“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-13
ஏன் சீக்கிரமாக உறங்க வேண்டும்?
இளைய தலைமுறையினர் பலரும் இன்றை காலகட்டத்தில் சூரியன் உதித்தபின் வாழ்வதை காட்டிலும், சூரியன் மறைந்த பின் தான் அதிக நேரம் தங்களின் வாழ்வை நகர்த்துகின்றனர். ஆம், காலையில் 8-9 மணிக்கு எழுவதும், இரவு 2-3 மணிவரை சமூகவலைதளங்களில் உலாவிவிட்டு தாமதமாய் உறங்குவதும் தான் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையாக இருக்கிறது. இது வரமா? சாபக்கேடா?
இரவு நேரத்தில் அமர்ந்து வேலைகளைச் செய்தால், யாருடைய தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக செய்ய முடிகிறது என்று ஒரு சாரார் சொல்கின்றனர். ஒரு சிலருக்கு அது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு அது ஏற்புடையதா? என்று யோசியுங்கள்...
சமீபத்தில் எனக்கு தெரிந்த மருத்துவரொருவர் சொன்னார், தன்னிடம் வரும் நோயாளிகளில், முக்கால்வாசி பேருக்கு வாழ்வியல் நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளே பூதாகரமாக வளர்ந்திருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோனோர் இரவு நீண்ட நேரம் கண் விழிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பதாகவும் கூறினார்....
அவர் கூறியதற்கும், நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறைமையையும் ஒப்பிட்டுப் ப்பார்த்தால், அவர்களின் வாழ்க்கை முறைமை முழுவதும் சூரியனோடு பயனித்திருக்கிறது. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அவர்களின் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். மாலையில் சூரியன் மறைந்ததும் வீட்டில் அடங்கிவிடுகின்றனர். இரவு 8-9 மணிக்கு உறங்கிவிடுவார்கள். அன்றைய காலத்தில் மின்விளக்கு இல்லாததால் வேறு வழியில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அன்று இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும், மாரடைப்பும் அவ்வளவாக இருக்கவில்லை என்பது நிதர்சனம்.
காலையில் எழுந்ததிலிருந்து நம்முடைய செயல்பாடுகள் முழுமையான சுறுசுறுப்படைய குறைந்தபட்சம் 2-3 மணிநேரங்கள் ஆகிறது. நம்முடைய வியாபாரம், வேலை, இலட்சியம் என்ற எல்லாமே சமுதாயத்துடனான பயனத்தில்தான் இருக்கிறது. சமுதாயம் காலை 6 மணி முதல் இயங்கத் தொடங்கிவிடுகிறது. அந்நேரத்தில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் எப்படி வெற்றிபெறுவது.
அதிகாலையில் எழுவதால் என்ன பயன் என்று எண்ணற்றவர்கள் முன்னரே பட்டியலிட்டுவிட்டனர். எண்ணற்ற புத்தகங்களும் எழுதப்பட்டு அதிக அளவில் விற்பனையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு சிலவற்றை சுருக்கமாக இங்கு பார்ப்போம்;
அதிகாலையில் உடற்பயிற்சியும், யோகப்பயிற்சியும் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது.
உங்கள் காலை வேலைகளை, காலைக்கடன்களை அவசரமின்று பொறுமையாக செய்யலாம். அவசரப்படுவதும், அதீதமாக கோபப்படுவதும் தான் இரத்தஅழுத்த நோய்க்கான ஆரம்ப காரணி.
காலை நேரத்தில் தொலைபேசி அழைப்பும், சமூக வலைதள உரையாடல்களும் அதிகம் இருக்காது. உங்களை திசைதிருப்பிகள் குறைவாக இருக்கும் போது, உங்களால் உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி மேம்படுத்திக்கொள்ள முடியும்.
உங்களின் திட்டமிடலுக்கு போதிய நேரத்தை காலையில் ஒதுக்க முடியும். உரிய திட்டமிடலுடன் துவக்கினால், அன்றைய தினத்தை அதிக பயனுள்ளதாக்க முடியும்.
எதையும் குறித்த நேரத்தில் ஆரம்பிக்க முடியும். போகவேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் போய் சேர உங்களுக்கு போதிய நேரம் இருக்கும்.
உடல் ஆரோக்கியம், மனநலம், நேரமேலாண்மை, திட்டமிட்டு செயல்படுதல் என்று நிறைய பலன்கள் அதிகாலையில் எழுந்து செயல்படுவதில் கிடைக்கிறது என்று எழுதியுள்ளேன். எல்லோருக்கும் இது எல்லாம் வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. ஆனால் அது ஏன் முடிவதில்லை என்று பார்த்தால், சீக்கிரம் உறங்குவதில்லை என்ற புள்ளியில் வந்து நிற்கிறது. போதிய உறக்கம் இல்லாவிட்டால் காலை எழுவது சாத்தியமில்லை. அப்படியே அவசரத்திற்கு எழுந்தாலும், போதிய சுறுசுறுப்பு இருக்காது. உடல் நலம் பாதிக்கப்படும்.
அதிகாலை எழுந்து உங்கள் பழக்கவழக்கத்தை சீர்படுத்த விரும்பினால், முதலில் சீரான உறக்கத்தை பழக்கப்படுத்த வேண்டும். இரவு 9-10 மணிக்கு உறங்கச் சென்றுவிட்டால், காலை 5 மணிக்கு எழுவது அவ்வளவு கடினமாக இருக்காது. அதைவிடுத்து இரவு 1-2 மணிக்கு தூங்கினால், அதிகாலையில் எழுவது சாத்தியப்படாது.
நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் இரவு 9-10 மணிக்கு உறங்கி அதிகாலை 5 மணிக்கு எழுந்து இயங்கப் பழகுங்கள். தானாகத் தொலைக்காட்சி, கைபேசி போன்றவற்றில் நேரத்தை வீணாக்குவது குறைந்துவிடும். இரவு விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதியை தொலைக்காட்சி முன்னும், கைபேயிலுமே கழிக்கின்றனர். குடும்பமே இப்படி சீரழியக்கூடாதென்றால், சீக்கிரமாக தூங்கப் பழகுங்கள்.
அதிகாலையில் இயங்குவது வெற்றிக்கு முக்கியமென்றால், போதிய உறக்கத்திற்கு சீக்கிரம் தூங்குவது அதிமுக்கியம். இதை அறிவுரைகளில் தெரிந்து கொள்வதைக் காட்டிலும், 6 மாத காலம் முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்றது எது? சிறந்தது எது? என்று நீங்களே உணர்வீர்கள்.
- [ம.சு.கு 22-10-2022]
Comments