top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-14 – ஒரே சமயத்தில் பலவற்றைச் செய்யலாமா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-14

ஒரே சமயத்தில் பலவற்றை செய்யலாமா?


  • திரைப்படங்களில் பல கதாநாயகர்கள், எண்ணற்றவற்றை ஒரே நேரத்தில் செய்து சாதிப்பதுபோல காட்டுவார்கள். இரண்டு கைகளில் எழுதுவது துவங்கி, நொடிக்கு நொடி வேறுபட்டவைகளை செய்து காண்பிப்பார்கள். அந்தமாதிரி மாயவித்தைகள் திரைப்படத்தில் சாத்தியமாகலாம்! நம் யதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியமா?

  • ஒரு ஓவியரோ, சிற்பியோ, தங்களின் வேலையின் போது, கூடவே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு செய்தால், எப்படி சிறந்த கலைப் படைப்புக்கள் உருவாகும்?

  • தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே படித்தால் என்ன பதியும் மனதில்? படிக்கவேண்டியதை எழுதிக்கொண்டே படித்தால், நம் மனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.

ஒருமுகப்பட்ட முழுமையான கவனத்தோடு செய்கின்ற வேலையின் தரமும், கவனமின்றி செய்யும் செயலின் தரமும், எவ்வளவு வேறுபட்டிருக்கும் என்று உங்களுடைய செயல்களை அவ்வப்போது நீங்களே ஆராய்ந்து பார்த்தால் தெளிவாக புரியும்.


சமையல் அறையில் பெண்கள், இன்று நான்கு அடுப்புகளில் சமையல் செய்யும் அளவிற்கு அதிவேகமாகவும், பல வேலைகளை ஒரு சேரவும் செய்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விடயம், அவர்களின் கவனம் முழுவதும் சமையலென்ற ஒன்றின் மீது இருப்பதால், அது சாத்தியப்படுகிறது. ஒரே சமயத்தில் 3-4 அடுப்புகளை கவனிக்க முடிகிறது. அதேசமயம், அந்தநேரத்தில் அவர்கள் புத்தகம் படிக்க முயற்சிப்பதில்லை. அப்படி முயற்சித்தால், அது சமையலின் சுவையை பாதித்துவிடும். ஒருவேலை புத்தகம் படித்து புதிய பதார்த்தத்தை செய்வதானால், அந்த நேரத்தில் வேறு எதையும் மற்ற அடுப்பில் அவர்கள் வைப்பதில்லை. எந்த அளவிற்கு எதில் கவனம் செலுத்தமுடியும் என்பதில், அவர்களின் தெளிவு, மிகப்பெரிய மேலான்மைப் பாடம் நமக்கு.


ஒரு சமயத்தில், உங்களால் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். பழக்கப்பட்ட வேலையாக இருந்தால், இன்னொன்றை உங்கள் கைகள் தானாக செய்து கொண்டிருக்கும். அதைத்தாண்டி மூன்றாவது செயலை செய்வது சாத்தியமில்லை.


எண்ணங்களால் ஒரு செயலை செய்யும் போது,

பழக்கப்பட்ட கைகளால் இன்னொன்றை செய்யலாம்.


மிகப்பெரிய தசாவதானியானாலும், ஒரு சமயத்தில் ஒரு கேள்வியைத் தான் காதில் வாங்க முடியும். 3-4 பேர் ஒருசேர வேறுபட்ட விடயத்தைப் பேசினால், யாராக இருந்தாலும் எதுவும் புரியாது.


நாம் மாய வித்தை செய்யும் கதாநாயகர்கள் அல்ல! எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளும் தசாவதானிகளும் அல்ல! சாதாரண மனிதர்கள் - பல வேலைகளை ஒருசேர செய்ய முயற்சிப்பது தேவையற்ற குழப்பத்தையே அதிகரிக்கும். நம்மால் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்வதே சாத்தியம். அதேசமயம் எந்த செயலை முன்னர் செய்ய வேண்டும்? எதை இப்போது சிறிதும், பின்னர் மீதியுமாக பிரிந்து செய்யவேண்டும்? எதற்கு நேரம் அதிகம் ஒதுக்கி செய்யவேண்டும்? என்று அவசர-அவசியங்களுக்கு ஏற்ப முன்னிலைப்படுத்தி செய்வது, அவரவர் சாமர்த்தியம்.


எது கைக்கு பழக்கப்பட்ட வேலையோ, எதற்கு அதிக கவனம் தேவையில்லையோ, அந்த வேலைகளை மற்றொரு வேலைகளோடு சேர்த்து செய்வது சாத்தியம். அது நேரத்தை மிச்சமாக்கும். அதே சமயம், அந்த செயல் மற்றோரு வேலையின் தரத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு கீழ் 10 வேலையாட்கள் வேலை செய்கையில், ஒவ்வொருவரையும் தொடர்ந்து கவனிக்கும் போது நீங்கள் வேறுவேறு விடயங்களுக்கு, நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி யோசிக்க வேண்டியிருக்கும். பிறர் வேலைகளை மேற்பார்வையிடும்போது அது சாத்தியம். அதேசமயம், அப்படி பலவிடயங்களை மாற்றி மாற்றி கவனித்துக் கொண்டிருக்கும்போது, எந்தவொரு முக்கிய முடிவுகளையும் அலசி ஆராயாமல் எடுத்து விடாதீர்கள். வெவ்வேறு செயல்களோடு குழப்பிக்கொண்டு, தவறான அனுமானங்களினால் சில முடிவுகள் தவறாகக்கூடும்.


மறந்துவிடாதீர்கள்! எல்லா வேலைகளையும் நம்மால் செய்ய முடியும். ஆனால் ஒன்றன்-பின்-ஒன்றாக செய்வதே சாத்தியம். எல்லாவற்றையும் சாமர்த்தியமாக நிர்வகிக்க உங்களால் முடியுமானால், வேலையை பகிர்ந்தளித்து மேற்பார்வையிட்டு எல்லாவற்றையும் ஒருசேர செய்து முடியுங்கள்.


உங்களுக்கிருப்பது இரண்டு கைகள்தான். அதனால் ஒரு எல்லைவரைதான் செய்யமுடியும். 100 காரியங்கள் ஒருசேர செய்ய வேண்டுமானால், உங்களோடு 200 கைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் சத்தியமாகும்!


- [ம.சு.கு 23-10-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page