“வாழ்க்கை என்னும் கடலிலே
ஆனந்தமாய் மூழ்கி முத்தெடுக்க
எல்லோருக்கும் ஆசை - ஆனால்
அதில் நீந்தத்தெரியாமல்
தினம்தினம்
மூழ்கி சாகின்றவர்கள் தான் ஏராளம்!”
நம்மவர்களின் தற்போதைய நிலை
வெகுசிலருக்கு, வாழ்வில் வெற்றிபெற்று வளமாய் வாழ, என்ன செய்யவேண்டும் ? எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் ? என்பது நன்றாக தெரிகிறது. அவற்றை அவ்வண்ணமே செய்து வாழ்வை வளமாக்கிக் கொள்கிறார்கள் !
ஒருசிலருக்கு, என்ன? எப்படி? எப்பொழுது? என்பது நன்கு தெரிந்திருந்தாலும், தங்களுடைய இயல்பான சோம்பேறித்தனத்தால், அவற்றை சரியான நேரத்தில், சரிவர செய்யாமல் வாய்ப்புகளை தவறவிட்டு முன்னேற்றத்தை இழக்கிறார்கள்.
ஒருசிலருக்கு, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருக்கிறது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அவர்களுக்கு தெரிவதில்லை. அதைச் சொல்லிக் கொடுக்கவும் எந்த ஒரு வழிகாட்டியும் அவர்களுக்கு இருப்பதில்லை. வாழ்வில் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல், தெரிந்ததை மட்டுமே தொடர்ந்து செய்து காலம் கடத்துகிறார்கள்.
பலருக்கு, தானும் மற்றவர்களைப் போல வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது. ஆனால், அதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்க அவர்கள் தயாராக இல்லை. எல்லாம் அதிர்ஷ்டத்தில் அதுவாகவே தனக்கு வர வேண்டுமென்று காலம் கடத்தும் வேடிக்கை மனிதர்கள் இவர்கள்.
நாம் கவனிக்க வேண்டியவை
இப்படி வேறுபட்ட மனிதர்கள் வாழும் இந்த சமுதாயத்தில், மாற்றத்தை ஏற்படுத்தி, நம் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான படிப்பினைகள் சில:
எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் !
அவசியமற்ற சின்ன விடயங்களில் காலத்தை வீணடிக்காமல், இலக்குகளை நோக்கிய செயல்பாடு முற்றிலும் ஒருமுகப்படுத்தப்படவேண்டும்.
எல்லா இலக்குகளுக்குமுரிய “திட்டமிடல் – செயல்பாடு – பரிசீலனை – திருத்தம்”, என்பது தொடர்ந்து நடைபெற வேண்டும்.
அன்றாட அனுபவமே வாழ்கையின் சிறந்த ஆசான்
அன்றாடம் எனது செயல்களை, எனது நேரப் பயன்பாட்டை நான் ஆராய்ந்து பார்க்கிறேன். என் சுய அலசலோடு என்னை சுற்றியுள்ளவர்களின் செயல்களையும், அதன் தாக்கத்தையும் அலசிப் பார்க்கிறேன். என் அன்றாட செயல்கள் எண்ணவற்றவற்றில், வெற்றி-தோல்விகளை மாறிமாறி சந்திக்கிறேன். என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் அவ்வண்ணமே நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஏற்படுகின்ற புதிய அனுபவங்களைத் தொடர்ந்து, வெற்றி-தோல்வி குறித்து மாறுபட்ட சிந்தனைகளும், புதிய படிப்பினைகளும் தினம்தினம் நமக்கு கிடைக்கிறது. என் பயனத்தில், நான் கற்றுணர்ந்த, அனுபவத்தில் செயல்படுத்துகின்ற சில வாழ்வியல் பாடங்களை உங்களுடன் ஒரு தொடராக பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதற்காக இந்த “சிறிய மீன்கள் - கவனச் சிதறல்களா?” என்ற கட்டுரைத் தொடர்.
என் அனுபவப் பகிரல்கள்
இந்தத் தொடரில், நம் இலக்குகளை நோக்கிய பயனப்பாதையில் வருகின்ற எண்ணற்ற சிறிய தடைகள், கவனச் சிதறல்கள்கள், தவறான கண்ணோட்டங்கள், பழக்கவழக்கங்கள், குறித்து ஒன்று இரண்டு பக்க கட்டுரைகளாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்டு சொல்வதானால்:
நம் நேரத்தை எங்கே வீணடிக்கிறோம்?
நாம் எந்த விடயங்களை கவனிக்கத் தவறுகிறோம்?
நம்முடைய தவறான கண்ணோட்டங்கள் என்ன?
நம்முடைய பழக்கவழக்கங்களில் எங்கே கோட்டைவிடுகிறோம்?
என்ற எண்ணற்ற கேள்விகளுக்கான விடைதேடலாய் இந்தத் தொடரை நான் எழுதுகிறேன். இவை முற்றிலும் என் அனுபவம் சார்ந்த புரிதல்கள்.
இது கண்டுபிடிப்பல்ல – பலரின் அனுபவமொழிகளின் தொகுப்பே
இங்கு எழுதப்படுபவை எதுவுமே புதிய கண்டுபிடிப்புக்கள் அல்ல. எண்ணற்ற வெற்றியாளர்கள், அறிஞர்களின் பல முயற்சிகள், ஆராய்ச்சிகளை தொடர்ந்து, தங்கள் படிப்பினைகளாக அவர்கள் நமக்கு பகிர்ந்துகொண்ட சில விடயங்களின் தொகுப்பாகவே இந்த தொடர் இருக்கும். நான் பகிர்ந்து கொள்ளப்போகும் பல விடயங்களை, நீங்கள வெவ்வேறு பழமொழிகளாகவோ, கதைகளாகவோ, கட்டுரைகளாகவோ பல அறிஞர்களின் உரைகளில், நூல்களில் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம்.
வெற்றிக்கான வழிகாட்டியாக எண்ணற்ற நூல்கள் தமிழ் மொழியில் இருந்தாலும், என் சமுதாயம், என் மக்கள் விழிப்படைய நானும் எனது பங்காக என் முயற்சிகளை இந்த கட்டுரைத் தொடரின் மூலமாக மேற்கொள்கிறேன்.
விழிப்படைய முயற்சிப்போம்
நாம் விழித்துக் கொண்டால், உலகம் எளிதில் நம் கைவசப்படும். அந்த விழிப்பிற்கு, இன்றை காலகட்டத்தில் நீங்கள் எண்ணற்றவற்றை தெரிந்துகொள்ளவேண்டும். “மாற்றம் மட்டுமே நிரந்தரம்” என்ற யதார்த்தத்தில், நீங்கள் வெற்றியாளராக வலம்வர விரும்பினால், அந்த மாற்றத்தைக் காட்டிலும் வேகமாக உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொண்டு சவால்களை சந்திக்க வேண்டும்.
நம் இலட்சியப்பாதையில், எண்ணற்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியல், இது ஒரு ஆரம்பம் தான். என் முயற்சியில், எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சில பேரறிஞர்களின் அனுபவ மொழிகள்;
“ஊக்கமது கைவிடேல்”
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” – 619“
“மயிரைக் கட்டி மலையை இழுப்போம்;
வந்தால் மலை, போனால் மயிர்”
ஆங்கில மொழிகள் சில
"The more we sweat in peace, the less we bleed in war”
“Don’t Sweat the small Stuff”
“All people are the same; Only their habits differ”
வரும் நாட்களில் நம்மை நாமே அலசுவோம்!
வெற்றி-தோல்வி குறித்த நம் கண்ணோட்டங்களை சீரமைப்போம்!
என்னோடு இந்த பயணத்திற்கு நீங்களும் தயாரா?
- [ம.சு.கு 08.10.2022]
Comments