“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-1
நாளைக்கு தேவைப்படாத ஒன்றிற்குஇன்று ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்?
“சில வேலைகளை அவசர-அவசரமாக செய்கிறோம். ஏதோ நாளைக்கே உலகம் அழியப்போவது போல, நாம் அவசரமாக ஓடுகிறோம். நடைமுறையில் நாம் செய்யும் எல்லா வேலைகளிலும் அவ்வளவு அவசரம் தேவையா?”
“வாகனத்தை ஓட்டிக்கொண்டே கைப்பேசியில் குறுந்தகவல்களை படிக்கவும், அனுப்பவும் முயற்சிக்கிறோம். அந்த குறுந்தகவல் படிப்பதும், அனுப்ப வேண்டியதும், உங்கள் உயிரைவிட அவ்வளவு முக்கியமானதா?”
யதார்த்தத்தில், அடுத்த ஆண்டு நாம் இருப்போமா என்பது நிச்சயமில்லை ! ஏன்? நாளை நாம் எழுவதே நிச்சயமில்லை. நாளை என்பது நிச்சயமில்லாத போது, ஏன் இவ்வளவு பரபரப்பு, எதற்காக இத்தனை அவசரம்? வாழ்க்கையை பொறுமையாக அனுபவித்து வாழ வேண்டியது தானே !
நீங்கள் உறவுகளுடன் சில வாக்குவாதங்களில் ஈடுபடலாம்!
உங்கள் அலுவலகத்தில் சில சிக்கல்கள் வரலாம்!
குழந்தைகள் குறும்பு செய்யலாம்!
தலைவலி-காய்ச்சலினால் விடுப்பு எடுக்கலாம்!
ஏதாவது பொருளை உடைத்திருக்கலாம்!
இன்றைய உணவில் உப்பு குறைந்திருக்கலாம்!
இந்த சின்ன விடயங்களை, அப்போதைக்கு பெரிதாக்கி உங்கள் மனஅழுத்தத்தை, இரத்தக்கொதிப்பை அதிகரித்துக் கொள்ள போகிறீர்களா ?
ஒரு நிமிடம் யோசியுங்கள்,
உடைந்த பொருளைப்பற்றி அடுத்தமாதம் யோசிக்க போகிறீர்களா?
குழந்தைகளின் குறும்பு சில வருடங்களுக்குப் பின் உங்களுக்கு வருத்தமளிக்குமா?
இன்று உணவில் உப்பு இல்லாதது, நாளை பாதிக்கப் போகிறதா?
பெரும்பாலும் “இல்லை” என்பதுதானே எல்லாவற்றுக்குமான உங்களின் பதில். பின் எதற்காக மனஅழுத்தத்தை அதிகரித்து, உடலை கெடுத்துக் கொள்ள வேண்டும்? இன்று உங்களுக்கு பிரச்சனையாக இருக்கக்கூடியது, ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடம் கழித்து பிரச்சினையாக இருக்குமா? அல்லது பின்னர் நினைத்தால் சிரிப்புதான் வருமா ?
என்று உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அடுத்த ஆண்டு நினைக்கும்போது, “தேவையில்லாமல் அன்று கஷ்டப்பட்டுவிட்டேன்” என்று நீங்கள் வருத்தப்படுவதானால், அதை இன்றைக்கே யோசித்து தவிர்த்துவிடுங்களேன்.
இன்று நீங்கள் செய்யாவிட்டால் நாளை எது பெரிய தலைவலியாக விடியுமோ?
இன்று செய்யாவிட்டால், எது நாளை சேர்த்து நீங்களே செய்யவேண்டுமோ?
இன்று செய்யாவிட்டால் எது உங்கள் இலட்சியப் பாதையில் முன்னேற தடையாகுமோ?
இன்று செய்யாவிட்டால் எதை நீங்கள் நிரந்தரமாக இழக்க நேரிடுமோ?
அதை அலசி ஆராய்ந்து, இன்று உரிய கவனம் செலுத்தி காரியத்தை முடியுங்கள். இன்று நீங்கள் அலட்டிக் கொள்ளும் ஒன்று அடுத்த ஆண்டு யோசிப்பதற்கே தேவையற்றதாக இருக்குமானால், அதன் பின்னால் ஓடி மனஅழுத்தத்தை அதிகரித்து, நேரத்தை வீணடித்து, ஏன் உடலை வருத்தவேண்டும்.
எப்போதும் அவசர-அவசியங்களை சரிவர ஆராய்ந்து காரியங்களில் ஈடுபட்டால், நிம்மதியாகவும் பயனுள்ளவகையிலும் வாழ்க்கையை வாழமுடியும்.
- [ம.சு.கு - 09.10.2022]
Comments