“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-12
உங்கள் நேரத்தின் விலை தெரியுமா?
அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து, முறையான உணவுகளை உண்டு, உடலைப் பராமரித்து நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், சீரற்ற வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை தொலைத்து வெகு சீக்கிரத்தில் மருத்துவமனையில் கிடக்கும் நபருக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மணிநேர உடற்பயிற்சியும், உணவில் கவனமும் நம் வாழ்க்கையில் நம்மை எங்கு நிறுத்துகிறது
உங்கள் குடும்பத்தின் பொருளீட்டுபவராக நீங்கள் இருந்தால், காலை முதல் மாலை வரை வேலை, தொழில் பின்னால் ஓடி பொருள் ஈட்டுகிறீர்கள். நீங்கள் ஈட்டிய பொருள் போதவில்லை என்றால் வறுமை தொடர்கிறது. தேவைக்கு அதிகமானால் வாழ்க்கை செழிப்பாகிறது. உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க போதுமான செல்வம் வேண்டுமென்று உழைக்கிறீர்கள். ஆனால் உங்களின் உள்ளம் மகிழ்ந்திருக்கிறதா? உங்களின் நேரப் பயன்பாடு எதை சாதிக்கிறது?
பெரிய நிறுவனங்களின் முதலாளிகளும், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும், ஏன் பல தனிப்பட்ட செயலாளர்களை வைத்துக் கொள்கிறார்கள்?
அரசர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் ஏவலுக்கு வேலை செய்ய ஆயிரம் அடிமைகளை வைத்திருந்தனர். இன்று முதலாளிகளும் அதிகாரிகளும் அப்படி வேலைக்கு ஆள் வைப்பது அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறதா? என்று விவரம் அறியாதவர்கள் கேட்கலாம்.
ஒரு வேலையைச் செய்ய நாம் இன்னொருவரிடம் கொடுக்கிறோம் என்றால் அதற்கான மூன்று முக்கிய காரணங்கள்
அந்த வேலையைச் செய்ய நம்மைவிட அவர் சிறந்த தகுதி உடையவராக இருக்கலாம்;
அந்த வேலையைச் செய்யும் நேரத்தில், அதைவிட முக்கியமானவொன்றை நாம் செய்ய வேண்டியிருக்கும்;
அந்த வேலை அபாயகரமானதாகவோ, நமக்குத் தேவையற்றதாகவோ அல்லது நம் தகுதிக்கு குறைந்ததாகவோ இருக்கலாம்;
இந்த மூன்று காரணங்களுக்கும், அடிப்படையில் பொதுவாக இருப்பது “நேரம்”தான். அந்தக் குறிப்பிட்ட வேலையை செய்ய நாம் ஒதுக்க வேண்டிய நேரமும், அதற்குரிய பலனும் ஏற்புடையதா என்று தான் பார்க்கிறோம். அந்த வேலையில் ஈட்டும் பொருளாகட்டும், அது பெற்றுத்தரும் புகழாகட்டும், அதில் சந்திக்கும் அபாயங்களாகட்டும், நம்முடைய நேரமும் அதற்கு ஈடாய் கிடைக்கும் பலாபலனும் ஒப்பிடும் அளவிற்கு சமமானதாக இருக்கிறதா? என்பதுதான் முக்கியமான கேள்வி.
நீங்கள் செலவிடும் நேரத்திற்கு ஏற்ற பலன் கிடைக்குமா? என்ற கேள்வியை எல்லாவற்றிலும் கேட்டு உரிய பதிலை தேடி பின்னர் இறங்குவீர்களானால், உங்களுக்கு உங்கள் நேரத்தின் மதிப்பு தெரிகிறது.
சும்மா இருக்கிறேன் என்பதற்காக தொலைக்காட்சியில் தேவையற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அதே நேரத்தில் நல்ல புத்தகத்தை வாசிப்பதற்கும் என்ன வேறுபாடு என்று யோசியுங்கள். உங்கள் நேரத்தை எதில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்துத்தான் உங்களின் வாழ்க்கைப் பயனம் செம்மையாகிறது.
யாரேனும் கேட்கிறார்கள் என்பதற்காக, ஒரு தேவையில்லாத செயலை செய்ய ஒத்துக்கொண்டு, பின்னர் அதே நேரத்திற்கு வேறு நல்ல வாய்ப்பு வரும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும். உங்கள் நேரத்தின் மதிப்பை நீங்கள் தான் உணர்ந்து, எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்ற முடிவெடுக்க வேண்டும். அவ்வப்போது தைரியமாக “இல்லை” என்று சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளின் மழலைப் பருவம் 6-7 வருடங்கள் தான். அந்த நேரத்தில் அவர்களோடு நேரம் செலவிட்டு, அவர்களின் மழலை மொழிகளையும், சிரிப்பையும் அனுபவிக்காமல், பணத்தின் பின்னால் ஓடிவிட்டு, அவர்கள் வளர்ந்த பின்னால் அவர்கள் உங்களோடு போதிய நேரம் செலவழிப்பதில்லை என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்.
யதார்த்தத்தில் உங்கள் நேரத்திற்கு எண்ணற்ற மதிப்பு இருக்கிறது. உங்களின் நேரம்தான்
உங்கள் செல்வத்தின் அளவை நிர்ணயிக்கிறது
உங்கள் மகிழ்ச்சியை நிர்ணயிக்கிறது
உங்கள் இலட்சியத்தை / சாதனையை அடைவதை தீர்மாணிக்கிறது
உங்கள் குடும்பத்தின் குதூகலத்தை தீர்மாணிக்கிறது
உங்கள் சமுதாயத்தை செழிப்படைய செய்கிகிறது
இவை ஐந்தும் உங்களின் நேரத்தோடு நேரடித் தொடர்புடையவை. இவற்றுள், எவற்றிற்கு? எந்த அளவு மதிப்பு கொடுத்து? எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள்? என்பதை பொறுத்து, உங்கள் நேரத்தின் மதிப்பு நிர்ணயமாகிறது.
மறந்துவிடாதீர்கள்!
நேரம் என்பது பணம் மட்டுமல்ல;
அதுதான் உங்களின்
மகிழ்ச்சியும்-மனநிறைவும்,
குடும்பத்தின் குதூகலமும்,
மனிதகுலத்தின் மாண்புமாகும்;
இழந்தால் திரும்பப் பெற முடியாத
உயிருக்கு இணையானது நேரம்;
நேரத்தை திறம்பட நிர்வகித்து
வாழ்க்கையை நிர்மானியுங்கள்;
- [ம.சு.கு 21.10.2022]
Comments