“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-9
வயதாகிவிட்டால் சாதிக்க முடியாதா?
முப்பத்தைந்தாண்டு காலம் தொடர்ந்து வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். இப்போது ஓய்வு பெறுகிறேன். என்னிடமுள்ள சொற்ப பணத்தையும், வருகின்ற சிறிய ஓய்வூதியத்தையும் கொண்டு, மீதி காலத்தை ஓட்ட வேண்டும். பகவானே! என்று புலம்புகிறார்களா?
நன்றாக வாழ்ந்தேன். ஏதோ! என் பிள்ளைகள் செய்த தவறால், எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இன்று வயதாகி நிற்கிறேன். இனி என் ஜீவனத்துக்கு என்ன செய்ய? என்று யாரேனும் புலம்புகிறார்களா?
வயதாகி விட்டால், பெரிதாய் ஒன்றும் சாதிக்க முடியாது; புதிதாய் எதையும் ஆரம்பித்து முன்னேற்றம் காண முடியாது; ஏதோ இருப்பதை வைத்துக்கொண்டு, காலத்தைக் கடத்த வேண்டியதுதான் - என்று நானும் ஆரம்பத்தில் நம்பியிருந்தேன்.
“கே.எஃப்.சி” கடை நிறுவனர் “கர்னல் சான்டர்ஸ்” கதை என் எண்ணத்தை மாற்றியது. 70 வயதிலும் வியாபாரத்தைத் துவக்கி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியுமென்று நிரூப்பித்துள்ளார்.
42 கி.மீ மாரத்தான் ஓட்டத்தை, தன் 100-வது வயதில் ஓடிய ஃபவுஜா சிங்கின் சாதனை, “எதுவும் முடியும்” என்று நிரூபிக்கிறது. என் 40-வது வயதில் என்னால் 10 கி.மீ ஓட கஷ்டமாக இருக்கிறது. 100வது வயதிலும் 42 கி.மீ ஓடி சாத்திக்கிறார் அவர்.
வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்;
சாதிப்பதற்கு வயது தடையில்லை;
நம் எண்ணங்களும், நம் நம்பிக்கையுமே
தடையாகவும் இருக்கலாம்;
வெற்றியின் காரணியுமாகலாம்;
முன்னர் படித்த அத்தியாயங்களில் கூறப்பட்ட எண்ணம், நம்பிக்கை இரண்டும் வயது வித்தியாசமின்றி எல்லா நிலைக்கும் பொதுவானது. உங்களுக்கு வயதாகிவிட்டது என்று வருந்தத் தேவையில்லை. நீங்கள் நம்பிக்கை உடையவரானால், புதிய சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
உங்களால் இளைஞர்களுக்கு சமமாக ஓட முடியாமல் போகலாம். ஆனால் அதற்கு ஈடாக, எதை? யாரைக் கொண்டு? எப்படி? செய்து முடிக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு, உங்களை வெற்றியை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
நீங்களே யோசித்துப் பாருங்கள்! வெற்றிக்கான எந்த தகுதியில் வயது ஒரு பொருட்டாக இருக்கிறதென்று?
ஒருவேளை வயதானதால் இந்திய ஆட்சிப் பணித்தேர்வு (I.A.S) எழுத தடையிருக்கலாம். ஆனால் ஆட்சியில் அமர்வதற்கு தடையேதும் இல்லையே.
இளைஞர்களோடு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாவிட்டால், மூத்தோருக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்ற சாதியுங்கள்.
உங்களால் நடக்க முடியாமல் போகலாம். ஆனால் பேச முடியுமல்லவா?
மண்ணில் பிறந்த ஒரு தனிமனிதனுக்கு எத்தனை சிக்கல், எத்தனை இயலாமை ஏற்படக்கூடும்; அந்தத் தடைகளைத் தாண்டி எப்படி உலகையே பிரமிக்க வைக்கும் வகையில் சாதிக்க முடியும் என்று அறிந்து கொள்ள ஆசை இருந்தால், “ஸ்டீபன் ஹாக்கின்ஸ்” பற்றி சற்று தேடிப் படித்துப் பாருங்கள். அவரைப் பற்றி படித்து புரிந்து கொண்டால், நீங்கள் வயதையோ, உடல் குறையையோ, ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள்.
சாதிப்பதற்கு வயது தடையில்லை என்று முதலில் உங்கள் மனம் உணரவேண்டும். 20 வயதிலும் உலகை ஆளலாம், 80 வயதிலும் உலகை ஆளலாம்; தன்னம்பிக்கையும், தைரியமும், நிதானமும், விழிப்புணர்வும், விடாமுயற்சியும் உங்களிடம் இருக்குமானால்.
சாதிக்க முடியும் என்பதற்காக நீங்கள் ஓய்வு பெறும் வயதிலும் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. போதிய பணம் சேர்க்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பதற்கு பதிலாக, வயதானாலும் சாதித்து செல்வம் சேர்க்க முடியும் என்று தெளிவுபடுத்துகிறேன்.
அதற்காக காலத்துக்கு உழைத்துக் கொண்டே இருக்காதீர்கள். பொருட்செல்வம் போதுமான அளவு சேர்த்தால் போதும். சீக்கிரத்தில் அருட்செல்வத்தை நோக்கிய பயணத்தை துவக்குங்கள். மேலும் நீங்கள் சம்பாதிப்பதைத் தாண்டி, உங்களுக்குப் பிடித்தமானதை (இயல், இசை, நாடகம்.....), செய்ய நேரம் ஒதுக்கி, வாழ்வின் சுவையை இரசித்திடுங்கள்.
- [ம.சு.கு 18.10.2022]
Comments