“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-8
அடுத்தவர்கள் முழுவதுமாக சொல்ல வாய்ப்பளியுங்கள்!!
நாம் சிறுவர்களாக இருந்தபொழுது, சிலசமயங்களில் வெளியே விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது “பளார்” என்று நமக்கு அடிவிழும். எதற்கென்று காரணத்தைச் சொல்லாமல் நம் பெற்றோர்கள் இப்படி சிலசமயம் அடிக்கும்போது, நம் அடிமனதில் கூடுதல் பயம் உருவாகம். காரணம் கேட்டாலும் அப்போது சொல்லமாட்டார்கள். நம்மை பேசவும் அனுமதிக்க மாட்டார்கள்;
இணையமும், செயற்கை நுண்ணறிவுத் துறையும் அதீத வளர்ச்சி பெற்றுவிட்ட இன்றைய சூழலில். கணினியில் நீங்கள் ஏதாவது ஒன்றை “கூகுள்” தேடுதளத்தில் தட்டச்சு செய்யத் துவங்கினால், அது உடனே அடுத்த வார்த்தைக்கான பல தேர்வுகளை பக்கத்தில் காட்டும். நீங்கள் முழுமையாக தட்டச்சு செய்வதற்கு முன்னர், அது தானாக பல அனுமானங்களின் அடிப்படையில் இப்படி ஆலோசனைகளை வழங்கும். இந்த தேடுதளத்தின் அனுமான செயல்பாடு, பல சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும். நாம் தேடுவதற்கு முன் நம்மை தேவையின்றி திசைதிருப்பும் வகையில் அந்த அனுமானங்கள் நம்மை சோதிக்கும்;
பல அரசு இயந்திரங்களில், நம்முடைய தரப்பு விடயத்தை எந்த அதிகாரியும் கேட்கமாட்டார்கள். நம் தரப்பு நியாயத்தை கேட்காமல், நம்மை தேவையின்றி குற்றவாளி ஆக்கிவிடுவார்கள். “நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்” என்று நீங்கள் ஆரம்பிக்கும் போதே, “நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று நம் வாயை மூடிவிடுவார்கள். நமக்குச் சொல்ல வாய்ப்பளிக்காமல், அவர்களாகவே அனுமானித்து செய்துவிட்டு, நம்மை தேவையின்றி சிக்கலில் சிக்கவைத்து விடுவார்கள்.
நம்மவர்கள் பலருக்கு அனுமனைப் போல, “கண்டேன் சீதையை” என்று இரத்தினச் சுருக்கமாக சொல்ல தெரியாது. காலையில் எழுந்ததிலிருந்து ஆரம்பிப்பார்கள்! அவர்கள் கதையை கேட்பதற்கு நமக்கு நேரம் இருக்காது. ஆதலால் அவர்கள் சொல்ல வருவதை, முழுவதுமாக கேட்காமல் நாமே அனுமானித்து சென்றுவிடுவோம். அவர்களின் வாக்கியங்களை பல சமயங்களில் நாமே முந்திரிக்கொட்டைபோல் முடித்துவைப்போம்.
நம்மிடம் காரணம் கேட்காமல் அடி விழும்போது நம் மனம் நாம் தவறு செய்யவில்லை என்று சொல்லத் துடிக்கும். ஆனால் மறுபக்கம் வலியின் வேதனையில் அழுவோம். ஏன் என்னிடம் காரணம் கேட்கமாட்டேன் என்கின்றார்கள் என்று வெறுப்பு உருவாகும்.
கூகுள் தளத்தையும் மனைவிமார்களுடன் ஒப்பிட்டு கிண்டல் அடிக்கவும் செய்கிறார்கள். நாம் சொல்ல வருவதை முழுமையாக கேட்காமல், நமக்கு முன்னே அனுமானித்து ஆலோசனை வழங்கும் நபர்களை போல.
அதிகார வர்க்கம் எப்போதுமே மற்றவர்களை பேச விடுவதில்லை. அவர்களுக்கு கீழுள்ளவர்களுக்கு எது கொடுக்க வேண்டுமென்று அவர்களே தீர்மானிக்கிறார்கள். மற்றவர்களின் தேவையறியாமல் அவர்களாகவே அனுமானித்து செய்வதால், பல பொருட்கள் வீணாவதோடு, தேவையின்றி சிக்கலும் ஏற்படுகிறது.
இப்படி முழுமையான காரணம் தெரியாமல், பிறர் சொல்ல வருவதையும் முழுமையாக கேட்காமல், நாமே அனுமானித்துக் கொண்டு இருந்தால், பெரும்பாலும் தவறுகள் நேரவே வாய்ப்பதிகம். அவரவர்கள் அவரவர்களின் கருத்தை முழுமையாக சொல்லட்டும். ஆர்வக்கோளாறால் அவர்களின் வாக்கியத்தை, நீங்கள் பூர்த்தி செய்ய முற்படாதீர்கள் [உங்களால் அவர்களுக்கும் சேர்த்து சிந்திக்க முடியாது].
இறைவன் நமக்கு இரண்டு காதுகளை கொடுத்து, ஒரேயொரு வாயை கொடுத்ததின் நோக்கம், நாம் குறைவாகப் பேசி நிறைய கேட்க வேண்டும் என்பதற்கே.
பொறுமையாக கேளுங்கள். உங்களுக்கு அவர்களின் சிந்தனையிலிருந்து புதிய யோசனைகள் பிறக்கக்கூடும்!
குறுக்க-குறுக்க பேசும் குணம் இருக்கிறதா என்று உங்களை நீங்கள் அவ்வப்போது சுயஅலசல் செய்து, ஏற்ற மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்;
மற்றவர்களின் சிந்தனையையும், அவர்களையும் - கட்டுப்படுத்த நினைக்காதீர்கள்;
உங்களுடைய அனுமானத்தையும், முடிவையும், கூடுமானவரை [அடுத்தவர் முடிக்கும்வரை] தள்ளிப்போடுங்கள்;
அடுத்தவரை மதித்து, அவர் பேசிமுடிப்பதற்கு முழுமையாக வாய்ப்பளித்தால், நீங்கள் சொல்வதை அவர் முழுமையாக கேட்பார்;
யோசித்துப் பாருங்கள்! மற்றவர்கள் உங்களின் பேச்சின் இடையில் குறுக்கிட்டால் எப்படியிருக்கும் என்று? உங்களுக்கு எரிச்சல் வருவது போலத்தானே மற்றவர்களுக்கும் கோபம் வரும். நீங்களே யோசித்துப் பார்த்தால், தானாக மாற்றம் பிறக்கும்;
கேட்பது அதிகமானால், தானாக நாம் பேச வேண்டியது இரத்தின சுருக்கமாகிவிடும். நம் பேச்சு குறைந்து கவனிப்பு அதிகமானால், நம் வாழ்க்கைப் பயனம் சுலபமாகும்;
"எப்போதுமே,
மாற்றம் என்பது,
நம் கையில்தான்."
- [ம.சு.கு 17.10.2022]
Comments