தை இன்றைக்கும் குத்திக்காட்டி, வேதனைப்பட வைக்கலாம்.
இப்படி வெவ்வேறுபட்ட பழைய அனுபவங்களின் காரணமாக, எண்ணற்ற எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்து கிடக்கும். அது தானாக பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டு நம்மை வாட்டி வதைக்கும். அந்த நினைவுகள் நம்மை வருத்துவதோடல்லாமல், பலரின் வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கவும் செய்கிறது.
இந்த பழைய கசப்பான அனுபவங்களை எத்தனை காலம் தான் சுமப்பது. அந்த அனுபவங்கள் ஏற்படுத்திய வலி மறைந்தாலும், அதன் வடுக்கள் நீண்ட காலம் பாதிக்கிறது. அப்படிப்பட்ட தேவையற்ற வலிகளையும், வேதனைகளையும், சுமைகளையும் சுமந்து கொண்டே இருந்தால், காலத்திற்கும் அப்படியே பயந்து வாழ வேண்டியதுதான். எந்த ஒரு முன்னேற்றமும் நம் வாழ்வில் ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நாம் முன்னேற விரும்பினால்
பழைய பிழைகள் / தவறுகளை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சிக்க வேண்டும். நடந்தவற்றையே அதிகம் குத்திக் கிளறிக் கொண்டிருப்பதில் பயனேதுமில்லை;
மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்; தேவையற்ற எதிர்பார்ப்புக்கள், அதீத மன அழுத்தத்திற்கு காரணமாகிறது; எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில், ஏமாற்றங்களும் குறைந்தேயிருக்கும்.
உங்களின் தேவையற்ற நினைவுகள் / அனுபவங்களை பட்டியலிடுங்கள். அவற்றை நிரந்தரமாக தீர்க்க வழி இருக்கிறதா என்று அலசிப் பாருங்கள்; தேவைப்பட்டால் மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ அனுகி ஆலோசனை கேளுங்கள்;
எதைச் செய்வதானாலும், நாளை என்று தள்ளி போடாமல், இன்றைக்கே செய்வதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து, உடனுக்குடன் செய்து முடியுங்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் பழைய கசப்பான அனுபவங்களின் தாக்கம், உடலில் ஏற்படும் புற்றுநோயினும் கொடியது. அனுபவங்களினின்று கிடைத்த பாடத்தை மட்டும் நினைவில் கொண்டு, இதர சுமைகளை இறக்கி விடுங்கள்.
தேவையற்ற சுமைகளை
[அனுபவங்களை, வலிகளை, வேதனைகளை]
அதிக தூரம் சுமக்காதீர்கள்;
அவற்றை சுமப்பதில் பயனேதுமில்லை;
அந்தச் சுமை எதுவென்று கண்டுபிடிங்கள்;
படிப்படியாக அவற்றை சரி செய்ய முயலுங்கள்;
சுமைகள் குறைந்தால் பயணம் சுலபமாகும்.
- [ம.சு.கு 29.10.2022]
Commenti