top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : என்றுமே மாணவனாகவே பயணம் செய்யுங்கள்

"கற்றது கையளவு; கல்லாதது உலகளவு"


இந்தப் பொன்மொழியை வாழ்வில் கேட்காதவர் யாருமில்லை. ஆனால் அதை எல்லா நேரங்களிலும் நினைவு வைத்துக்கொண்டு, கர்வமில்லாமல், எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலுமிருந்து கற்பதற்கு தயாராய் வெகுசிலரே இருக்கின்றனர். தான் கற்ற கல்வி, பெற்ற செல்வம் கொண்டு, பகட்டாகவும் அகங்காரத்தோடும் திரிபவர்கள் தான் இன்றைய அவசரவுலகில் மிக அதிகம்.


கற்பதற்கு என்ன இருக்கிறது?


  • நான் பட்டப்படிப்பு முடித்து சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியனாக எனக்கு போதிய வருவாய் வருகிறது. சிறுவர்களுக்கு பாடம் நடத்த போதியவற்றை கற்றுள்ளேன். இதற்குமேல் எனக்கு கற்பதற்கு என்ன இருக்கிறது?

  • நான் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றுகிறேன். மேலாண்மையில் முப்பது ஆண்டுகளாய் எல்லாவற்றையும் கற்று படிப்படியாய் உயர்ந்து, இன்று இந்த பதவிக்கு வந்துள்ளேன். எல்லவாவற்றையும் தாண்டிவந்துள்ள எனக்கு, இனி கற்பதற்கு என்ன இருக்கிறது?

  • மருத்துவத்துறையில் மிக உயர்ந்த படிப்புகளை படித்து, பல்லாயிரம் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து அனுபவப்பட்டுள்ளேன். மருத்துவத்தில் எல்லாவற்றையும் படித்துவிட்ட எனக்கு, இனி கற்பதற்கு என்ன இருக்கிறது?

  • என் தந்தை மளிகை கடை வைத்துள்ளார். நான் படித்தாலும்-படிக்காவிட்டாலும், எனக்கு தொழில் தயாராக இருக்கிறது. நான் படித்து என்ன செய்யப் போகிறேன்?

  • எனக்கு திருமணமாகி, என் குழந்தைகள் படிக்கிறார்கள், ஒரு குடும்பத்தலைவியாக, என் பணி வீட்டை கவனிப்பது மட்டுமே. நான் இனி கற்று என்ன செய்யப்போகிறேன்?

  • எனக்கு அரசாங்க வேலையும், கைநிறைய ஊதியமும் வருகிறது. கடைசிவரை ஓய்வூதியம் வரும். இனி நான் கற்று என்ன செய்யப் போகிறேன்?

இப்படியே நான் இனி கற்று என்ன செய்யப் போகிறேன்? நான் படிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? என்று பல லட்சம் பேர் பல்வேறு காரணங்களை கூறி கற்பதை தவிர்க்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு பணியில் அமர்ந்து ஊதியம் வர ஆரம்பித்துவிட்டால், இனி கற்பதற்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமா? கையிலிருக்கும் பணி நிரந்தரமாய் இருக்குமா? வருகின்ற வருவாய் நிரந்தரமா? வருவது காலத்திற்கும் போதுமானதாக இருக்குமா?


“உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை” என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் தன்னைச் சுற்றியவைகள் யாவும், தனக்கு மட்டும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?


கற்பதற்கு என்ன இல்லை?


பள்ளி ஆசிரியராக

ஒரு தொடக்கக்பள்ளி ஆசிரியராக, அடிப்படை பாடத்தை நடத்துவதோடு உங்கள் பணி முடிவதில்லை. உண்மையில் நீங்கள்தான் குழந்தைகளின் கல்விக்கு பிள்ளையார் சுழி. குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தை தூண்டும் வண்ணம், அன்றைய கால நடைமுறைக்கு ஏற்ற புதிய முறைகளில், உதாரணங்களுடன் ஒப்பிட்டு கற்றுக் கொடுத்தால் அவர்கள் எளிதில் கற்பார்கள். தன்னை புதுப்பித்துக் கொள்ளாமல், பழைய முறையையே பற்றிக் கொண்டிருந்தாள், குழந்தைகளுக்கு சீக்கிரத்தில் சலிப்பு வந்துவிடும். மேலும், காலத்திற்கும் நீங்கள் அந்த தொடக்கப் பள்ளியிலேயே இருக்க வேண்டியதுதான். அடுத்தடுத்து படித்து வந்தால் தான் மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழகம் என்று அடுத்த நிலை மாணவர்களுக்கு பாடம் சொல்ல வாய்ப்பு கிடைக்கும்.


நிறுவன மேலதிகாரியாக

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியில் அமர்ந்தால், நீங்கள் சொல்வதைக் கேட்டுச்செய்ய எல்லோரும் தயாராக இருப்பார்கள். நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு சந்தை நிலவரம் குறித்த சரியான தகவல்கள் முறையாக வந்து சேராதநிலையில், நீங்கள் பொருட்களில் மாற்றங்கள் ஏற்படுத்த முனைந்தால், அதுசரியாக இருக்குமா? மற்ற ஊழியர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல், சர்வாதிகாரமுறையில் முடிவு எடுத்து செயல்படுத்தினால் சந்தையின் மாற்றங்களால் பெரிய இழப்பு நேரலாம் அல்லவா?


எந்தப் பொருளும் நிரந்தரமில்லை!

எந்த வியாபாரம் முறையும், சேவையும் நிரந்தரமில்லை!

காலப்போக்கில் எல்லாம் மாறிவிடும்!


அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடுமென்பதை, ஒரு நல்ல நிர்வாகி முன்கூட்டியே கணிக்க வேண்டும். புதியவைகளை படிப்பதன் மூலமும், தொடர்ந்து சந்தை நிலவரத்தை அறிந்து வைப்பதன் மூலமும், போட்டியாளர்களின் யூகங்களை அலசுவதன் மூலமும், தன் நிறுவனத்தை சரியாக வழிநடத்த ஏற்ற முடிவுகளை எடுக்க முடியும். கற்பதற்கான ஜன்னலை மூடினால், சரிவுக்கான பாதாளவாயில் தானாக திறந்துவிடும்!


மருத்துவராக

ஒரு மருத்துவர் எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பேருக்கு வைத்தியம் பார்த்திருந்தாலும், அன்றாடம் புதியவைகளைபற்றி அறிந்துகொள்வதை தவிர்த்தால், காலப்போக்கில் அவர் பயன்ற்றவராகிவிடுவார். இன்றைய அவசரவுலகில் வெறும் இயந்திரங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்படுவதில்லை. அவற்றைத்தாண்டி புதிதுபுதிதாக கிருமிகளும், நோய்களும் உருவாக்கப்படுகின்றன. காலச் சூழ்நிலை மாற்றங்களையும், உணவு மாற்றங்களையும், புதிய கிருமிகள் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொள்ளாவிட்டால், அந்த மருத்துவர் சீக்கிரத்தில் தேவையற்றவராகிவிடுவார்.


சிறுதொழில் முனைவோராக

தனக்கு தொழில் ஒன்று தயாராக இருக்கிறதென்று கற்பதைத் தவிர்த்தால், கடையில் கூட்டல் கணக்கை கூட போடமுடியாமல் திணர வேண்டியதுதான். பழைய மளிகைக் கடை வியாபார முறைகள் இன்று நிறைய மாறிவிட்டன. பொருட்களை கடைக்காரர் எடுத்துக்கொடுத்த முறைமாறி, வாடிக்கையாளரே தேடிப்பார்த்து பொறுமையாக எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். புதிய முறைகள், புதிய பொருட்கள், வாடிக்கையாளர்களின் தேவைகள் பற்றிய அறிவை தொடர்ந்து வளர்க்க தவறினால், வியாபாரமும் வருமானம் காலப்போக்கில் குன்றிவிடும். அப்போதைக்கு வருவாய்க்கு வழியிருந்தாலும், கற்பதைத் தவிர்த்து விடாதீர்கள். ஏனெனில், இன்றிருப்பது நாளை நிரந்தரமென்று உறுதிபட சொல்ல முடியாது.


குடும்பத்தலைவியாக

திருமணமான பெண்கள் குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலைகள் என்று அன்றாடம் செய்பவைகளையே திரும்பச் செய்வதால், சீக்கிரத்திலேயே வாழ்க்கையின்மீது சலிப்படைந்து விடுகின்றனர். வேலை தவிர்த்து மீதமுள்ள நேரத்தை, பயனற்ற தொடர்நாடகங்களை கண்டு நேரத்தை கழிக்கின்றனர். உண்மையில், மாயாப்பெட்டியின் முன்னமர்ந்து பயனற்ற நாடகங்களை கண்டு கழிக்கும் நேரம்யாவும் வீணானது என்பது அவர்களுக்கு புரிவதில்லை. பல சான்றோர்கள் அதை வெவ்வேறு விதங்களில் சுட்டிக்காட்டினாலும், பெண்கள் ஏனோ அதைகுறித்து சிந்திப்பதை தவிர்த்துவிடுகின்றனர். அந்த வீணடிக்கும் நேரத்தை நல்ல புத்தகங்களை வாசிக்க பயன்படுத்திப்பாருங்கள், வாழ்க்கையின் மீது அவர்களுக்கே ஆசை பிறக்கும். விறையாடும் குழந்தைகளுக்குத்தான் கற்பது சலிப்பாகத் தோன்றும். உண்மையில் நூல் வாசிப்பைவிட சிறந்த மனநிறைவளிக்கும் பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. குடும்பத்தலைவிகள் வாசிப்பைத்துவக்கிவிட்டால், வீட்டுகளில் நிலவும் சிறுசிறு மாமியார்-மருமகள் பிரச்சனைகளும், சின்னச்சின்ன மனஸ்தாபங்களும் தானாகவே குறைந்துவிடும்.


பணியாளனாக

அரசாங்க வேலையும், நல்ல ஊதியமும் கிடைத்தபின்னர், வாசிப்பை நிறுத்தினால் முன்னேறும் வாய்ப்பு குறைந்துவிடும். எந்தப் பணியில், எந்தப்பதவியில் சேர்ந்தோமோ, அந்தப்பணியில் எந்தவொரு முன்னேற்றமுமின்றி கடைசிவரை அதே பதவியில் இருந்து ஓய்வு பெற நேரும். சில தருணங்களில் கணினிமயமாக்கல் போன்ற புதிய பெரும் மாற்றங்கள், உங்களைத் தேவையற்றவராக்கிவிடக்கூடும்.


எல்லோருக்குமாக

மாறும் உலகில், மாறி வரும் எல்லாவற்றையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக புதியவைகளில் நீங்கள் நிபுனத்துவம் பெறவேண்டுமென்றில்லை. மாற்றங்களைப் பற்றிய அறிவும், அன்றாட வாழ்வில் அதன் தாக்கம்குறித்த புரிதலும் எவ்வளவுக்கெவ்வளவு நாம் சீக்கிரமாக பெறுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்மால் சமுதாயத்தில் எளிதாக பயனிக்கமுடியும்.


உத: மென்பொருள் துறையில் பணிபுரிபவர், அத்துறையில் தொடர்ந்து வரும் புதியமென்பொருள் குறித்து அறிந்துகொள்ளாவிட்டால், அந்தத்துறையில் சீக்கிரமாகவே ஓரங்கட்டப்படுவார்.


புதிய கைப்பேசி செயலிகளை பயன்படுத்த கற்றுக் கொள்ளாவிட்டால், இன்றையதினம் உலகத்தோடு தொடர்பிலிருப்பதே கடினமாகிவிடும். வாய்மொழியாக இருந்தவை தொலைபேசியானது. இன்று தொலைபேசி “வாட்ஸப்” “ட்விட்டர்” என்று மாறிவிட்டது. இன்று சில தாத்தா-பாட்டிக்கள் அந்த செயலிகளில் அசத்துவதைப்பார்த்தால், பிரமிப்பாய் இருக்கிறது.


மாற்றங்களுக்கு தயாராக படிக்கவேண்டும்


காலம் மாறினாலும் அடிப்படைகள் மாறுவதில்லை. ஆனால் அவற்றை செய்யும் விதமும், வேகமும் மாறிவிடுகின்றன. இன்று சாதாரண வேலைகள் பலவற்றை, இயந்திரங்கள் செய்து விடுகிறது. ஆனால் அந்த இயந்திரங்களை இயக்கும் கணினியை இயக்க நாம் கற்றாக வேண்டியுள்ளது.


என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன

என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்

என்னென்ன மாற்றங்கள் நம்மை பாதிக்கும்

என்னென்ன மாற்றங்கள் நம்மை கடந்து போகும்

இந்த எல்லா “என்னென்னவைகளையும்’

தொடர்ந்து படித்து வந்தால் தான்

சந்தையில் தாக்குப் பிடித்து நிற்க முடியும்.


எல்லாவற்றையும் தொடர்ந்து படிக்க

நீங்கள் மாணவனாக உணர்ந்தால் மட்டுமே முடியும்

சாகும் வரை நீங்கள் ஒரு மாணவரென்பதை

என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்;


- [ம.சு.கு - 22.06.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page